Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

வேலூர்:`தீபாவளி வசூல் வேட்டை!’ - விஜிலென்ஸ் அதிரடி ரெய்டில் சிக்கிய அதிகாரி

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்துக்குள் நேற்று மாலை அதிரடியாக நுழைந்த வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மெயின் கேட்டை இழுத்துப் பூட்டினர். இதையடுத்து, அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநருடைய அறைக்குள்ளும் சென்று சோதனை நடத்தினர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம்

இந்த சோதனையில், உதவி இயக்குநர் செந்தில்வேலின் அறை, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது கார், அங்கு வந்திருந்த கான்டிராக்டர் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத 92,000 ரூபாய் ரொக்கப் பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், முறைகேடு நடந்திருப்பதற்கான சில முக்கிய கோப்புகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Also Read: வேலூர்: `வீடு முழுக்க கட்டுக்கட்டாகப் பணம், தங்க நகைகள்!’ - மலைக்கவைத்த லஞ்ச அதிகாரி

இதுதொடர்பாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேலிடம் நள்ளிரவு வரை கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னரே, அலுவலகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டபோது, ``கணக்கில் காட்டப்படாதப் பணம் கைப்பற்றியது தொடர்பாக, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேல்

தீபாவளி பண்டிகை காலத்தில்,`அன்பளிப்பு’ என்ற பெயரில் அரசுத்துறை அலுவலர்கள் பலரும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை லஞ்சமாகப் பெறுகிறார்கள். அதுபோன்ற அலுவலர்களை ரகசியமாகக் கண்காணித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வளைத்துப் பிடிக்கிறார்கள். அந்த வகையில்தான், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செந்தில்வேலனையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து கொத்தாகத் தூக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/vellore-dvac-files-corruption-case-against-government-official

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக