Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

சென்னை: `காலையில் பெண் பார்க்கும் படலம்; இரவில் தற்கொலை' - பெண் இன்ஜினீயரின் விபரீத முடிவு

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (57). இவரின் மனைவி ஷீலா (48). இந்தத் தம்பதியருக்கு லதீஷா (25) என்ற மகளும், மாதேஷ் (20 ) என்ற மகனும் இருக்கிறார்கள். அம்பத்தூரிலுள்ள தனியார் கம்பெனியில் ஆபரேட்டராக ராஜ் பணியாற்றிவருகிறார். லதீஷா, இன்ஜினீயரிங் படித்துவிட்டு சீனியர் இன்ஜினீயராக எம்என்சி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்துவந்தார்.

திருமுல்லைவாயல் காவல் நிலையம்

லதீஷாவுக்குத் திருமணம் செய்ய அவரின் பெற்றோர் முடிவு செய்தனர். `எனக்குத் திருமணம் வேண்டாம். அதில் விருப்பம் இல்லை’ என லதீஷா கூறியிருக்கிறார். அதற்கு அவரின் பெற்றோர், `உனக்கு 25 வயதாகிவிட்டது. அதனால், உனக்கு வாழ்க்கைக்கு துணை வேண்டும்' என்று அறிவுரை கூறி திருமணத்துக்கு சம்மதிக்கவைத்திருக்கிறார்கள். இதையடுத்து 11.10.2020-ம் தேதி காலையில் தூரத்து உறவினர்கள் லதீஷாவைப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளையைப் பிடித்துவிட்டது.

லதீஷாவின் வீட்டில் அந்த மாப்பிள்ளைக்கே மகளைத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, அது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டார் பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்தச் சமயத்தில் லதீஷா, மீண்டும் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார். அப்போதும் லதீஷாவின் பெற்றோர் புத்திமதி சொல்லியிருக்கிறார்கள். பிறகு, அலுவலக வேலை பார்ப்பதற்காக மாடியிலுள்ள தனி அறைக்கு லதீஷா சென்றுவிட்டார். இரவு 9:30 மணியளவில் அவரைச் சாப்பிட வருமாறு அழைக்க வீட்டிலுள்ளவர்கள் மாடிக்குச் சென்றிருக்கிறார்கள். அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால் கதவைத் தட்டியிருக்கிறார்கள். ஆனால், லதீஷா கதவைத் திறக்கவில்லை. அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

Also Read: `என் சாவுக்கு இந்திய அரசுதான் காரணம்!’- 28 மாதம் சம்பளம் கொடுக்காததால் இன்ஜினீயர் தற்கொலை

எப்ஐஆர்

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செனறு பார்த்தபோது லதீஷா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், லதீஷாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், நாடித்துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறியிருக்கிறார்கள். உடனடியாக லதீஷாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே லதீஷா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார், சம்பவ இடத்துக்கு வந்து லதீஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அவரின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-engineer-commits-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக