Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

`கருணாநிதி இருந்த வரையில்தான் மதிப்பு!'- அனலை ஏற்படுத்திய அறிவாலய நிதி உதவி

கொரோனா நிவாரண நிதியாக, தி.மு.க பேச்சாளர்களுக்குத் தலா 5,000 ரூபாயை நிவாரண நிதியாகக் கொடுத்திருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். `சட்டமன்றத் தேர்தலிலிருந்தே பேச்சாளர்களை முழுமையாக முடக்கிவிட்டது கட்சி. கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனத்தில் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதைச் சரிக்கட்டவே நிவாரண உதவியை அளித்திருக்கிறார்கள்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிய நேரத்தில், `ஒன்றிணைவோம் வா...' என்ற திட்டத்தை முன்னெடுத்தது தி.மு.க. அதன்படி, மாவட்டங்களில் உதவி தேவைப்படுகிறவர்களுக்கு தி.மு.க நிர்வாகிகள் தேடிச் சென்று உதவிகளை வழங்கினர். அதன் பிறகு, உதவிகளும் படிப்படியாகக் குறைந்துவிட்டன. பலரும் தங்கள் கைக்காசைப் போட்டு செலவு செய்ததால், அடுத்தடுத்து உதவி செய்ய வாய்ப்பில்லாமல் ஒதுங்கிவிட்டனர். `மற்றவர்களுக்கெல்லாம் உதவி செய்கிறார்கள், கட்சியை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டும் பேச்சாளர்களைக் கண்டுகொள்ளவில்லை' என்ற குமுறல் அதிகரித்ததால், அவர்களுக்குத் தலா 5,000 ரூபாயை தி.மு.க தலைமை கொடுத்தது. தற்போது இரண்டாம்கட்டமாக 5,000 ரூபாய் நிவாரண உதவியைக் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இந்த உதவி, பேச்சாளர்கள் மத்தியில் வரவேற்பையும் அதிருப்தியையும் ஒருசேர அளித்திருக்கிறது.

தி.மு.க தலைமையின் நிவாரண உதவி குறித்து பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய பேச்சாளர் ஒருவர், `` தி.மு.க-வில் மொத்தம் 600 பேச்சாளர்கள் இருக்கிறார்கள். கலைஞர் இருந்தவரையில், மாவட்ட நிர்வாகிகள், பேச்சாளர்களின் பெயரைச் சொல்லி கூட்டத்துக்கு வசூல் செய்வார்கள். அந்தப் பணத்தில் பேச்சாளர்களுக்கும் ஒரு தொகை வந்து சேரும். அவர்கள் நடத்திய பிரமாண்டக் கூட்டங்களைப் பற்றி ஒரு மாதத்துக்குப் பேசுவார்கள். இதனால் நிர்வாகிகளும் உற்சாகமாக இருந்தனர். சொல்லப்போனால், பேச்சாளர்கள்தான் நிர்வாகிகளைக் காப்பாற்றினார்கள். கட்சியைப் பற்றியும் நிர்வாகிகளைப் பற்றியும் கூட்டத்தில் பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்துவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்தது.

ஸ்டாலின்

கட்சியின் கொள்கைளைப் பரப்பும் இடத்தில் பேச்சாளர்கள் இருந்தார்கள். கட்சி முன்னெடுக்கும் தீர்மானங்கள், கட்சியின் நிலைப்பாடு, எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வது என இவர்களின் பேச்சுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. அதிலும், அ.தி.மு.க 10 கூட்டங்களை நடத்துகிறது என்றால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 25 கூட்டங்களை தி.மு.க நடத்த வேண்டும். மேலும், பேச்சாளர்களுக்கு மாதந்தோறும் கூட்டங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும். இவையெல்லாம் கொள்கை பரப்புச் செயலாளர்களின் முக்கியமான பணிகள். இந்தநிலையில், கொள்கை பரப்புச் செயலாளராக திருச்சி சிவாவும் ஆ.ராசாவும் வந்த பிறகு பேச்சாளர்களை அழைத்துக் கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில், `இனி கூட்டமெல்லாம் கிடையாது' எனக் கூறி ஆளுக்கு 10,000 ரூபாய் பணத்தை மஞ்சள் பையில் போட்டுக் கொடுத்தார்கள்.

பேச்சாளர்கள் கூட்டம் கூட்டிய காலம்போய், இவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். ஒரு பிரசாரப் படையை மொத்தமாக முடக்கியதுதான் இவர்கள் செய்த சாதனை. இப்போது பணம்தான் பிரசாரமாக இருக்கிறது. அண்மையில், கொள்கை பரப்புச் செயலாளராக லியோனியும் சபாபதி மோகனும் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் லியோனிக்கும் ஐ.பெரியசாமிக்கும் ஆகாது. கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் சபாபதி மோகனுக்கும் ஒத்துவருவதில்லை. இதில், பொன்முடியின் சிபாரிசில் கொள்கை பரப்புச் செயலாளராக சபாபதி மோகன் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே, பதவி தருவதாக லியோனிக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டது தலைமை. அதன் அடிப்படையில் அவருக்குப் பதவி கொடுக்கப்பட்டது.

Also Read: அடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

இந்தப் புதிய நியமனங்களால் பேச்சாளர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு, நிவாரண உதவி அறிவிக்கப்பட்டதாகக் கருதுகிறோம், இந்தப் பணம் வேண்டாம் எனவும் சிலர் ஒதுங்கிவிட்டனர். கலைஞர் இருந்தவரையில், பேச்சாளர்களுக்குப் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஒரு கூட்டத்துக்கு 5,000 முதல் 50,000 ரூபாய் வரையில் கொடுத்தார்கள். இப்போது மாவட்டச் செயலாளர்களே பேச்சாளர்களாக மாறிவிட்டனர். பேச்சாளர்களில் சுமார் 400 பேர் வரையில் வறுமையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வேறு தொழில்களும் தெரியாது. பேச்சாளர்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க வேண்டியது கொள்கை பரப்புச் செயலாளரின் பணிகள். மாதத்துக்கு ஐந்து கூட்டங்களாவது ஏற்பாடு செய்து தர வேண்டும். தலைமையும் ஒரு பேச்சாளருக்கு 10 கூட்டங்களை அறிவிக்க வேண்டும். தி.மு.க-வில் பேச்சாளர்களின் பெயர் வெளியில் வந்தே ஐந்து வருடங்களாகிவிட்டன.

கருணாநிதி எப்போது படுக்கையில் விழுந்தாரோ, அப்போதே பேச்சாளர்களை முடக்கிவிட்டார்கள். இப்போதெல்லாம் ஸ்டாலின், உதயநிதியிடம் தேதி வாங்கி, கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் போவது மட்டும்தான் பொதுக்கூட்டம் என்றாகிவிட்டது. கட்சிக்காகப் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், இப்போதெல்லாம் மைக் பிடித்தாலே பேச்சாளர்கள் பலரும் உளறிக் கொட்டுகின்றனர். கூட்டத்துக்குப் போகாததால் அவர்களின் வாழ்வாதாரமும் முடங்கிவிட்டது" என்றார் வேதனையுடன்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/dmk-speakers-slams-party-chief-over-corona-relief-fund

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக