Ad

வியாழன், 12 நவம்பர், 2020

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை... ஆனால்?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. சூரபத்மன் என்ற ’ஆணவம்’, சிங்கமுகன் எனும் ’கண்மம்’, தாரகாசூரன் என்ற ’மாயை’ ஆகிய மும்மலங்களால் ஏற்படும் ஏற்படும் தீமையை ஒழிக்கவே ‘ஞானம்’ என்ற முருகப் பெருமான் தோன்றி, போரிட்டு வெல்கிறார். இந்த வெற்றி வீர சம்பவம்தான் கந்த சஷ்டி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

சூரசம்ஹாரம்

தமிழகத்தின் பல முருகன் தலங்களில் சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமான திருச்செந்தூரில் நடைபெறுவது சிறப்பாகும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்தசஷ்டி திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

கந்தசஷ்டி திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கூறுகையில், ”திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறும். இதில், 6-ம் நாளான 20-ம் தேதி, மாலை 4.05 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி, 7-ம் நாளான 21-ம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வழக்கமாக திருக்கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, இந்தாண்டு, கோயில் பிரகாரத்தில் நடைபெறும்.

சுவாமி ஜெயந்திநாதர்

இந்த நிகழ்ச்சியிலும், திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி, உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா அனைத்து நிகழ்வுகளும் திருக்கோவில் பிரகாரத்திற்குள் நடைபெறும். கோயில் வளாகம், கோயில் விடுதிகள், மடங்கள், மண்டபங்கள், தனியார் விடுதிகளில் தங்கி விரதம் கடைபிடிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவிகிதம் ஆன்லைன் பதிவு செய்த பக்தர்கள், 50 சதவிகிதம் நேரில் வரும் பக்தர்களும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும்.

சூரசம்ஹாரம்

கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தற்காலிக கொட்டகைகளில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, பின்னர் வரிசையாக தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கடலில் நீராடவோ, கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரட்சணம் செய்திடவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் திருவீதியுலா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. உபயதாரர்கள், தனி அமைப்புகள், பஜனைக்குழுவினர், பாதயாத்திரைக்குழுவினர்களால் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் பார்சல்களாக வழங்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/spiritual/functions/devotees-are-not-allowed-to-perform-tiruchendur-kanda-sashti-surasamaharam-festival-says-by-collector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக