Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

இந்தியாவிலும் கவனம்பெறும் இ.எஸ்.ஜி ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா? #ESGFunds

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் புதுப்புது தீம்கள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் அப்படி இ.எஸ்.ஜி என்னும் புது தீம் உருவாகி இருக்கிறது. சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு, நல்ல நிர்வாகம் (environment, social responsibility, corporate governance) இந்த மூன்று வார்த்தைகளின் முதல் எழுத்துதான் இ.எஸ்.ஜி ஃபண்ட். அதாவது, ஒரு மியூச்சுவல் ஃபண்டில் திரட்டப்படும் முதலீடு மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களை பூர்த்தி செய்யும் நிறுவனப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும்.

சுற்றுச்சுழலைப் பொறுத்தவரை, கார்பன் வெளியீடு, எரிசக்தி நுகர்வு, நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை உள்ளிட்ட விஷயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். சமூக பொறுப்பை எடுத்துக்கொண்டால் பாலின சமத்துவம், தொழிலாளர் மேம்பாடு, சமூக மேம்பாடு செயல்கள் போன்றவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

கார்ப்பரேட் நிர்வாகம் என எடுத்துக்கொண்டால், ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறைகளைப் பின்பற்றுதல், நேர்மையான நிர்வாகம், பிரச்னைகளைக் கண்டறிதல், பிரச்னைகளை வெளியே சொல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவை வரும். ஒரு மியூச்சுவல் பண்ட் நிறுவனம் ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு முன்பு மேலே இருக்கும் விதிமுறைகளில் தெளிவு கிடைத்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள். தவிர புகையிலை, மதுபானம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலக்கரி சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படமாட்டாது. இவற்றை `Sin Stocks' என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அழைக்கின்றன. வெளிநாடுகளில் இ.எஸ்.ஜி போன்ற பிரிவுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக நிதியைக் கையாளுகின்றன. இந்தியாவில் தற்போதுதான் இது போன்ற பிரிவுகள் வரத் தொடங்கியிருக்கின்றன.

Stock Market

முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இ.எஸ்.ஜி ஃபண்டுகள் என்னும் கான்செப்ட் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், அதற்காகவே இதுபோன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்பு, நல்ல நிர்வாகம் போன்றவை புதியவைதான். ஆனால், நிர்வாகம் சரியாக இல்லாத நிறுவனப் பங்குகளில் எந்த ஃபண்ட் மேனேஜரும் முதலீடு செய்யமாட்டார். அதனால் நிர்வாகம் என்பது புதிய விஷயம் கிடையாது. சரியான நிர்வாகம் இல்லாத எந்த நிறுவனப் பங்கும் முதலீட்டுக்கு ஏற்றது அல்ல.

முதலீட்டின் அடிப்படை நோக்கமே லாபம். இதுபோன்ற பிரிவுகளில் லாபம் கிடைக்காது என்று சொல்லவில்லை. ஆனால், புதிய தீம் என்பதற்காகவே முதலீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.

வெ.விஜயகுமார்

தற்போது சந்தையில் இருக்கும் இ.எஸ்.ஜி ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவை ஆராய்ந்து பார்த்தால் இதற்கான விடை எளிதாகக் கிடைக்கும். மற்ற டைவர்சிஃபைட் ஃபண்டுகளை போலவே டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்சி பேங்க் என வழக்கமாக மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்யும் பங்குகளில்தான் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதனால் இ.எஸ்.ஜி என்னும் பெயருக்காக மட்டும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த ஃபண்டுகள் லாபம் கொடுக்காது எனக் கருத வேண்டாம். ஆனால், முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டுக்கு வருபவர்கள், சில ஆண்டு காலம் மட்டுமே பரிச்சயம் இருப்பவர்கள் இந்த ஃபண்டுகளைத் தவிர்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளைப் புரிந்துகொள்ள எளிமையான டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் இருந்து தொடங்குவதுதான் நல்லது. மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் பலவிதமான வாய்ப்புகளிலும் (மிட்கேப், ஸ்மால்கேப், தீமேட்டிக் ஃபண்ட் உள்ளிட்ட ஃபண்டுகளில்) முதலீடு செய்திருப்பவர்கள் மட்டும் புதிய வாய்ப்பாக இந்த ஃபண்டுகளைப் பரிசீலனை செய்யலாம்.

- வெ.விஜயகுமார், நிறுவனர், ZEBU Share and Wealth Managements Pvt Ltd.


source https://www.vikatan.com/business/investment/is-it-safe-to-invest-in-esg-funds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக