Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

ரஹானே வரமாட்டார், தாஹிருக்கும் NO... குழப்பிய விதிகள்... ஆர்வம் காட்டாத அணிகள்! #MidSeasonTransfer

2020 ஐபிஎல்-ல் முதல்முறையாக, ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை, மிட் சீசனில் அணிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியானது. ஆனால், இதற்கு இன்னும் எந்த அணியிடம் இருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. 7 போட்டிகள் முடிந்ததும், 2 போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை, அணிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம் என்பது பிசிசிஐ-ன் அறிவிப்பு. ஆனால், மிட் சீசன் விதியில் பல குழப்பங்கள் இருப்பதாக அணிகள் இந்த மிட் சீசன் டிரான்ஸ்ஃபருக்கு இதுவரை விண்ணப்பிக்கவேயில்லை.

மிட் சீசன் விதிகளை மீண்டும் தெளிவுபடுத்தி இன்று எல்லா அணிகளுக்கு மெயில் அனுப்பியிருக்கிறது பிசிசிஐ. ஆனால், சென்ற ஆண்டு ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களை (Uncapped) மாற்றிக்கொள்ள எந்த அணியும் முன்வராததுபோலவே, இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களையும் மாற்றிக்கொள்ள எந்த அணியும் இதுவரை முன்வரவில்லை.

#MidSeasonTransfer

மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் கடந்த அக்டோபர் 13-ம் தேதி தொடங்கியது. வீரர்களை மாற்றிக்கொள்ள அக்டோபர் 17-ம் தேதிதான் கடைசிநாள். ஆனால், நான்காவது நாளை நெருங்கிவிட்டபோதும், வீரர்களை மாற்றிக்கொள்வதற்கான தேவைகள் இருந்தும் இதுவரை எந்த அணியுமே இந்த டிரான்ஸ்ஃபரில் ஆர்வம் காட்டவில்லை. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உள்பட நான்கு வீரர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள், சென்னை அணிக்கு சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வேண்டும். ஆனாலும், எந்த அணியும் இந்த டிரான்ஃபருக்குத் தயாராகயில்லை.

என்ன பிரச்னை?!

பிசிசிஐ-ன் குழப்பும் விதிகள்தான் காரணம் என்கின்றன அணிகள். காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்றாக இந்த மிட் சீசன் வீரர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பதற்கு இன்னும் தெளிவான பதில்வரவில்லை. அதேபோல் ஒரு அணியில் இருந்து கொண்டுவரப்படும் வீரர், அவர் முன்பிருந்த அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடக்கூடாது என்கிற விதியில் எந்த நியாயமும் இல்லை என்கிறார்கள். அதாவது சென்னை இப்போது டெல்லியில் இருந்து அஜிங்கியா ரஹானேவை எடுத்தால், சென்னை டெல்லிக்கு எதிராக விளையாடும் போட்டியின் ப்ளேயிங் லெவனில் ரஹானேவை சேர்க்கக்கூடாது. இந்த விதி வேலைக்காகாது என்கின்றன அணிகள்.

#CSK

இதற்கிடையே சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் ''மிட் சீசன் டிரான்ஸ்ஃபரில் சென்னை அணி எந்த ப்ளேயரையும் வாங்காது, விற்காது. எங்களுக்கு வீரர்களை மாற்றிக்கொள்வதில் எந்த விருப்பமும் இல்லை. கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் இந்த டிரான்ஸ்ஃபரில் பங்கேற்கப்போவதில்லை'' என வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

Also Read: IPL 2020: `ரகிட ரகிட' கெயில்; கோலி எடுத்த தவறான முடிவுகளால் பஞ்சாபிடம் வீழ்ந்த ஆர்சிபி! #RCBvKXIP

அதேபோல் டெல்லி அணியும் ரஹானேவை டிரேட் செய்ய எந்த விருப்பமும் இல்லை என்று சொல்லிவிட்டார். அதனால் ரஹானேவுக்கு பதில் இம்ரான் தாஹிர் என்கிற யூகங்களுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

#MidSeasonTransfer

விதிகளைத்தாண்டி மிட் சீசன் டிரான்ஸ்ஃபரில் அணிகள் ஆர்வம் காட்டாததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. "ஒரு அணியில் இருக்கும் வீரரை பாதி தொடரின் போது மாற்றினால், இங்கிருந்து அணி மாறும் வீரர், புதிய அணிக்குள் போய் பழைய அணியின் பிளான், வியூகங்களை சொல்லிவிடக்கூடும்" என எல்லா அணிகளின் நிர்வாகமும் நினைப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் ஐபிஎல்-ல் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது.

மிட் சீசன் டிரான்ஸ்ஃபருக்கு நாளைதான் கடைசி நாள் என்பதால், ஏதும் மாற்றங்கள் நிகழ்கிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-teams-not-interested-in-mid-season-transfer

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக