Ad

புதன், 14 அக்டோபர், 2020

சொத்து வரி விவகாரம்: `தவறைத் தவிர்த்திருக்கலாம்; அனுபவமே பாடம்!’- ரஜினி

சென்னை, கோடம்பாக்கத்திலுள்ள ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. `கொரோனா ஊரடங்கால் வருமானம் ஏதுமில்லை’ என்று கூறி சொத்துவரி விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றப் படியேறினார் ரஜினி. நீதிமன்றத்தில் ரஜினி தாக்கல் செய்திருந்த மனுவில், மாநகராட்சி சட்டவிதிகளின்படி, 30 நாள்கள் கட்டடம் மூடப்பட்டிருந்தாலே வரியில் 50 சதவிகிதம் சலுகை பெற உரிமை இருக்கிறது.

சென்னை மாநகராட்சி

இந்தச் சலுகையைக் கேட்டு செப்டம்பர் 23-ம் தேதியே மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். இதுவரை அந்த நோட்டீஸ் பரிசீலிக்கப்படவில்லை. இந்தநிலையில், சொத்துவரியாக ரூ.6.5 லட்ச ரூபாயை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தாவிடில் இரண்டு சதவிகித அபராதத்துடன் வரி செலுத்த நேரிடும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அந்த நோட்டீஸைப் பரிசீலித்து முடிவு எடுக்கும்வரை சொத்துவரிக்கு அபராதம் விதிக்கும் முடிவை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்’ என ரஜினி குறிப்பிட்டிருந்தார்.

Also Read: ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: நீதிபதி எச்சரிக்கை - பின்வாங்கிய ரஜினி தரப்பு!

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, ரஜினி தரப்பை நீதிபதி கடுமையாகக் கண்டித்தார். செப்டம்பர் 23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பிவிட்டு, அதைப் பரிசீலிக்க மாநகராட்சிக்கு நேரம் கொடுக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதற்குள் அவசர அவசரமாக நீதிமன்றம் வந்தது ஏன் என்றும் ரஜினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என ரஜினி தரப்பைக் கடுமையாகக் கண்டித்த நீதிமன்றம், அபராதம் விதிக்க நேரிடும் என்றும் எச்சரித்தது. இதையடுத்து, `அந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் ரஜினி.

``ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்’’ என ரஜினி கருத்து தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/rajini-speaks-about-property-tax-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக