Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

ஓராண்டுக்கும் மேல் கழிப்பறையில் அடைத்துவைக்கப்பட்ட பெண்; கணவர் கைது!- ஹரியானா அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள ரிஷிபூரில் வசித்து வரும் நரேஷ்குமார் என்பவர் தன்னுடைய மனைவியை (வயது 35) கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தன் வீட்டு கழிப்பறையில் அடைத்து வைத்துஉள்ளார். இதுபற்றி அறிந்த மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் புதன்கிழமை அப்பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஹரியானாவில் மீட்கப்பட்ட பெண்

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி சுபாஷ், `சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு, அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதனாலேயே அவரைக் கழிப்பறையில் அடைத்துவைத்ததாகவும் அந்தப் பெண்ணின் கணவர் கூறுகிறார். இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இச்சம்பவம் குறித்து பானிபட் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர் ரஜினி குப்தா கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் அறிந்ததும் நாங்கள் குழுவாக சென்று அப்பெண்ணை மீட்டோம். நாங்கள் மீட்கும்போது அப்பெண் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவற்று இருந்தார். அவர் அடைக்கப்பட்டு இருந்த கழிப்பறை மிகவும் சிறியதாகவும், சுகாதாரமின்றியும் இருந்தது. அந்த பெண்ணுக்குத் தேவையான உணவும், நீரும்கூட அவரது கணவர் நரேஷ்குமார் வழங்கவில்லை. அந்தப் பெண்ணால் நடக்கக் கூட இயலவில்லை. 17 வருடத்திற்கு முன் நரேஷ்குமாருக்கும், இவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்’’ என்றார்.

மேலும், இவருக்கு மனநலம் பாதித்துள்ளது என்பதற்கான சான்று எதையும் அவரது கணவர் நரேஷ்குமார் சமர்ப்பிக்கவில்லை என்றும் ரஜினி குப்தா குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான நரேஷ்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 498A, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் சனோலி காவல் நிலைய ஆய்வாளர் சுரேந்தர் டாஹியா தெரிவித்தார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/haryana-woman-locked-in-toilet-over-one-year-rescued

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக