Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

`வேட்பாளரை யார் விசாரிக்கச் சொன்னார்கள்?!'- ஸ்டாலினைக் கொதிக்கவைத்த ஐபேக் டீம்

சட்டமன்றத் தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில், எந்தெந்தத் தொகுதியில் யாரெல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற கணக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி ஐபேக் நிறுவனத்தின் கடந்தவாரச் செயல்பாடுகள், தி.மு.க தலைமையின் கொதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

தி.மு.க-வின் தேர்தல் பிரசார ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்ட பிறகு, அவரின் ஆலோசனைகளை ஏற்றுச் செயல்பட்டுவருகிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதன் வெளிப்பாடாக, கள்ளக்குறிச்சி, கோவை உட்பட பல மாவட்டங்களை தி.மு.க தலைமை, நிர்வாக வசதிக்காகப் பிரித்திருக்கிறது. அப்படிப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுவருகிறார்கள்.

` தேர்தல் பணிக்காக மட்டுமே ஐபேக் செயல்படுகிறது' எனக் கட்சித் தலைமை தெரிவித்தாலும், மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு மாறுதல்களை ஐபேக் நிறுவனத்துடன் பொருத்திப் பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கழகச் செயலாளர் கே.என்.நேரு ஆய்வு நடத்தி, தகுதியான மாவட்டப் பொறுப்பாளர்களைத் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார். அந்தப் பட்டியலிலிருக்கும் தகுதியான நபர்களை ஸ்டாலின் தேர்வு செய்துவருகிறார்.

Also Read: தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்

இது ஒருபுறம் இருந்தாலும், `எந்தெந்தத் தொகுதிகளில் யாரை வேட்பாளர்களாக நியமித்தால் நன்றாக இருக்கும்' என ஐபேக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், உடன்பிறப்புகளைத் தொடர்பு கொண்டு பேசிவருவது அறிவாலயத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக, பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசிய சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி ஒருவர், `` கடந்த வாரத்தில் ஐபேக் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், வட்டச் செயலாளர் உட்பட பல்வேறு நிர்வாகிகளுக்கு போன் போட்டுப் பேசியிருக்கிறார்கள். ` உங்கள் தொகுதியில் செல்வாக்கான நபர் யார்... எந்த டிவிஷனில் எந்தச் சாதிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள்... உட்கட்சிப் பூசல் எப்படியிருக்கிறது... கோஷ்டி மோதல்கள் தற்போதும் தொடர்கிறதா... கட்சிப் பணிகளை நிர்வாகிகள் நன்றாகச் செய்கிறார்களா... இல்லையென்றால் என்ன காரணம்... அ.தி.மு.க-வுக்கு உங்கள் பகுதியில் என்ன செல்வாக்கு இருக்கிறது... தி.மு.க வேட்பாளராக யாரை நியமித்தால் வெற்றி பெறுவார்...’ எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். இதே கேள்விகளை சென்னையிலுள்ள 22 தொகுதிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் கேட்டிருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்

இதனால் ஆச்சர்யப்பட்ட நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களைத் தெரிவித்திருக்கிறார்கள். வேறு சிலர், இந்தத் தகவலை மாவட்ட நிர்வாகிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவர்களும், `இந்த விசாரணை உண்மைதானா?' என அறிவாலய நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க தலைமையின் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட ஸ்டாலின், `தொகுதிகளிலுள்ள பிரச்னைகளைத் தெரிந்துகொள்ளத்தானே தொடர்புகொள்வதாகச் சொன்னார்கள்... வேட்பாளர்கள் யார் என்றெல்லாம் யாரும் விசாரிக்கச் சொல்லவில்லையே?’ எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் தகவலை ஐபேக் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடமும் அறிவாலய நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, கடந்த ஓரிரு நாள்களாக ஐபேக் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடமிருந்து போன் வருவதில்லை" என்றார் விரிவாக.



source https://www.vikatan.com/news/politics/dmk-chief-angry-over-ipacs-enquiry-about-candidate-selection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக