Ad

சனி, 14 நவம்பர், 2020

சென்னை: 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் எங்கே? - புனேவில் நடந்த கார் சேஸிங்

சென்னை சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் தலில்சந்த் (74). ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி புஷ்பா பாய் (68). இவர்களின் மகன் சித்தல்குமார் (40). இவர்கள் மூன்று பேரும் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தலில் சந்த்தின் மகள் பிங்கி, யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்துக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் சென்று விசாரித்தார். கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சடலமாக கிடக்கும் ஃபைனான்ஸ் அதிபர் தலித்சந்த், சித்தல்

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது காரிலிருந்து பெண் உள்பட 6 பேர் தலில்சந்துக்கு வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. காரின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இந்தக் கொலை சம்பவத்தில் சித்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உள்பட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீஸார் சென்னை, செங்கல்பட்டு, புனே, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் எஸ்.ஐ அசோக் மற்றும் போலீஸார் சோலாப்பூர் மாவட்ட போலீஸாருடன் இணைந்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். அப்போது, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களின் வாகனத்தை போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் அந்த வாகனத்தை சினிமா காட்சிபோலத் துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது கொலையாளிகள் சென்ற வாகனம் மின்னல் வேகத்தில் சென்றது. உடனே தனிப்படை போலீஸாரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து விரட்டிச் சென்று அந்தக் காரை மடக்கினர். காருக்குள் இருந்த புனேவைச் சேர்ந்த கைலாஷ் (32), கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் கர் (25), விஜய் உத்தம் கமல் (28) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களையும் கார், மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன்

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், ``இந்த வழக்கில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில போலீஸார், சென்னை போலீஸாருக்கு உதவி செய்தனர். சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் மற்றும் அவரின் நண்பர்கள் என 3 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரித்தபோது 5 தடவை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி குறித்து விசாரித்துவருகிறோம். இந்த வழக்கில் மேலும் 3 பேரைத் தேடி வருகிறோம்" என்றார்.

Also Read: சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காகக் கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சிசிடிவி மூலம்தான் இந்தக் கொலை வழக்கு துப்புத் துலங்கியிருக்கிறது. சிசிடிவியை கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் காண்பித்தவுடன் ஜெயமாலா மற்றும் அவர்களின் சகோதரர்களை அடையாளம் காட்டினர். சித்தல்குமாரின் மனைவி ஜெயமாலா, ஏற்கெனவே வரதட்சனை கொடுமை குறித்து புனே காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்தான் சம்பவத்தன்று சித்தல்குமாரின் குடும்பத்தினரை மிரட்ட துப்பாக்கியுடன் ஜெயமாலா மற்றும் சகோதரர்கள் சென்னை வந்திருக்கின்றனர்.

துப்பாக்கி குண்டு

சித்தல்குமார் குடும்பத்தினருக்கும் ஜெயமாலாவின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போதுதான் மூன்று பேரின் தலையில் குறி பார்த்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கின்றனர். கொலை செய்து விட்டு கொலையாளிகள் வெளியில் செல்வதும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. ஜெயமாலாவின் சொந்த ஊர், புனே என்பதால் ஒரு டீம் சென்னையிலிருந்து விமானத்தில் புனேவுக்குச் சென்றோம். அங்குதான் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், கொல்கத்தாவைச் சேர்ந்த ரவீந்தரநாத் கர், விஜய் உத்தம் கமல் ஆகிய 3 பேரைக் கைது செய்திருக்கிறோம். அவர்களிடம் விசாரித்தபோது ஜெயமாலா எங்கு இருக்கிறார் என்ற ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், ஜெயமாலா உள்பட 3 பேரை விரைவில் கைது செய்துவிடுவோம். ஜெயமாலாவிடம் விசாரித்தால்தான் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-3-in-sowcarpet-triple-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக