நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள மசக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு கடந்த வாரத்தில் இரண்டு நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மின் மோட்டார் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த ஊர் மக்கள் சிலர்,மசக்கல் பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றை பார்வையிட்டுள்ளனர்.
கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று மிதப்பதைப் பார்த்து அதர்ச்சியடைந்த அவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த வனத்துறையினர் ஆய்வு செய்ததில், சிறுத்தை ஒன்று உள்ளே இறந்துகிடப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். சிறுத்தையின் உடலை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர், "கிணற்றுக்குள் இறந்துகிடந்த ஆண் சிறுத்தைக்கு 4 வயது இருக்கலாம். இதனை மீட்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கூறாய்வு செய்துள்ளோம். உடல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கும் அனுப்பியுள்ளோம். இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
இதுகுறித்து கூடுகள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ், "கூடலூரில் துப்பிக்கியால் சுட்டும், குன்னூரில் சுருக்கு கம்பி வைத்தும் அடுத்தடுத்து இரண்டு சிறுத்தைகள் சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது கோத்தகிரி பகுதி குடிநீர் கிணற்றில் சிறுத்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக நீலகிரியில் சிறுத்தைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/news/environment/leopard-found-dead-in-well-at-nilgiris
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக