Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

புதுச்சேரி: `மோடியின் தலைமையை ஏற்போருடன் கூட்டணி!' - பா.ஜ.க பொதுச்செயலாளர் ரவி

மாநில பா.ஜ.க நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளருமான ரவி எம்.எல்.ஏ புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்துக்கு இன்று வருகை தந்திருந்தார். நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பா.ஜ.க-வில் இணைவதற்காகப் பல அரசியல் தலைவர்களும், மாற்றுக் கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் எங்களைத் தொடர்புகொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க தேசியச் செயலாளர் எம்.எல்.ஏ ரவி

பா.ஜ.க-வைப் பலப்படுத்துவதுதான் எங்களின் அடிப்படை இலக்கு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, முழு தோல்வியைடைந்திருப்பது கொரோனா காலத்தில் வெளிப்படையாகியிருக்கிறது. அதனால்தான், மத்திய அரசு புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கவிருப்பதாகத் தவறான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோன்ற எண்ணமும் ஏதுமில்லை.

தங்கள் தோல்வியை மறைக்கவே பா.ஜ.க மீது பொய்க் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். எந்த அடிப்படையில் அப்படிக் குற்றம்சுமத்துகிறார் என்று தெரியவில்லை. அதேபோல புதுச்சேரி ராஜ்நிவாஸ் பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமாகச் செயல்படுவதாக முதல்வர் குற்றம்சாட்டுவதும் தவறானது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் சாலையில் இறங்கிப் போராடுகிறோம்.

Also Read: `தமிழகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்’ - பா.ஜ.க பொதுச் செயலாளர் தகவல்!

ஆளுநர் அலுவலகத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அதேபோல், புதுச்சேரியில் ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற கேள்வியும் கட்சி அரசியலுக்கு தொடர்பில்லாதது. மோடியின் தலைமையை ஏற்போருடன் இணைந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்போம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-national-secretary-ravi-slams-puducherry-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக