Ad

புதன், 14 அக்டோபர், 2020

IPL 2020: சிக்ஸர் ஷார்ஜா, வேக அபுதாபி, ஸ்பின் துபாய்... வின்னிங் ஃபார்முலா என்ன? #MidSeasonReview

முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது ஐபிஎல். இரண்டாம் சுற்றை சென்னை வெற்றிகரமாகத்தொடங்கிய நிலையில், அடுத்து டெல்லி தனது வின்னிங் ஃபார்முலாவை தொடர்கிறது. ராஜஸ்தான் எளிதில் வெற்றிபெற்றிருக்கவேண்டிய போட்டியில் தன்னுடைய மிகச்சிறந்த பெளலர்களால் வெற்றிபெற்றிருக்கிறது டெல்லி.

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் நேற்றோடு 30 போட்டிகள் முடிந்துவிட்டன. முதல் சுற்று ஐபிஎல் என்ன தவறுகள் செய்யக்கூடாது, வெற்றிக்கு என்ன செய்யவேண்டும் என நிறைய படிப்பினைகளைக் கற்றுத்தந்திருக்கிறது. அவற்றைப் பார்க்கும் முன் இந்த ஐபிஎல்-ன் சில சிறப்பம்சங்கள் இங்கே!

Tushar Deshpande

2020 ஹீரோஸ்!

புதிய திறமையாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறது 2020 ஐபிஎல். குறிப்பாக இந்திய வீரர்கள் பலருக்கும் பெரிய அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. ராஜஸ்தானின் திவேதியா புதிய ஃபினிஷராக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார். பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் முதல் 19 பந்துகளில் 8 ரன்கள் அடித்திருந்தவர், அடுத்து ஆடிய ஆட்டத்தை ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அடுத்த 12 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ராஜஸ்தானை வெற்றிபெறவைத்தார் திவேதியா. இதேபோன்றதொரு இன்னிங்ஸை ஹைதரபாத்துக்கு எதிராகவும் ஆடி தன்னுடைய திறனை நிரூபித்தார் திவேதியா. ரஷித்கானின் ஓவரில் எல்லாம் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து அசத்தியவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

தமிழகத்தின் நடராஜன் யார்க்கர் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். முதல் 7 போட்டிகளில் மட்டும் 27 யார்க்கர்கள் போட்டிருக்கிறார் நடராஜன். இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பும்ரா. அவர் வீசியது 17 யார்க்கர்கள்தான். அடுத்த ஐபிஎல் தொடரில் நடராஜனுக்கான டிமாண்ட் உச்சத்தைத் தொடலாம். மலிங்காவைப்போல இவர் இன்னும் பட்டைத்தீட்டப்படலாம்.

பெங்களூருவின் தேவ்தத் படிக்கல் இந்தியாவுக்கான சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுக்கப்போகிறார். ஹைதராபாத்தின் பிரியம் கார்க் அடுத்தடுத்த ஐபிஎல்-களின் ஹீரோவாக மாறுவார். அதேபோல் நேற்று டெல்லி அணியில் களமிறங்கிய மும்பை வீரர் துஷார் தேஷ்பாண்டேவும் அடுத்தடுத்து நிறைய சம்பவங்கள் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

பார்ட்னர்ஷிப் பிரேக்கர்ஸ்!

பெரிய கூட்டணிகளை வீழ்த்தும் பார்ட்னர்ஷிப் பிரேக்கர்களாக இந்திய பெளலர்கள்தான் இருக்கிறார்கள். கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னாய், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, கமலேஷ் நாகர்கோட்டி என இளம் பந்துவீச்சாளர்கள் இந்த ஐபிஎல்-ல் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

Krunal, Bumrah, Axar, Hardik

வேகமே வெற்றி!

முதல் சுற்றின் முடிவில் வேகப்பந்துவீச்சாளர்களே விக்கெட்களை வீழ்த்தும் வல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. டாப் 10 பெளலர்களில் ரஷித் கான், சஹால் என இருவர் மட்டுமே ஸ்பின்னர்கள். ரபாடா, பும்ரா, போல்ட், நார்க்கியா, ஷமி, பேட்டின்சன், நடராஜன் என சர்வதேச ஸ்டார்களோடு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசிக்கொண்டிருக்கிறார்கள்.

டிராப் கேட்சஸ்!

இந்த ஐபிஎல்-ல் அற்புதமான, அதிசயிக்கத்தக்க வகையிலான பல கேட்ச்கள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியெல்லாம் கேட்ச் பிடிக்க முடியுமா என நிக்கோலஸ் பூரன் வியக்கவைத்திருக்கிறார். அதேசமயம் இந்த ஆண்டு அணிகளின் வெற்றி தோல்விகளை அதிக அளவில் தீர்மானித்ததே ஃபீல்டர்கள் நழுவவிட்ட எளிதான கேட்ச்கள்தான். நேற்று ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில்கூட கைக்கு வந்த திவேதியாவின் கேட்சை கோட்டைவிட்டார் நார்க்கியா. முதல் சுற்றின் முடிவில் 10-க்கும் மேற்பட்ட கேட்ச்களை தவறவிட்டிருக்கிறது பெங்களூரு. இந்த தவறவிட்ட கேட்ச்களால் இரண்டு போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. பஞ்சாபுக்கு எதிரானப் போட்டியில் கே.எல்.ராகுலின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டது பெங்களூரு. அன்று தனியாளாக 132 ரன்கள் அடித்து பஞ்சாபை வெற்றிபெறவைத்தார் ராகுல்.

பெங்களூருவைப்போல டெல்லியும் அதிக கேட்ச்களைத் தவறவிட்டிருக்கிறது. டெல்லி வெர்சஸ் பஞ்சாப் போட்டியில் அகர்வால் 40 ரன்களுக்குள் இருக்கும்போது கைக்கு வந்த கேட்சை தவறவிட்டார் பிரித்வி ஷா. அன்று அகர்வால் அடித்த மொத்த ரன்கள் 89.

கேட்ச்கள் மட்டுமல்லாமல் ஏகப்பட்ட ரன் அவுட் வாய்ப்புகளையும் ஃபீல்டர்கள் தவறவிட்டிருக்கிறார்கள்.

ஐபிஎல் 2020 | ரன் அவுட்

முதல் பேட்டிங்... அமைதியான பவர்ப்ளே!

முதல் பேட்டிங் எடுத்து, பவர்ப்ளே ஓவர்களில் அவசரப்படாமல் ஆடவேண்டும் என்பதையே முதல் சுற்றுப்போட்டிகள் கற்றுத்தந்திருக்கின்றன. கடந்த ஐபிஎல் போட்டிகளில் எல்லாம் முதல் 6 ஓவர்களில் அனல் பறக்கும். ஆனால், அரபு நாட்டில் நடக்கும் இந்த ஐபிஎல் போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் தேவையில்லாமல் விக்கெட்களை இழந்துவிடக்கூடாது என்பதில் பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்கிறார்கள். இதுவரையிலான 30 போட்டிகளில் பவர்ப்ளேவில் அடிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச ஸ்கோர் 69 ரன்கள்தான்.

முதல் ஆறு ஓவர்களில் 40-50 ரன்கள், அடுத்த 8 ஓவர்களில் இதேப்போல் இன்னொரு 40-50 ரன்கள் சேர்த்துவிட்டு கடைசி ஆறு ஓவர்களில் 60-80 ரன்கள் அடிப்பதை அணிகள் வழக்கமாக்கியிருக்கின்றன. கடைசி ஆறு ஓவர்களில் பெங்களூருவுக்கு எதிராக மும்பை அடித்த 103 ரன்கள்தான் இதுவரையிலான அதிகபட்ச டெத் ஓவர் ஸ்கோர்.

கிங் கோலி!

ஆரம்பப் போட்டிகளில் தடுமாறிக்கொண்டிருந்த கோலி ஃபார்முக்கு வந்துவிட்டார். சென்னைக்கு எதிராக அவர் அடித்த 90 ரன்கள் இந்த ஐபிஎல் தொடரில் மிக மிக முக்கியமான இன்னிங்ஸ். அதேபோல் மிகவும் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ஷிகர் தவானும் இப்போது வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால், இந்தியாவின் மற்ற சூப்பர் ஸ்டார்களான ரோஹித்தும், தோனியும் இன்னும் தடுமாறுகிறார்கள். ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைந்துவிட்டதோடு, அவரின் கதையை ஸ்பின்னர்களைக்கொண்டே எல்லா அணிகளும் முடித்துவிடுகின்றன. ஃபினிஷர் தோனி அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களைப் பறக்கவிடமுடியாத பதற்றத்தில் இருக்கிறார். பேட்ஸ்மேனாக அவர் சொதப்புவது, அவரது கேப்டன்ஸியையும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.

Kohli

வின்னிங் ஃபார்முலா!

அரபு பிட்ச்களில் சேஸ் செய்து வெற்றிபெறுவது மிகவும் கடினமாக மாறிக்கொண்டேயிருக்கிறது. அதனால் டாஸ் தோற்றால் மேட்ச்சையே தோற்றுவிடுவோம் என்கிற பயம் எல்லா அணிகளுக்குள்ளும் வர ஆரம்பித்துவிட்டது. இதுவரை நடந்திருக்கும் 30 போட்டிகளில் 23 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணிகளே வெற்றிபெற்றிருக்கின்றன.

சிக்ஸர் ஷார்ஜா!

சிறிய பவுண்டரி லைன்களைக் கொண்ட மைதானம் என்பதால் ஷார்ஜாவில் சிக்ஸர்கள் பறக்கின்றன. இதுவரை ஷார்ஜாவில் 7 அணிகள் 200 ப்ளஸ் ரன்களை அடித்திருக்கின்றன. ஆனால், முதல் சில போட்டிகளில் ஈஸியாக சிக்ஸர்கள் அடித்ததுபோல இப்போது ஷார்ஜாவில் பேட்ஸ்மேன்களால் அடிக்கமுடியவில்லை. பெளலர்கள் இந்த பிட்ச்சில் தங்களுடைய வேகத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்ததும் ரன்கள் அடிப்பதும் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஆனால், ஷார்ஜா இன்னமும் பேட்டிங் பிட்ச்தான். இங்கே 180 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் வெற்றிபெறமுடியும்.

வேக அபுதாபி!

ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மூன்று மைதானங்களில் அபுதாபி பிட்ச்தான் பேட்ஸ்மேன், பெளலர்ஸ் என இருவருமே சமமாகப் போட்டிபோடும் மைதானம். இங்கே வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் விக்கெட்டுகள் அதிகமாக விழுகின்றன. அபுதாபியில் ஒவ்வொரு 20 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் விழுகிறது. இதுவரை அபுதாபியில் 70 விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்திருக்கிறார்கள்.

Pitch

ஸ்பின் வின் துபாய்!

துபாயில் இதுவரை நடந்திருக்கும் 14 போட்டிகளில் 12 போட்டிகளில் முதலில் பேட்டிங் ஆடிய அணிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் எடுக்கும் முக்கியமான விக்கெட்டுகள். சமீபத்தில் நடந்த ஹைதராபாத்துக்கு எதிரானப்போட்டியில் சென்னை வெற்றிபெற முக்கியக் காரணம் ஸ்பின். கார்ன் ஷர்மாவும், ஜடேஜாவும் முக்கியமான மூன்று விக்கெட்களை வீழ்த்தியதே ஆட்டத்தின் போக்கை அப்படியே சென்னையின் பக்கம் திருப்பியது. அதேபோல் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரானப்போட்டியில் அஷ்வினும், அக்ஸர் பட்டேலும் எடுத்த இரண்டு விக்கெட்கள் மிக மிக முக்கியமானவை.

துபாயில் ஸ்பின்னர்களின் பங்கு வெற்றிக்குப் பெரிய காரணமாக இருந்தாலும், இங்கும் அதிக விக்கெட்களை எடுத்திருப்பவர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். இதுவரையிலான 30 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்கள்.

Also Read: IPL 2020: டெத் பௌலிங்கில் மிரட்டிய டெல்லி... நார்க்கியா வேகத்தில் பம்மிப் பதுங்கிய ராஜஸ்தான்! #DCvRR

ஒட்டுமொத்தமாக மூன்று மைதானங்களிலுமே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் விக்கெட்களை அதிகம் எடுத்திருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் 223 விக்கெட்களை எடுத்திருக்க, ஸ்பின்னர்களோ 108 விக்கெட்கள் எடுத்திருக்கிறார்கள்.

இதுவரையிலான போட்டிகள் அரபு மைதானங்களில் வெற்றிபெறுவதற்கு என்ன ஃபார்முலாவை பயன்படுத்தவேண்டும் என சொல்லிவிட்டன. முதல் பேட்டிங் எடுத்து டிஃபெண்ட் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்பதோடு, டிஃபெண்ட் செய்ய ஸ்பின்னர்களின் பங்கும் மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கிறது. அடுத்த 30 ஆட்டங்கள் பரபரப்பின் உச்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-take-aways-from-the-first-round-mid-season-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக