Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

தி.மு.க: பொறுப்பாளர்கள் லிஸ்ட்டை மாற்றிய நான்கு 'A'-க்கள்... தீராத திருநெல்வேலி பஞ்சாயத்து!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளராக சிவபத்மநாபன், மத்திய மாவட்டச் செயலாளராக அப்துல் வஹாப் ஆகியோர் இருந்தனர். ஆவுடையப்பன் கட்டுப்பாட்டில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகளும், சிவபத்மநாபன் கட்டுப்பாட்டில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளும், பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி தொகுதிகள் அப்துல் வஹாப்பின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. சமீபத்தில், வருவாய்த்துறை அடிப்படையில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கழக அமைப்புரீதியாக ஒன்றுபட்ட திருநெல்வேலியை, திருநெல்வேலி மற்றும் தென்காசி என்று இரண்டாகப் பிரிக்க அறிவாலயம் முடிவெடுத்தது.

தி.மு.க தலைமை அலுவலகம்-அண்ணா அறிவாலயம்

தலா இரண்டு தொகுதிகள் வீதம் ஐந்து மாவட்டங்களை உருவாக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலிக்கு சீட் கேட்டு கிடைக்காததால், இந்த முறை மாவட்டப் பொறுப்பாளராகிவிட முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கிரஹாம் பெல் கடுமையாக முயன்றார். நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளைத் தனக்கு ஒதுக்குமாறும் தலைமையிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து இரண்டு தொகுதிகள் போவதை ஆவுடையப்பன் விரும்பவில்லை. அவர் மகன் பிரபாகரனை மாவட்டப் பொறுப்பாளராக்கிவிட்டு, ஆவுடையப்பனுக்கு உயர்மட்டக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்க அறிவாலயம் தயாராக இருந்தது. இது குறித்து தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆவுடையப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

Also Read: நெல்லையில் வெல்லும் சூரியன்! - திருநெல்வேலி

அப்போது ``1996 சட்டமன்றத் தேர்தல்ல, ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்துக்கு நான் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கேன். அப்போ சேரன்மாதேவியோட சேர்த்து 11 தொகுதிகள் என் கட்டுப்பாட்டுல இருந்துச்சு. அந்தத் தேர்தல்ல, பத்து தொகுதிகள்ல தி.மு.க-வை ஜெயிக்கவெச்சுக் கொடுத்திருக்கேன். நீங்க என்னடான்னா, என்னைய ஒரு ஒன்றியச் செயலாளர் லெவலுக்கு கீழே இறக்கி ட்ரீட் பண்றீங்க.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்

ஆலங்குளம் தென்காசி மாவட்டத்திலும், அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்திலும் வருது. இந்தத் தொகுதிகள்ல ஏதாவது ஒரு பிரச்னைனா, நான் ரெண்டு மாவட்ட கலெக்டர்கிட்டயும் மாறி மாறிப் பேசணும். இதெல்லாம் தேவையா? நான் இன்னும் ஆக்டிவ்வாதானேங்க இருக்கேன்... அதுக்குள்ள என் பையனை மாவட்டப் பொறுப்புக்கு கொண்டுவரணும்னு என்ன அவசரம்... என்கிட்ட இருக்குற தொகுதிகளைப் பிரிச்சு, கிரஹாம் பெல்லுக்கு கொடுக்குறதா இருந்தா எனக்கு மாவட்டப் பொறுப்பே வேண்டாம். எல்லாத் தொகுதிகளையும் யாருக்கு வேணும்னாலும் கொடுங்க” என்று வெடித்துவிட்டாராம் ஆவுடையப்பன்.

Also Read: தயாநிதி அழகிரிக்கு தென்மண்டலப் பொறுப்பா? - தகிக்கும் மதுரை தி.மு.க

இது ஒருபுறம் என்றால், கிரஹாம் பெல்லுக்கு மாவட்டப் பொறுப்பு கொடுக்கக் கூடாது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடமே நேரடியாக வாக்குவாதம் செய்திருக்கிறார் அப்பாவு. ``ராதாபுரம் தொகுதி என் கையைவிட்டுப் போனதுக்குக் காரணமே பெல்தான். நீங்க அவருக்குப் பொறுப்பு கொடுக்குறது, என்னைய கட்சியில இருந்து நீக்குறதுக்குச் சமம். நீங்களே முடிவு பண்ணிக்கங்க தலைவரே...” என்று ஒரே போடாகப் போட, ஸ்டாலினால் அப்பாவுவைச் சமாதானப்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.

போதாத குறைக்கு, திருநெல்வேலி தி.மு.க எம்.பி ஞானதிரவியம் பெல்லுக்கு எதிராக, பலமாகக் காய்நகர்த்தியிருக்கிறார். அதன் பிறகுதான், கிரஹாம் பெல்லின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகள் ஆவுடையப்பனுக்கே அளிக்கப்பட்டன. `அப்துல் வஹாப்பை டச் பண்ணாதீங்க’ என்று ஸ்டாலினே கூறிவிட்டதால், அவர் கட்டுப்பாட்டிலிருந்த தொகுதிகள் எதுவும் பிரிக்கப்படவில்லை.

சபரீசனிடம் வாழ்த்து பெறும் ஆ.துரை

தென்காசி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கும் ஏழாம் பொருத்தம். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்ளும் பஞ்சாயத்து அறிவாலயத்தையே கலங்கடித்துவிடும். சிவபத்மநாபனிடமிருந்து கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதிகளைப் பிரித்தெடுத்து, புதிய மாவட்டத்தை உருவாக்க முடிவானது. கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ``பட்டியலின மக்கள் வெகுவாக தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த முறை அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்க வேண்டும்” என்று வாதாடியிருக்கிறார். கே.என்.நேருவும் இந்தக் கருத்தை ஆமோதித்திருக்கிறார். அதுவரையில், `அய்யாதுரை பாண்டியனுக்கு பொறுப்பு கொடுக்கலாமா’ என்று யோசித்துவந்த கட்சித் தலைமை, பட்டியலின பிரமுகர் ஒருவருக்கே மாவட்டப் பொறுப்பை அளிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறது.

Also Read: ராஜதந்திர எடப்பாடி! - கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்?

தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாருக்குத்தான் முதலில் சான்ஸ் அடித்திருக்கிறது. ஆனால் அவர், `உதயநிதியுடனேயே சென்னையில் இருந்துகொள்கிறேன். எனக்கு மாவட்டப் பொறுப்பு வேண்டாம்’ என்று கூறிவிட்டதால், பொன்ராஜ், செல்லதுரை ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலையிட்டு, தி.மு.க இளைஞரணி பிரமுகர் துரைக்காக வாதாடியிருக்கிறார். உதயநிதியும் அழுத்தம் கொடுத்ததால், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதிகளை அடக்கிய தென்காசி வடக்கு மாவட்டம் ஆ.துரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிவபத்மநாபனுக்கு தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள்.

அன்பில் மகேஷ்

துரையை மாவட்டப் பொறுப்புக்கு கொண்டு வந்திருப்பது, தென்காசி அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது. வாசுதேவநல்லூர், கடையநல்லூரில் கணிசமாக இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தினர், துரைக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். நம்மிடம் பேசிய தி.மு.க தலைவர் ஒருவர், ``அதிருப்தியிலிருக்கும் ஒரு பிரிவினர், தங்களுடைய சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று கொந்தளிக்கிறார்கள். `பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கு கடையநல்லூரில் பதவியா... ஏன் உள்ளூரில் ஆளே இல்லையா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இது போன்ற சலசலப்புகள் ஏற்படுவது சகஜமானதுதான். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தனக்கெதிராக மாவட்டத்துக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்புகளை துரை சமாளித்தால் மட்டுமே கட்சிக்கும் அவருக்கும் நல்லது” என்றார்.

Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

கட்சிப் பொறுப்பு கிடைக்காததால் கிரஹாம் பெல்லும் அய்யாதுரை பாண்டியனும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அறிவாலயத்துக்கு அய்யாதுரை பாண்டியன் வந்திருந்தபோதுகூட, பூச்சிமுருகன் மூலமாக அவரைத் தன் அறைக்குள் வருமாறு ஸ்டாலின் அழைத்திருக்கிறார். ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறிவிட்டு அய்யாதுரை பாண்டியன் கோபமாகச் சென்றுவிட்டாராம். தேர்தல் நேரம் என்பதால், அதிருப்தியிலிருக்கும் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட கட்சிப் பிரமுகர்களை சமாதானப்படுத்துமாறு கே.என்.நேருவிடம் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்

ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த ஒரு லிஸ்ட்டை ஆவுடையப்பன், அப்பாவு, ஆ.ராசா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய நான்கு பேர் கடைசி நிமிடத்தில் மாற்றியிருக்கிறார்கள். தலைமை சமாதானப்படுத்த முயன்றாலும், புயல் காற்று இன்னும் ஓயவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம். இப்போது நடைபெற்றிருக்கும் நியமனங்களுக்கு எதிராக அறிவாலயத்தில் போராட்டம் நடத்தவும் கட்சிக்குள் ஒரு பிரிவு தயாராகிவருவது தி.மு.க-வை பரபரப்பாக்கியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/tirunelveli-dmk-cadres-express-displeasure-over-partys-new-decision

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக