Ad

வியாழன், 12 நவம்பர், 2020

பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?

.நவம்பர் 11-ம் தேதி, காலை 4 மணி... கடந்த மூன்று ஆண்டுகளாக பீகாரின் துணை முதல்வராக இருந்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுஷில் மோடியின் வீட்டுக்கு ஓர் அழைப்பு வருகிறது. `ஹும் லோக் ஆ கயே ஹைன்' என்கிற வார்த்தைகள் தொலைபேசி வழியாக வந்து விழுகின்றன. அந்த வார்த்தைகளை உச்சரித்தவர், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் `நாம் வந்துவிட்டோம்.' அதாவது, `நாம் வென்றுவிட்டோம்' என்ற பொருள்படும்படியானது.

நிதிஷ் குமார், பீகார்

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நவம்பர் 10-ம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இறுதி முடிவுகள் நவம்பர் 11 அதிகாலை 4 மணிக்குத்தான் வெளியாகின. வாக்கு எண்ணிக்கை, பீகாரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பரபரப்பாக நடைபெற்றது. மூன்று முறை முதல்வராக பீகாரை ஆட்சிசெய்த நிதிஷ் குமாருக்கே பதற்றத்தை உண்டாக்கியது. அந்தப் பதற்றம் தணிந்ததன் வெளிப்பாடுதான் `நாம் வந்துவிட்டோம்' என்ற வார்த்தைகள். ஏன் இவ்வளவு பதற்றம் என்று தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், நமக்குச் சில தகவல்கள் கிடைத்தன.

பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன என்பதை முதலில் பார்க்கலாம்.

மோடி - நிதிஷ் குமார்
பா.ஜ.க - 74 இடங்கள், 82,01,298 வாக்குகள்
ஐக்கிய ஜனதா தளம் - 43 இடங்கள், 64,84,414 வாக்குகள்
ஹெச்.ஏ.எம் - 4 இடங்கள், 3,75,564 வாக்குகள்
வி.ஐ.பி - 4 இடங்கள், 6,39,342 வாக்குகள்

பீகார் தேர்தலில் மகா கூட்டணியின் கீழ் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை இடங்களையும் வாக்குகளையும் பெற்றிருக்கின்றன என்பதைக் பார்க்கலாம்.

ராகுல் காந்தி
ராஷ்டிரிய ஜனதா தளம் - 75 இடங்கள், 96,63,584 வாக்குகள்
காங்கிரஸ் - 19 இடங்கள், 39,94,912 வாக்குகள்
சி.பி.ஐ (எம்.எல்) - 12 இடங்கள், 12,50,869 வாக்குகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 இடங்கள், 3,56,855 வாக்குகள்
இந்திய கம்யூனிஸ்ட் - 2 இடங்கள், 3,49,489 வாக்குகள்

நடந்து முடிந்த பீகார் தேர்தலில், இளம் தலைவரான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றிருக்கிறது. வாக்குவாரியாக பார்த்தாலும் 96 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது ஆர்.ஜே.டி. எனவே, தேஜஸ்வி-க்கு இது வெற்றிகரமான தோல்வியாக இருக்கிறது எனலாம்.

தேஜஸ்வி

ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அடுத்த இடத்திலிருக்கிறது பா.ஜ.க. அந்தக் கட்சியைப் பொறுத்தவரை இது அவர்களுக்கு நல்ல தேர்தலாகவே அமைந்திருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை பீகாரை ஆட்சி செய்த மாநிலக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்துப் போட்டியிட்டதே இந்தப் பின்னடைவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து விரிவாகப் படிக்க, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: பீகார் தேர்தல்: சிராக் பஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியைக் காலி செய்ததா பா.ஜ.க?

சிராக் பாஸ்வான்

என்னதான் 125 இடங்களைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் வென்றிருந்தாலும், மகா கூட்டணியைவிட 15 இடங்களை மட்டுமே அதிகமாகக் கைப்பற்றியிருக்கிறது. வாக்குகள் அடிப்படையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகா கூட்டணியைவிட 84,909 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறது.

பீகாரின் ஹில்சா (Hilsa) தொகுதியில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளரைவிட 12 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர், கிருஷ்ணாமுராரி ஷரன் (Krishnamurari Sharan). அவர் 61,848 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சக்தி சிங் யாதவ் 61,836 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹில்சா தொகுதியில் விதிமீறல் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். ``ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சக்தி சிங் யாதவ் 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று இரவு 10 மணிக்கு சொல்லப்பட்டது. வெற்றிச் சான்றிதழுக்காகக் காத்திருந்தார் சக்தி சிங். பின்னர், அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அஞ்சல் வாக்குகள் செல்லாததால் ரத்துசெய்யப்பட்டதாகவும், அதனால் எங்கள் வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டதாகவும் திடீரென்று கூறி அதிர்ச்சி தந்தனர்'' என்று ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை முற்றிலுமாக மறுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

பீகார் தேர்தல் களம்

Also Read: சுஷாந்த் புகைப்படத்துடன் 30,000 மாஸ்க்குகள்... அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறதா பா.ஜ.க?

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ட்விட்டர் பக்கத்தில் 119 இடங்களில் தங்கள் கூட்டணி வென்றிருக்கிறது என்று அந்த 119 தொகுதிக்கான வெற்றி வேட்பாளர்களின் பட்டியலையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது அந்தக் கட்சி. மேலும், அந்தப் பதிவில், ``119 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் எங்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். பின்னர் நாங்கள் தோல்வியடைந்துவிட்டதாகச் சொல்லி வெற்றிச் சான்றிதழ்கள் எதுவும் வழங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்திலும் மகா கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாகவே காட்டப்பட்டது. இத்தகைய செயல்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவை'' என்று பதிவிட்டிருந்தனர்.

பா.ஜ.வைச் சேர்ந்தவர்கள் பலரும், ``காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எப்போதுமே தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் முறைகேடு செய்துவிட்டது. வாக்கு இயந்திரம் சரியில்லை என்ற கதைகளைச் சொல்லிச் சமாளிப்பார்கள்'' என்று கருத்து கூறிவருகின்றனர்.

பீகார் பொதுமக்கள் மத்தியில், ``தேஜஸ்வி யாதவ், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் தவறு செய்துவிட்டார். அதனால்தான் மகா கூட்டணி தோல்வியைத் தழுவியிருக்கிறது'' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ``பீகாரில் எங்கள் ஸ்ட்ரைக் ரேட் 80 சதவிகிதம். எங்களுக்கு அதிக சீட் வழங்கியிருந்தால், நாங்கள் மகா கூட்டணி வெற்றி எண்ணிக்கையில் அதிக பங்களிப்பைத் தந்திருப்போம்'' என்று தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பேசிய சி.பி.ஐ (எம்.எல்) (Communist Party of India (Marxist–Leninist)) கட்சியின் தலைவர் தீபன்கர் பட்டாச்சார்யா,

தீபன்கர் பட்டாச்சார்யா

Also Read: பீகார் தேர்தல் முடிவுகள்; தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சீட்டுக்கு வைக்குமா வேட்டு? #TNElection2021

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பேசுகையில், ``தேர்தலில் முறைகேடு நடந்திருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. இரு கூட்டணிகளுக்குமிடையே 84,000 வாக்குகள்தான் வித்தியாசம் இருக்கிறது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை மிகப்பெரிய வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. 11 இடங்களில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஹில்சா தொகுதியில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், 43 இடங்களை மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியிருக்கிறது. அதிலும் சில இடங்களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, அடுத்த தேர்தலுக்குள்ளாக ஐக்கிய ஜனதா தளத்தை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பதை நிதிஷ் குமார் பார்க்க வேண்டும்.

பீகார் தேர்தல் களம்

தேஜஸ்வி யாதவின் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சியும் சில தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றிருக்கிறது. குறிப்பாக, ராம்கார் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர், பகுஜன் சமாஜ் வேட்பாளரைவிட 189 வாக்குகளே அதிகம் பெற்று வென்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர்களது கூட்டணியிலிருந்து 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றிருக்கிறது. தேஜஸ்வி-க்கு 31 வயது மட்டுமே ஆகிறது என்பதால், இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியைப் பார்க்காமல் இதை அனுபவமாக அவர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தேஜஸ்வி செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/election/bihar-data-shows-the-margin-between-nda-and-grand-alliance-is-very-thin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக