Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

RT-PCR-ல் தவறான முடிவுகள்... கோவிட்-19 தொற்றைக் கண்டறிய சி.டி ஸ்கேன் மட்டும் போதுமா?

கோவிட்-19 நோயைப் பற்றி மட்டுமல்ல, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சைகளைப் பற்றியும் நாள்தோறும் புதிய புதிய செய்திகள், விவாதங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் பரிசோதனையைப் பற்றிய குழப்பம் ஒன்று எழுந்துள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியிலிருந்து சளி மாதிரியைச் சேகரித்துச் செய்யப்படும் பரிசோதனை இது.

இந்தப் பரிசோதனை முடிவுகளில் தவறுகள் ஏற்படுவதாகவும், அதே நேரம் நுரையீரல் பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்க்கும்போது கொரோனா தொற்று காணப்படுகிறது; அதனால் ஆர்.டி பி.சி.ஆருக்குப் பதில் சி.டி ஸ்கேன் செய்வதுதான் நல்லது என்றும் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். சில மருத்துவர்களும்கூட முதலில் சி.டி ஸ்கேன் எடுக்கும்படி பரிந்துரைக்கின்றனர்.

இந்நிலையில் ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்ர் ஆகியோரை டேக் செய்து இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதில், ``உங்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டுமானால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளவும். ஆர்.டி பி.சி.ஆர்தான் கோவிட்-19 நோய்க்கான தரமான பரிசோதனை.

ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பிறகு சி.டி ஸ்கேன் பரிசோதனை தேவைப்பட்டால் அதற்கு மருத்துவர் பரிந்துரைப்பார். அதன் பிறகு, எடுத்தால் போதுமானது. நீங்களாகவே சி.டி ஸ்கேன் பரிசோதனைக்குச் செல்ல வேண்டாம். சி.டி ஸ்கேன் பரிசோதனையில் கதிர்வீச்சு வெளிப்பாடு காணப்படும். அதனால் நுரையீரலில் தொற்று காணப்படும் பட்சத்தில் மட்டுமே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். தமிழக அரசு இது குறித்த நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவதுடன் அதைக் கண்காணிக்கவும் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படி கோவிட்-19 பரிசோதனை பற்றிய பல்வேறு கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் கோவிட்-19 பாதிப்பை அறிய எந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் எனத் தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்:

``கோவிட்-19-க்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் `கோல்டு ஸ்டாண்டர்டு' (Gold Standard) என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையின் உணர்திறன் (Sensitivity) என்பது 70 சதவிகிதம்தான் இருக்கும். அதன் காரணமாக, ஃபால்ஸ் பாசிட்டிவ், ஃபால்ஸ் நெகட்டிவ் எல்லாம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக நோய்த்தொற்று ஏற்படும் ஆரம்ப நாள்களில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் சிறந்தது. தொற்று ஏற்பட்டு ஐந்து நாள்கள் கடந்துவிட்டன என்றால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையுடன் சி.டி ஸ்கேன் பரிசோதனையும் நல்லது. நுரையீரலில் இருக்கும் கோவிட்-19 தொற்றை சி.டி ஸ்கேன் 100 சதவிகிதம் சரியாகக் காட்டிவிடும். சி.டி ஸ்கேன் எனும்போது அரை மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வருவதற்கு ஒருநாள் ஆகிவிடும்.

நெகட்டிவ் முடிவு ஏன் வருகிறது?

தொற்று ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் பட்சத்தில் முடிவு நெகட்டிவ்வாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா வைரஸ் கிருமிகள் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலுக்கு இறங்கிவிடும். அப்போது மூக்கில் சளி மாதிரியை எடுத்துப் பரிசோதிக்கும்போது நெகட்டிவ் என்று வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மாதிரியைச் சேகரிப்பவர் சரியான நுட்பத்தைப் பயன்படுத்தி மாதிரியை எடுக்காவிட்டாலும் தவறான முடிவே வரும்.

Dr.Sudarshan

காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைத்தது போன்ற உணர்வு, வாசனை, சுவை தெரியாதது போன்ற கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டு இரண்டு முதல் ஐந்து நாள்கள்தான் ஆகின்றன என்றால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் சிறந்தது. ஆனால், 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சி.டி ஸ்கேனும் எடுப்பது நல்லது.

என்னிடம் ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அறிகுறிகள் ஏற்பட்டு 8-வது நாள்தான் வந்தார். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவுதான் வந்தது. அறிகுறிகளின் அடிப்படையில் சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது தீவிர கோவிட்-19 தொற்று காணப்பட்டது. 70 சதவிகிதம் நுரையீரல் தொற்றுக்கு உள்ளாகியிருந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டி வந்தது.

CT Scan

Also Read: சி.டி ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர்... கொரோனாவைக் கண்டறிய சிறந்த பரிசோதனை எது? #ExpertOpinion

மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு இருக்கும் அறிகுறிகளைப் பொறுத்து சி.டி ஸ்கேன் எடுப்பதா வேண்டாமா என்று மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். நோயாளிகளுக்கு அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் ஆலோசனை கேட்கும் வசதி இருந்தால் முதலில் அதைச் செய்ய வேண்டும். அதில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி அடுத்தகட்ட சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அறிகுறிகள் தோன்றியதும் அருகிலிருக்கும் மருத்துவமனையை அணுக வேண்டும். அதை விடுத்து சுயமாக எந்தப் பரிசோதனைக்கும் செல்வது நல்லதல்ல" என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/rt-pcr-or-ct-scan-which-one-is-best-for-diagnosing-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக