Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

`கலெக்டர் நிர்வாகத்தில் செயல்படுவது அரசுப் பள்ளி இல்லையா?’ - மருத்துவக் கனவால் கலங்கும் மாணவர்

தஞ்சாவூரில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளியில் படித்த ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு, அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் தர கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் தன்னுடய டாக்டர் கனவு தகர்ந்திருப்பதாகக் கண்கள் கலங்க அந்த மாணவன் கூறி வருகிறார்.

டாக்டர் கனவில் ஏழை மாணவன் அருண்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை அருகே உள்ள பெரியார் நகரில் வசிப்பவர்கள் தட்சிணாமூர்த்தி - சுசிலா தம்பதி. இவர்களுக்கு தருண், அருண், வருண் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான அருண், தற்போது வெளியான நீட் நுழைவுத் தேர்வில் 238 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் படி மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக அரசு பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் கேட்டு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷணனை அனுகியிருக்கிறார் அருண். ராமகிருஷ்ணனோ, `நீங்கள் படித்தது அரசுப் பள்ளி கிடையாது. அரசு உதவி பெறும் பள்ளி. அதனால் சான்றிதழ் பெறுவதற்கான தகுதி உங்களுக்கு கிடையாது’ எனக் கூறியிருக்கிறார்.

டிபன் கடையில் அருண்

இதனால் சொந்தக் கடையிலேயே புரோட்ட மாஸ்டராக வேலை பார்த்தபடி படிப்பைத் தொடர்ந்து வந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவனான அருணின் மருத்துவப் படிப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. கனவு கை கூடுமா என்ற கவலையில் கண்கள் கலங்க காத்திருக்கிறார் அருண்.

இது குறித்து அருணிடம் பேசினோம். ``எங்க அப்பா டிபன் கடை வச்சுருக்கார். நாங்க மிகவும் சாதரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். டிபன் கடையில வேலைக்கு ஆள் வைத்தால், சம்பளம் கொடுத்து கட்டுபடியாகது என என்னோட அண்ணன், தம்பி, நான் என எல்லோருமே கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்து வருகிறோம்.

Also Read: நீட்: `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 8 சீட்; இட ஒதுக்கீடு நிறைவேறினால் 303 சீட்' - உண்மைநிலை என்ன?

நான் தஞ்சாவூரில் சத்திரம் நிர்வாகம் எனச் சொல்லப்படும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் இந்த பள்ளி செயல்படுகிறது. பத்தாம் வகுப்பில் 471 மார்க் எடுத்தேன். டாக்டருக்கு படிக்க வேண்டியது என்பதை கனவாக, லட்சியமாக உசுராக எண்ணிப் படித்து வந்தேன். எங்க தலைமுறையிலேயே யாரும் டாக்டருக்குப் படிச்சது கிடையாது. நாம டாக்டர் ஆக வேண்டும் என கடினமாகப் படித்தேன்; உழைத்தேன். 2017ம் ஆண்டு எழுதிய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1,003 மார்க் கிடைத்தது.

குடும்ப வறுமையைப் பார்க்காம தன் சக்திக்கு மீறி அப்பா என்னை நீட் தேர்வு எழுத வச்சார். தொடர்ச்சியாக மூன்று முறை நீட் தேர்வு எழுதினேன். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான மார்க் கிடைக்கவில்லை. பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளில், அதுவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

மாணவன் அருண்

அப்பா கண்கள் கலங்க, `உசுரக் கொடுத்தாவது படிக்க வைக்கிறேன்’னு சேர்ந்துக்கச் சொன்னார். அப்பா நம்மோட தகுதிக்கெல்லாம் தனியார் கல்லூரி சரிபடாது நம்மால பீஸ் கட்ட முடியாது என கூறியதுடன், நான் நிச்சயம் டாக்டர் ஆவேன் என்றேன். அதுவரை அரசு பாராமெடிக்கல் கல்லூரியில் துணை மருத்துவப் படிப்பு படிக்கிறேன் என அதனைத் தொடர்ந்து வருகிறேன்.

இதையடுத்து இந்த ஆண்டிற்கான நீட் தேர்வில் கலந்து கொண்டேன். 238 மார்க் கிடைத்தது. எங்க பள்ளியின் தலைமையாசிரியர் அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினபடி அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான இடம் உனக்கு நிச்சயம் கிடைக்கும் என வாழ்த்தினார்.

நீட் தேர்வு

நானும் நமக்கான டாக்டர் படிப்பிற்கான கதவு திறந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தேன். `நம்ம தலைமுறையோட முதல் டாக்டரே நீதாண்டா. இந்த வாய்ப்பை விட்றக் கூடாது’ என்ற அம்மாவுக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

இந்நிலையில் மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக அரசுப் பள்ளியில் படித்தற்கான சான்றிதழ் வாங்கச் சென்றேன். `நான் படித்தது அரசு உதவி பெறும் பள்ளி. அரசு விதிப்படி எனக்கு சான்றிதழ் தர முடியாது’ என மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார். கலெக்டர் நிர்வாகத்தின் கீழ்தானே அந்தப் பள்ளி செயல்படுகிறது. `அது எப்படி அரசு பள்ளியாகது’ என அதிகாரிகளிடம் கேட்டதற்கு, எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதையடுத்து, கலெக்டர் கோவிந்தராவ் சாரை சந்தித்தேன். அவர் எனக்கான அனைத்து முயற்ச்சிகளையும் செய்தார்.

முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன்

சத்திரம் நிர்வாக தாசில்தாரான பழினியப்பனிடம் பேசி, எனக்கு சான்றிதழ் தருவதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுக்கச் சொன்னார். அதனைக் கொண்டு சென்று நான் ராமகிருஷ்ணன் சாரிடம் கொடுத்தேன். அவர், `என்னால இதைச் செய்ய முடியாது’ என கையை விரித்து விட்டார். எனக்கு அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைத்தது. வீட்டுக்கு வந்த நான் மூலையில் முடங்கி வெடித்து அழுது விட்டேன். `சொந்தக் கடையிலேயே புரோட்டா மாஸ்டரா வேலை பார்த்துக்கிட்டு, இதற்காகவா படாத கஷ்டமெல்லாம் பட்டு படிச்சே’ என அப்பாவும் கலங்கினார்.

மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கான அப்ளிகேஷன் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. என்னோட இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது அரசு இந்த விஷயத்தில் ஒரு நல்ல முடிவை எனக்குக் கொடுக்க வேண்டும். என்னோட கனவு கரை சேருமா? எனக்கான கதவு திறக்குமான்னு தெரியலை. ஆனாலும் நம்பிக்கையோட காத்திருக்கிறேன்’’ என கண்கள் கலங்க தெரிவித்தார்.

அருண்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். ``அரசு உத்தரவுப்படி நேரடி அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத்தான் சர்டிபிகேட் கொடுக்க முடியும். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்களுக்கு கொடுக்க முடியாது. கலெக்டர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டாலும், அந்தப் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் குறிப்பிட்ட மாணவனுக்கு சான்றிதழ் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/tanjore-student-seeks-governments-help-over-medical-college-admission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக