Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

`தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறதா?!' - உண்மை நிலவரம் என்ன?

தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன.?

தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 95,000-க்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் நாளொன்றுக்கு அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலம் தமிழகம்தான். இதுவரை 85,84,041 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

14.10.2020 அன்றைய நிலவரப்படி, பாதிப்படைந்தவர்கள் மொத்தம் 6,70,392 பேர். அவர்களில் குணமடைந்தவர்கள் 6,17,403 பேர். உயிரிழந்தவர்கள் 10,423 பேர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் 42,566 பேர். தற்போதைய நிலையில் பாதிப்படைப்பவர்களைவிட, குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

புதிய பாதிப்புகள் குறைத்துக் காட்டப்படுகின்றனவா?

பொது முடக்கம் அமலிலிருந்தபோது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், தற்போது தமிழகம் இயல்புநிலையை அடைந்திருக்கிறது. இப்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறதே என்ற சந்தேகம் நம்மில் பலரின் மனதில் எழக்கூடும். அதே சந்தேகம் நமக்கும் ஏற்பட, பரிசோதனை மேற்கொள்ளும் சில லேப்களில் இருப்பவர்களிடம் உண்மை நிலவரம் என்ன என்பதைக் கேட்டறிந்தோம்.

கொரோனா பரிசோதனை

``ஆரம்பத்திலிருந்து இப்போதுவரை, பரிசோதனை முடிவு என்னவாக வருகிறதோ அதை அப்படியேதான் கொடுத்து வருகிறோம். இருப்பவர்களுக்கு `இல்லை’ என்றோ, இல்லாதவர்களுக்கு `இருக்கிறது’ என்றோ மாற்றிக் கொடுத்ததும் இல்லை. அப்படிக் கொடுக்கச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தியதும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், முன்பெல்லாம் மதியத்தோடு அன்றைய நிலவர கணக்கைக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஆனால், தற்போது மாலை வரை புதிய பாதிப்பு எண்ணிக்கை விவரங்களைச் சேகரிக்கிறார்கள்" என்று கூறினார்கள்.

தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?

இந்திய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு யுக்திகளைத் தமிழக அரசு கையாண்டுவருகிறது. குறிப்பாக `சென்னை ஃபார்முலா’ என்பதைத் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் கடைப்பிடித்துவருகின்றன. தெருதோறும் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம்கள் நடத்துவது; வீடு வீடாகச் சென்று அறிகுறிகள் இருக்கும் நபர்களைக் கண்டறிவது; பாதிக்கப்பட்ட வீடுகளில் இருப்பவர்களுக்கு தனி கவனம் செலுத்த ஃபோகஸ்டு வாலன்டியர்; நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்களை நடத்துவது... எனப் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது தமிழக அரசு. இந்த நடவடிக்கைகளின் விளைவாக அதிகரித்துவந்த பாதிப்பு பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழகத்தின் பிற மாவட்டங்களும் செயல்படுத்தத் தொடங்கின.

பொதுமக்களின் பங்களிப்பு:

நீங்கள் இந்த செய்தியைப் படிக்கும்போது, நீங்களும் சரி... உங்களைச் சுற்றியிருப்பவர்களும் சரி... எத்தனை பேர் முகக்கவசம் அணிந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். பொதுமக்களாகிய நம் பொறுப்புணர்வு என்ன என்பது தெளிவாகப் புரிந்துவிடும். உலக சுகாதார நிறுவனம் தொடங்கி கொரோனா விவகாரத்தில் அனைவரும் கூறுவது முகக்கவசமும், தனி மனித இடைவெளியும்தான். இதை நம்மில் எத்தனை பேர் சரியாகக் கடைப்பிடிக்கிறோம்?

`தமிழகத்தில், கொரோனா பரவல் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்ததைவிட தற்போது 35 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் எந்தப் பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதில்லை’ என்று சமீபத்திய ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

`அனைவரும் தொடர்ந்து மூன்றே வாரங்களுக்கு முகக்கவசம் அணிந்து, சரியான தனிமனித இடைவெளியைப் பின்பற்றினால் கொரோனா பரவல் என்பது இல்லாமல் போய்விடும்’ என்று அரசு கூறிவருகிறது. கொரோனா காலத்திலும் அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. முறைகேடு புகார்கள் இருக்கின்றன. அதேவேளையில், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிடச் சிறப்பாக இருக்கின்றன என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் தமிழகத்தின் வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பு.

மகாளய அமாவாசை அன்று சென்னையில் கூடிய மக்கள் கூட்டம்

கேரளாவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது!

இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான். மற்ற மாநிலங்களில் தொற்றின் பாதிப்பு மிக அதிகமாக இருந்த காலகட்டத்திலேயே கேரளாவில் பாதிப்பு 500-க்கும் குறைவாகத்தான் இருந்தது. அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் கேரளா பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் , தற்போது கேரளாவின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நாளொன்றுக்குப் புதிதாக 10,000-க்கும் அதிகமான தொற்றுகள் உறுதிசெய்யப்படுகின்றன. தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது கேரளாவில் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது ஓணம் பண்டிகைக்குப் பிறகுதான். மக்களின் கவனக்குறைவும் அலட்சியப்போக்கும்தான், பாதிப்பு அதிகமாவதற்குக் காரணங்களாக இருக்கின்றன.

கொரோனா

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைத்தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நம்மால் கண்கூடாகக் காண முடிகிறது. ``அட... கொரோனால்லாம் நமக்கு வராதுப்பா... சும்மா சளி இருந்தாலே கொரோனானு புடிச்சிட்டுப் போயிடுறாங்க. இந்த அரசாங்கம் காசு சம்பாதிக்கிறதுக்கு கொரோனான்னு நம்மைப் பிடிச்சுக்கிட்டுப் போறாங்க" என்று பேசும் மக்களை நாம் பார்த்திருப்போம். இப்படிப் பேசுமளவுக்கு கொரோனா வெறும் சாதாரண பாதிப்பல்ல என்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணராமல், பெரும் பாதிப்பைச் சந்தித்த ஒரு நாட்டின் கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறோம்.

ஈக்வடார் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் குவயாக்வில் (Guayaquil) முக்கியமான நகரம். இந்த நகரின் மொத்த மக்கள்தொகை 20 லட்சம். இயல்புநிலையிலிருந்த நகரில் திடீரென கொரோனா பரவல் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. உயிரிழப்பு உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பில் இறந்தவர்களின் உடல்களை ஆங்காங்கே சாலைகளில் வீசும் கொடுமை நடந்தது. நகரின் பல இடங்களில் அழுகிய நிலையில் உடல்கள் காணப்படும் அவலநிலைக்கு அந்த நகரம் ஆளானது.

Also Read: வேகமெடுக்கும் `கொரோனா இரண்டாம் அலை'... என்ன செய்யப்போகிறது இந்தியா?

இப்படி பல்வேறு சம்பவங்கள் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்தநிலைக்கு இன்னும் இந்தியா தள்ளப்படவில்லை. இந்தியாவில் 97,000 வரை சென்ற புதிய தொற்றுகளில் எண்ணிக்கை தற்போது 55,000-க்கு வந்திருக்கிறது. ஐ.சி.எம்.ஆர் மேற்கொண்ட ஆய்வில் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும். கொரோனவைக் கட்டுக்குள் வைப்பதும், அதைக் கட்டவிழ்த்து விடுவதும் மக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/is-the-number-of-corona-infections-decreasing-in-tamil-nadu-what-is-the-real-situation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக