தீபாவளி நேரத்தில் ஸ்வீட் விற்பனை ஜரூராக நடந்துவருகிறது. இந்தநேரத்தில், இந்தியா முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருள்களான பால்கோவா, சோன்பப்டி உள்ளிட்ட மில்க் ஸ்வீட்கள் விற்கப்படும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக நுழைந்து சாம்பிள் எடுத்துவருகிறார்கள். இதற்கான உத்தரவை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை பிறப்பித்திருக்கிறதாம். அதையடுத்து, மாநில அரசு அதிகாரிகள் நேற்றும் (நவம்பர் 12) இன்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிரடி ரெய்டு நடத்திவருகிறார்கள். இந்த இரண்டு நாள்களில் எடுக்கப்படும் சாம்பிள் டெஸ்ட்டிங் மற்றும் அது தொடர்பான நிர்வாகச் செலவுகளை மத்திய அரசே ஏற்கிறதாம். கடந்த சில வருடங்களாகவே, பண்டிகை நேரங்களில் இப்படிப் பால் ரெய்டு நடந்தப்பட்டுவருகிறதாம்.
இந்த ரெய்டு விவகாரம், சிறிய லெவலில் ஸ்வீட் கடை நடத்துகிறவர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. சென்னை புரசைவாக்கத்தில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர், ``இதெல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்தும் சதிவேலை. பாரம்பர்ய மில்க் ஸ்வீட் விற்பனையை ஒழித்துக்கட்டவே பண்டிகைக் காலத்தில் மட்டும் இப்படி நடத்துகிறார்கள். மில்க் ஸ்வீட்டை சாமிக்குப் படையல் போட்டுச் சாப்பிடுவார்கள். அதைவிட்டுவிட்டு, சாக்லேட்டையா படையல் போட முடியும்? சாதாரண காலத்தில் இப்படியெல்லாம் ரெய்டு செய்வதில்லை. இதனால், பாதிக்கப்படுபவர்கள் சாதாரண ஸ்வீட் கடை நடத்துகிறவர்கள்தான் ' என்கிறார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கூறும்போது, ``என்னைப் பொறுத்தவரையில் அதிக அளவில் பால், பால் தொடர்பான பொருள்கள் விற்பனையாகும் பண்டிகைக் காலத்தில் கலப்படங்கள் அதிகம் உலாவருகின்றன. எனவே, இந்த நேரத்தில், ரெய்டுகள் நடத்துவதில் தவறில்லை. பாலில் தரம்குறைந்தவை, கலப்படப் பால் என இரண்டு வகை உண்டு.
இரண்டுமே தவறுதான். இருந்தாலும், பாலில் கலப்படம் செய்வதால், மனிதர்களுக்கு பாதிப்பு அதிகம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விநியோகிக்கப்படும் பால் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. அதேநேரம், வட மாநிலங்களிலிருந்து வரும் பால், பட்டர், நெய் உள்ளிட்ட பல பொருள்களில் கலப்படம் அதிகம். குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்குக் கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்கத் தூண்டுகிறார்கள். சிந்தெட்டிக் பால்கூட வடமாநிலங்களில் பிடிபட்டிருக்கின்றன. அது மாதிரி சட்டவிரோத பால் பொருள்களை விற்பவர்களை பண்டிகைக் காலத்தில்தான் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்க முடியும். எனவே, இந்த நேரத்து ரெய்டை நான் வரவேற்கிறேன்'' என்கிறார்.
Also Read: புதுச்சேரி: `கடும் நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு இலவச பால், நெய்!’ - பாண்லே சர்ச்சை
source https://www.vikatan.com/government-and-politics/food/reason-behind-milk-raid-during-festival-season
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக