Ad

திங்கள், 1 மார்ச், 2021

பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! -யார் இந்த பி.கே? விரிவான தகவல்கள் #3MinsRead

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றி பெற திட்டம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரிடம், 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யத் தேவையான திட்டங்களை முன்னெடுக்கும் பணியை அளித்தார் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்.

பிரசாந்த் கிஷோர்

அப்போது அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தி.மு.க போன்ற இயக்கத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வழிநடத்தி செல்வதா? என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

சரி யாரி இந்த பிரசாந்த் கிஷோர்?

பிரசாந்த் கிஷோர் பின்னணி:

பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் பூர்வீகம் பீகார் மாநிலம். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார். அந்தத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்தில் இவர் பங்கெடுக்க ஆரம்பித்தார். ஆப்பிரிக்கா நாடுகளில் ஐ.நா பல சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. அந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் நபர்களில் கிஷோரும் ஒருவராகச் செயல்பட்டு வந்தார். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. அரசியல் ஆசை கிஷோருக்கு நீண்ட நாள்களாகவே இருக்க, அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர்

அரசியலில் பிரசாந்த் என்ட்ரியாக மறைமுகமாக ராகுல் காந்தியும் உதவினார் என்பதுதான் வேடிக்கை. ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அரசு மருத்துமவனை ஒன்றைக் கட்டினார். அந்த மருத்துமனைப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மருத்துவமனைச் செயல்பாட்டைப் பார்த்துக்கொள்ளவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்படுகிறார் கிஷோர். ஐ.நாவிலிருந்து அமேதிக்குள் என்ட்ரியானார் கிஷோர். ஒருகட்டத்தில் ராகுலுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறிய கிஷோர், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். ராகுலிடம் பணியாற்றியவன் என்ற அடிப்படையிலே மோடியின் சந்திப்பை நடத்துகிறார் கிஷோர். அப்போதுதான் வெளிநாடுகளில் தேர்தல் யுக்திக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் பணிகளைப் பற்றி மோடிக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். அது மோடி பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட நேரம்.

மோடியை வழிநடத்திய அனுபவம்

மோடி இந்தவிவரங்களை பி.ஜே.பி தலைமைக்கு எடுத்துச் சொல்ல, உடனடியாக தலைமையும் இந்த ஐடியாவுக்கு ஓ.கே சொல்லியது. அப்போது அமைக்கப்பட்ட நிறுவனம்தான் சி.ஏ.ஜி. இந்த நிறுவனத்தின் இயக்குநராக பிரசாந்த் கிஷோரும் இணை இயக்குநராக இதே தி.மு.கவுக்குப் பணியாற்றிய ஓ.எம்.ஜி குழுவின் தலைவர் சுனிலும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் படையும் உருவாக்கப்பட்டது. மோடியின் விளம்பரம் முதல் அவர் அணியும் உடை வரை அனைத்தையும் செயல்திட்டப்படுத்தியது இந்த சி.ஏ.ஜி நிறுவனம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றால் தனக்கு பிரதமர் அலுவலகத்திலே ஓரு பதவியைப் பெற்றுவிடும் திட்டத்திலிருந்தார் கிஷோர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி, சி.ஏ.ஜி-யிடம் தேர்தல் செலவுகள் குறித்து கணக்கு கேட்டது. அப்போது பி.ஜே.பி-யின் பொருளாளராக இருந்த பியூஷ் கோயல், பிரசாந்த் கிஷோரிடம் கணக்கு கேட்க, சரியான கணக்கு கொடுக்கமுடியாமல் திணறியிருக்கிறார் கிஷோர். இதனால் பி.ஜே.பி இவரை கழற்றி விட முடிவு செய்தது.

பிரதமர் நரேந்திர மோடி

பி.ஜே.பியிலிருந்து கிஷோர் வெளியானதும் பி.ஜே.பியை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோள் என்று வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தார். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ஐபேக். இந்த நிறுவனத்தின் பெயரில் 2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றத் தொடங்கினார். பி.ஜே.பி-யிடமிருந்து நிதிஷ் குமார் பிரிந்து தேர்தலைச் சந்தித்த நேரம் அது. அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற கிஷோரின் மாஸ்டர் பிளானால் கிடைத்த வெற்றி என்று செய்திகள் காட்டுத்தீயாய்ப் பரவியது. அகில இந்திய அளவில் கிஷோரின் பெயர் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் துணைத் தலைவர் பதவியும் கிஷோருக்குத் தேடி வந்தது.

காங்கிரஸூக்கு உதவி

ராகுல் காந்தி

அதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தில் பி.ஜே.பியை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாகப் பணியாற்றினார் கிஷோர். ஆனால், அந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யே வெற்றி பெற்றது. ஆனால் அதிகாரபூர்வமாக கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்யாததால், அவர் பெயர் இந்தத் தோல்வியில் பெரிதாக அடிபடவில்லை. அதற்குப் பிறகு உத்தரப்பிரதேச தேர்தலில் கால் வைத்தார். காங்கிரஸ்-அகிலேஷ் கூட்டணி பி.ஜே.பி-யை எதிர்த்து களத்தில் நின்றது. அகிலேஷ் அழைப்பில் அங்கு பணியாற்றச் சென்றார். ஆனால், அவரது யுக்தி உத்தரபிரதேசத் தேர்தலில் எடுபடவில்லை. அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்து. ஆனால், கிஷோர் பெயர் அதில் பெரிதாக அடிபடாமல் போனது. அதுதான் அவரது மார்க்கெட் யுக்தி. வெற்றி பெற்றால் அதற்கு தானே காரணம் என்பதை வெளியே மார்க்கெட் செய்யும் கிஷோர், தோல்வியடைந்தால் சத்திமில்லாமல் அமுங்கிவிடுவார்.

தொடர் வெற்றி

அதே நேரம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அம்ரிந்தர் சிங்குக்குப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற மீண்டும் கிஷோர் கிராப் உச்சத்துக்குச் சென்றது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிஷோருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிஷோர் மீது ராகுலுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதால், அவரை அழைப்பதில் ராகுல் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முன்பே ஆந்திராவிற்கு என்ட்ரி கொடுத்துவிட்டார் கிஷோர். ஜெகன்மோகன் ரெட்டிக்குத் தேர்தல் பணியாற்ற பெரும் தொகையுடன் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இந்தமுறையும் கிஷோருக்கு ஜாக்பாட் அடித்தது. ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றார் ஜெகன். அந்தத் தேர்தல் முடிந்த கையோடு மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் போட்டார். அங்கும் ஐபேக் நிறுவனம் பணியாற்றிவருகிறது. அதன் பின் தி்.மு.கவுடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறது ஐபேக் நிறுவனம்.

இதுதான் ஊதியமா?

Prasanth Kishore

தற்போது தமிழகத்தில் தி.மு.க வுக்குப் பணியாற்ற மாதம் 15 கோடி ரூபாய் ஊதியமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/prashant-kishor-has-made-as-punjab-cms-principal-advisor-who-is-this-pk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக