Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

ஜெகன் மோகன் Vs. நீதிபதி: `100 திட்டங்களுக்கு எதிரான உத்தரவுகள்' - 8 பக்கக் கடிதப் பின்னணி!

அதிரடியான திட்ட அறிவிப்புகள் மூலம் குறுகியகாலத்தில் இந்திய மக்களிடையே பிரபலமடைந்தவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முதியோர்கள் உதவித்தொகை உயர்வு, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குச் சம்பள உயர்வு, காவலர்களுக்கு வார விடுமுறை, சுயதொழில் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை, தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவிகித வேலைவாய்ப்பு, கொரோனா ஊரடங்கால் தவிக்கும் சுயஉதவிக்குழுப் பெண்களுக்கு 0 சதவிகித வட்டியுடன் கடன் எனப் பல அதிரடி திட்டங்களை அறிவித்தவர் ஜெகன் மோகன் ரெட்டி. பதவியேற்ற ஒன்றரை ஆண்டுக் காலத்தில், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி, ஆந்திர மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் ஜெகன்.

ஜெகன் மோகன் ரெட்டி

தற்போது மீண்டுமோர் அதிரடியைக் கிளப்பியிருக்கிறார் ஜெகன். ஆனால், இம்முறை திட்ட அறிவிப்பின் மூலமில்லை; ஒரு கடிதத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அவர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான என்.வி.ரமணா மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு எட்டுப் பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஜெகன். இந்தக் கடிதத்தைக் கடந்த சனிக்கிழமை அன்று ஊடகங்களுக்கு வெளியிட்டார் அவரின்ஆலோசகரான அஜேயா கல்லம் (Ajeya Kallam).

நீதிபதி பாப்டே

அந்தக் கடிதத்தில், ``ஆந்திர உயர் நீதிமன்றத்தின் சில நீதிபதிகள், எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணாவின் தலையீடு இருக்கிறது. நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மே 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து சந்திரபாபு நாயுடு அரசாங்கம், ஜூன் 2014 முதல் மே 2019 வரை மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பிறகுதான் ஆந்திர மாநில நீதித்துறை விவகாரங்களில் நீதிபதி ரமணா தலையிடத் தொடங்கினார். தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடைய சில முக்கிய விவகாரங்கள், குறிப்பிட்ட சில உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது'' என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெகன்.

மேலும், ``சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக்க முயன்றபோது நடைபெற்ற நில அபகரிப்பு ஊழலில், நீதிபதி என்.வி.ரமணாவின் இரண்டு மகள்களுக்கும் தொடர்பிருக்கிறது. இது குறித்து ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்ததால், ஆந்திர உயர் நீதிமன்றங்கள் மூலம் ரமணா அதைத் தடுக்கப் பார்க்கிறார். இதன் காரணமாகவே, `நில அபகரிப்பு ஊழல் வழக்கு குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது'' என்றும் ஜெகன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி

Also Read: ஜெகன் மோகன் ரெட்டி... தடம் மாறும் தவப்புதல்வன்!

மேலும், அந்தக் கடிதத்தில், மாநிலத் தலைநகரை மாற்றும் விவகாரம், சட்ட மேலவைக் கலைப்பு, மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றும் முடிவு என ஜெகன் மோகன் ரெட்டி அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதைப்போல ஆறுகளின் சூழலியலைப் பாதுகாப்பதற்காக, அவற்றின் கரையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என மாநில அரசு எடுத்த முடிவுக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீது குற்றம்சாட்டி எழுதியிருக்கும் இந்தக் கடிதம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரபரப்பான இந்தக் கடிதம் வெளியானதையடுத்து ஆந்திர முதல்வர் தரப்பில் அவரது முதன்மை ஆலோசகர் அஜேயா கல்லம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், ``ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 18 மாத ஆட்சியில் அரசுத் திட்டங்களுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றம் சுமார் 100 உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவுக்கு எதிரான ஆதாரங்களைத் தலைமை நீதிபதி பாப்டேவிடம் சமர்ப்பித்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரு சில நீதிபதிகள் செய்யும் தவறுகள், நேர்மையாகச் செயல்படும் பெரும்பாலான நீதிபதிகளைப் பாதித்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் உண்மை நிலையை விளக்கி முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்’’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நீதிபதி என்.வி.ரமணா
நீதிபதி என்.வி.ரமணா, ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பொன்னாவாராம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர், 2000-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2013 முதல் 2014 வரை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். அடுத்த ஆண்டு மத்தியில் எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெறவிருக்கிறார். அவரின் ஓய்வுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கடிதத்தின் பின்னணியாகச் சில விஷயங்களைச் சொல்கிறார்கள் ஜெகனின் ஆதரவாளர்கள். சொந்த மாநிலத்தில், தனது அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்துக்கும் உயர் நீதிமன்றம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாலும், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும்தான் ஜெகன் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

`` 2017-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நீதிமன்றங்களுக்குத் தலைமைப் பொறுப்புவகிப்பவர் என்.வி.ரமணாதான். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக 2012-ம் ஆண்டு ஜெகன் மீது பதியப்பட்ட வழக்கை அந்தச் சிறப்பு நீதிமன்றங்களுள் ஒன்றுதான் விசாரித்துவருகிறது. கடந்த செப்டம்பர் 16-ம் தேதி `சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உத்தரவிட்டார் என்.வி. ரமணா. அதன்படி சில கால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதற்கடுத்த நாளான அக்டோபர் 10-ம் தேதியன்று ஜெகனின் ஆலோசகரான அஜேயா கல்லம் இந்தக் கடிதம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். எனவே, இந்த வழக்கிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளக்கூட இந்தக் கடிதத்தை ஜெகன் எழுதியிருக்கலாம். அதாவது, உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீதும், சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதும் குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைத்துக்கூட ஜெகன் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கலாம்'' என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டி

Also Read: ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

ஜெகன் மோகன் ரெட்டியின் கடிதம் குறித்து, ``இந்தக் குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருக்கின்றன. உடனடியாக நம்பகத்தன்மை கொண்ட விசாரணை தேவை'' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்.

``அந்தக் கடிதத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் குறித்து, குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருப்பதால், ஜெகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுமா அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இது குறித்து விளக்கம் அளிப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/what-is-he-reason-behind-andra-cm-jagans-letter-to-sc-cheif-justice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக