Ad

திங்கள், 16 நவம்பர், 2020

பீகார்: 2 துணை முதல்வர்கள்... பா.ஜ.க-வின் மேற்குவங்க டார்கெட் - 5 ஆண்டுகள் நீடிப்பாரா நிதிஷ்?

பீகார் மாநில முதல்வராக இன்று பதவியேற்று இருக்கிறார் நிதிஷ் குமார். தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் அரியணை ஏறி, பீகார் அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறார் அவர். ஆனால், இந்த முறை மிகக் குறைந்த எம்.எல்.ஏ-க்களை மட்டுமே தன் வசம் வைத்திருக்கிறார். எனவே, `தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ் நீடிப்பாரா?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

நிதிஷ் குமார் தலைமையிலான கடந்த ஆட்சியில் பா.ஜ.க-வின் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகப் பதவிவகித்தார். அவரையும் சேர்த்து மொத்தம் 30 அமைச்சர்கள் நிதிஷ் குமார் தலைமையில் செயல்பட்டனர். இந்த 30 அமைச்சர்களில், 18 பேர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களாகவும், 12 பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். கடந்த தேர்தலில் 71 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருந்தது ஐக்கிய ஜனதா தளம். ஆனால், தற்போது வெறும் 43 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அவர்கள் வசம் இருப்பதால், ஆட்சியமைப்பதில் 74 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் பா.ஜ.கவின் கையே ஓங்கி நிற்கிறது.

சுஷில் மோடி

Also Read: பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள்! - தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?

கடந்த ஆட்சியில், 2017-ம் ஆண்டு முதல் பீகாரின் துணை முதல்வராகப் பதவிவகித்த, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி நேற்று (15.11.2020) ட்விட்டரில், ``எனது 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் பா.ஜ.க-வும், சங் பரிவாரும் எனக்கு நிறையவே கொடுத்திருக்கின்றன. வேறு எந்த நபருக்கும் இவ்வளவு கொடுக்கப்பட்டிருக்காது என்றே நினைக்கிறேன். எதிர்காலத்தில் எனக்கு வரும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். என்னிடமிருக்கும் `பணி செய்யும் தொண்டர்' என்ற பதவியை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது'' என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் துணை முதல்வராக இனி சுஷில் மோடி செயல்பட மாட்டார் என்று சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், பீகாருக்கு இரண்டு துணை முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள் பா.ஜ.க-விடமே இருக்குமென்றும் தகவல்கள் பரவிவருகின்றன. முக்கிய இலாக்காக்களையும், சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க கோருவதாக, பீகார் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ராஜ்நாத் சிங்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் தலைநகர் பாட்னாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் இறுதியில், தேர்தலுக்கு முன்பாகவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி நிதிஷ் குமார்தான் பீகாரின் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக, கதிஹார் (Katihar) சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ தர்கிஷோர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க இரண்டு துணை முதல்வர் பதவி வேண்டுமென்று கேட்டதாகவும், அதற்கு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் சொல்லப்படுகிறது. 43 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஐக்கிய ஜனதா தளத்தின்வசம் இருப்பதால், வேறு வழியின்றி நிதிஷ் குமார் இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டு துணை முதல்வர்களுள் ஒருவராக தர்கிஷோர் பிரசாத் இருப்பார் என்ற செய்தியும் வந்தவண்ணம் இருக்கிறது. தர்கிஷோர் பிரசாத் தீவிர ஆர்.எஸ்.எஸ் பணியாளர். 2005-லிருந்து தொடர்ந்து நான்கு முறை கதிஹார் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். மேலும், இவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்குவதற்குக் காரணமாக ஒன்றைச் சொல்கிறார்கள் பீகாரைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள். ``கதிஹார் தொகுதி மேற்குவங்கத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது. மேற்குவங்கத்தில் தர்கிஷோர் பிரசாத்துக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆட்சியமைப்பதற்கு, பா.ஜ.க குறிவைத்திருக்கும் அடுத்த மாநிலம் மேற்குவங்கம்தான் என்பதால் தர்கிஷோர் பிரசாத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என்கிறார்கள்.

தர்கிஷோர் பிரசாத் - ரேணு தேவி

Also Read: பீகார் தேர்தல்: தேஜஸ்விக்குத் துணை நின்ற தோழர்கள்…கம்யூனிஸ்ட் வெற்றி சாத்தியமானது எப்படி?

இரண்டாவது துணை முதல்வர் பதவிக்கு, பா.ஜ.க-வைச் சேர்ந்த ரேணு தேவியின் பெயர் அடிபடுகிறது. பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நோனியா (Nonia) என்ற சமூகத்தைச் சேர்ந்தவர் ரேணு தேவி. ``பீகாரிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கவனத்தை பா.ஜ.க-வின் பக்கம் திருப்புவதற்காகத்தான் ரேணு தேவியைத் துணை முதல்வராக்கத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ரேணு தேவிதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற துணைத் தலைவர்.

இன்று மாலை நிதிஷ் குமாரோடு சேர்ந்து அமைச்சர்கள் சிலரும் பதவியேற்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தநிலையில், `தொடர்ந்து நான்காவது முறையாக முதல்வர் பதவியேற்கும் நிதிஷ் குமார் ஐந்து ஆண்டுக்காலம் முதல்வர் பதவியில் நீடிப்பாரா?' என்ற கேள்விக்கு அரசியல் விமர்சகர்கள் தரும் பதில்களைக் கீழே பார்ப்போம்.

நிதிஷ் குமார் - மோடி

``பீகாரிலிருந்து வரும் செய்திகளைவைத்துப் பார்க்கும்போது, அங்கு பா.ஜ.க தன்னை பலப்படுத்திக்கொள்வதற்கான வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது. முக்கிய இலாக்காக்கள், இரண்டு துணை முதல்வர்கள் என அனைத்து முக்கிய அமைச்சர் பதவிகளையும் பா.ஜ.க எடுத்துக்கொண்டதென்றால், அதன் பிறகு நிதிஷ் குமார், பெயருக்கு மட்டுமே முதல்வராகச் செயல்பட முடியும். நிதிஷ் குமாரின் அரசு வெறும் பொம்மை அரசாக மட்டுமே இருக்கும். பா.ஜ.க மேலிடம் சொல்வதைக் கேட்டுத் தலையாட்டும் அரசாகவே அது இருக்க முடியும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே பதவிக் காலத்தில் இரண்டரை ஆண்டுக்காலத்தை பா.ஜ.க கோரியிருப்பதாகக்கூட சில தகவல்கள் வெளியாகின. அப்படியிருக்கையில், வெறும் 43 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு, நிதிஷ் குமார் ஐந்து ஆண்டுகள் பீகாரை ஆட்சி செய்வது சந்தேகமே'' என்கிறார்கள்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி

Also Read: பீகார் தேர்தல்: சிராக் பாஸ்வான் மூலம் நிதிஷ் குமார் கட்சியை காலி செய்ததா பா.ஜ.க?

மேலும், `` `மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகத் திட்டமிட்டு களமிறக்கி, நிதிஷ் குமாரை பலவீனப்படுத்திவிட்டது பா.ஜ.க' என்கிற கருத்து பீகார் முழுவதுமே பேசப்படுகிறது. அப்படியிருக்கையில் பா.ஜ.க கூட்டணியில் நிதிஷ் குமார் தொடர்வது அவ்வளவு நல்லதல்ல. எனவே, அவர் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து ஆட்சியமைப்பதே ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

`நிதிஷ் குமார், பீகாரின் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் நீடிப்பாரா?' என்பது குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பகிருங்கள்!


source https://www.vikatan.com/government-and-politics/election/will-nitish-kumar-rule-bihar-continuously-for-next-5-years

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக