Ad

வியாழன், 19 நவம்பர், 2020

`வியாழன் ஸ்வாப் டெஸ்ட், சனிக்கிழமை பார்ட்டி... வேண்டாம் விபரீதம்!' - எச்சரிக்கும் மருத்துவர்

`கொரோனா இரண்டாம் அலை வந்துவிட்டது. கவனமாக இருங்கள்’ என்று மருத்துவர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநகரப் பேருந்துகளில் காலை வேளைகளில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டுதான் நிற்கிறார்கள். பலருக்கும் மாஸ்க் கழுத்தில்தான் இருக்கிறது. தீபாவளி நேரத்தில் சமூக இடைவெளியை மறந்துவிட்டு ஷாப்பிங் செய்தோம். பலர், கொரோனா பயத்தைத் தள்ளி வைத்துவிட்டு சொந்த ஊருக்குச் சென்று தீபாவளி கொண்டாடிவிட்டு வந்தார்கள். சரியான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முகக்கவசம், சமூக இடைவெளி, சானிட்டைசர் என்று கவனமாக இருக்க வேண்டிய நாம், அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துகொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இது தொடர்பாக, `அடுத்த 14 முதல் 28 நாள்களுக்கு அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று சில நாள்களுக்கு முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் எச்சரித்திருக்கிறார்.

தொற்றுநோய் நிபுணர் சித்ரா

இந்த நிலையில், பார்ட்டி பிரியர்கள் தங்கள் வீக் எண்ட் பார்ட்டியை பாதுகாப்பாகக் கொண்டாட(?!) ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, வியாழக்கிழமை கொரோனாவுக்காக ஸ்வாப் பரிசோதனை செய்துகொள்கிறார்கள். சனிக்கிழமை காலை ரிசல்ட் வந்துவிடுகிறது. ரிசல்ட்டில் கொரோனா நெகட்டிவ் என்று வந்துவிட்டால், சனிக்கிழமை இரவு பார்ட்டியில் கலந்துகொள்கிறார்கள். வெளிநாடுகளில் ஆரம்பித்திருக்கிற இந்தப் பழக்கம், தற்போதைய இணைய உலகில் நம் நாட்டிலும் வேகமாகப் பரவிவிடும். அதனால், இப்படி பார்ட்டி கொண்டாடுவது எந்தளவுக்குப் பாதுகாப்பானது என்று தொற்றுநோய் மருத்துவர் சித்ராவிடம் கேட்டோம்.

``கொஞ்சம்கூட பாதுகாப்பே இல்லாதது. ஸ்வாப் பரிசோதனையே 80 சதவிகிதம்தான் சரியான ரிசல்ட் தரும். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலுமே ஃபால்ஸ் நெகட்டிவாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் ரிப்போர்ட்டில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும், அந்த ரிப்போர்ட்டிலேயே, `நெகட்டிவ் என்று வந்திருந்தாலும் நீங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சானிட்டைசர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

கொரோனா வைரஸுக்கு இன்குபேஷன் பீரியட் இருக்கிறது. அந்த நாள்களுக்குள், அது நம் உடம்புக்குள் பல்கிப்பெருகிய பிறகுதான் ரிசல்ட்டில் பாசிட்டிவ் என்று காட்டும். கொரோனா பரிசோதனை செய்துகொள்கிற வியாழக்கிழமையன்று நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும், அது இன்குபேஷன் பீரியடாகவும் இருக்கலாம்.

அதனால், நீங்கள் பார்ட்டியில் கலந்துகொள்கிற அன்று கொரோனா பாசிட்டிவ்வாகவும் மாறலாம். தவிர, கொரோனா டெஸ்ட் எடுத்த பிறகு, இரண்டு நாள்கள் வெளியேதானே இருக்கிறார்கள். அந்த நேரத்தில் வைரஸ் தொற்று வரலாமே. அதனால், திருமணம் போன்ற தவிர்க்கவே முடியாத நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமானால், ஸ்வாப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு கலந்துகொள்வதைப் பற்றி யோசிக்கலாம். அதிலும் நிறைய பேர் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

A health worker takes a nasal swab sample

Also Read: பயமில்லா முதலீடு... கைகொடுக்கும் ஹைபிரிட் ஃபண்டுகள்... வழிகாட்டும் நாணயம் விகடன்!

இன்னொரு முக்கியமான விஷயம், இந்தக் குளிர்காலத்தில் நார்மலாகவே நமக்கெல்லாம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வரும். இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில், பார்ட்டி போல ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, சீஸனல் காய்ச்சலில் ஆரம்பித்து கொரோனா தொற்றுவரைக்கும் வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், வீக் எண்ட் பார்ட்டி போன்ற கொண்டாட்டங்களை இன்னும் சில மாதங்களுக்கோ, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையிலோ ஒத்தி வைப்பதுதான் நல்லது.’’



source https://www.vikatan.com/health/healthy/infectious-disease-doctor-warns-about-dangers-of-partying-during-covid-19-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக