Ad

சனி, 3 அக்டோபர், 2020

#DevduttPadikkal: கோலி, ஏபிடி கொண்டாடும் தேவ்தத் பயணம் தொடங்கியது எப்படி?!

கேரளத்தில் பிறந்து, பெங்களூரில் மையம் கொண்ட ஒரு இளம்புயல், இப்போது அரபு நாட்டில் சுற்றி சுழல்கிறது. பெங்களூருவின் தேவ்தத் படிக்கல்தான் இப்போது 2020 ஐபிஎல்-ன் கன்சிஸ்டென்ட் பர்ஃபாமெர். இதுவரை விளையாடியிருக்கும் நான்கு போட்டிகளில் மூன்றில் அரைச் சதங்கள் அடித்து சரியான ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திணறிக்கொண்டிருந்த பெங்களூருவுக்கு பொக்கிஷமாய் கிடைத்திருக்கிறார்.

படிக்கல் பிறந்தது கேரளா. ஆனால் கிரிக்கெட் மீது தேவ்தத்துக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாய், அவரது பெற்றோர்கள் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார்கள். தேவ்தத் கர்நாடகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரிக்கெட்டில் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 11. தேவ்தத்தின் பேரார்வத்தைப் பார்த்த பயிற்சியாளர்கள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆடும் கிரிக்கெட் அணியில் இருந்து 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிக்கு மாற்றினார்கள். தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் விளையாட ஆரம்பித்து, அட்டகாச பேட்ஸ்மேனாக மாற ஆரம்பித்தார் தேவ்தத். படிப்பு, கிரிக்கெட் என இரண்டு பாதைகளிலும் கொஞ்சமும் சறுக்காமல் பயணித்த படிக்கல், விளையாடிய அத்தனை போட்டிகளிலும் சாதனைகள் படைக்க ஆரம்பித்தார்.

Devdutt Padikkal, Virat Kohli

17 வயதிலேயே 2017-ம் ஆண்டுக்கான கர்நாடக பிரிமியர் லீகில் பெல்லாரி டஸ்கர்ஸுக்காக ஆடும் வாய்ப்பு தேவ்தத்தை தேடி வந்தது. அந்த சீசனின் தொடக்கத்தில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறப்பட்ட தேவ்தத்தால் பெரிதாக ரன்கள் சேர்க்கமுடியவில்லை. ஆனால், வாய்ப்புக்காக காத்திருந்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்கிவிடப்பட்டார். 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து பெல்லாரி அணியை வெற்றிபெறவைத்தவர் முதல்முறையாக மீடியாக்களில் இடம்பிடிக்க ஆரம்பித்தார்.

2018-ல் அண்டர் 19 வீரர்களுக்கு இடையே நடைபெறும் கூச் பெஹார் கோப்பையில் விளையாடினார் படிக்கல். முதல் தொடரிலேயே 829 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கலை எல்லா அணிகளுமே வியந்து பார்த்தனர். இதனால் உடனடியாக கர்நாடகாவுக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடும் வாய்ப்பு தேவ்தத்துக்கு கிடைத்தது. உடனடியாக ஐபிஎல் வாய்ப்பும் கிடைத்தது. 2019 பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்தார் தேவ்தத். ஆனால், முழு சீசனும் அணியில் இருந்தாரே தவிர அவருக்கு கோலியும், பயிற்சியாளர் கிரிஸ்டனும் ப்ளேயிங் லெவனில் இடம்கொடுக்கவில்லை. ஆனாலும், தொடர்ந்து சயத் முஸ்தாக் அலி டி20 தொடரில் 580 ரன்கள், விஜய் ஹஸாரே தொடரில் 609 ரன்கள் என படிக்கல் தொடர்ந்து பர்ஃபாம் செய்ய 2020 ஐபிஎல் சீசனுக்கும் அவரை பெங்களூரு தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில்தான் 2020 சீசனுக்கு தலைமைப்பயிற்சியாளராக அணிக்குள் வந்தார் நியூஸிலாந்தின் மைக் ஹஸன்.

Devdutt Padikkal, Sachin Tendulkar

தன்னுடைய முதல் லிஸ்ட் ஏ போட்டி, முதல்தரப் போட்டி, டி20 போட்டி என அத்தனை அறிமுகப் போட்டியிலும், அரைச்சதத்துடன் தொடங்கி இருந்த இவர், அதே பாணியை, சன்ரைசர்ஸுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியிலும் நிகழ்த்திக் காட்டினர். ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சுடன் ஓப்பனிங் இறங்கி, எந்தப் பதற்றமும் இல்லாமல் ஆடி முதல் சதம் அடித்தார் தேவ்தத். ஆரோன் ஃபின்ச்சே ஆச்சர்யப்பட்டுப்போனார். வார்னரின் தலைமையில், பலம் வாய்ந்த பெளலிங் குழுவைக் கொண்ட சன்ரைசர்ஸ் வீரர்களின் பந்துகளைப் பயமின்றி அவர் எதிர்கொண்ட விதம், யுவராஜ் சிங்கை நினைவூட்டுவதாய் இருந்தது. இவருடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாய், இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை ஆர்சிபி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, வெற்றிக் கணக்கோடு தொடங்கியது.

அடுத்ததாய் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், இரண்டே பந்துகளைச் சந்தித்திருந்த நிலையில், காட்ரலிடம் தன் விக்கெட்டைப் பறி கொடுத்து, ஓரு ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். உடனே இவர் 'ஒன் டைம் வொண்டர்' என்கிற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விமர்சனங்களைப் பொய்யாக்கியிருக்கிறார் படிக்கல்.

பஞ்சாபுக்கு அடுத்து மும்பைக்கு எதிரான பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவர் மூலமாய், ஆர்சிபி வெற்றியைத் தன் வசமாக்கி இருந்தது. அந்தப் போட்டியில், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி, 40 பந்துகளில் 54 ரன்களைக் குவித்திருந்தார் படிக்கல். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும், அதைச் சிறிதும் பொருட்படுத்தாது, பொறுப்பாய் ஆடிய படிக்கல், அந்தப் போட்டியின் 17.1 ஆவது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடி, அணியின் ஸ்கோரை 154க்கு உயர்த்தினார்.

Devdutt Padikkal, AB de Villiers

ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்யும் போட்டிகளில், தேவ்தத்தால் ரன் குவிப்பில் ஈடுபட முடிகிறது. ஆனால், சேஸிங்கில் 20 வயது வீரரால் பிரஷரைத் தாங்கமுடியவில்லை என்றன அடுத்தக்கட்ட விமர்சனங்கள். அதற்கும் ராஜஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விடைகொடுத்துவிட்டார் படிக்கல். தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 45 பந்துகளில் 63 ரன்களைக் குவித்து, அணியின் வெற்றிக்குக் காரணமாய், கோலிக்கு பக்கபலமாய் இருந்தார். தேவ்தத்தோடு சேர்ந்து, கோலியும் பழைய ஃபார்முக்குத் திரும்ப, 19.1 ஓவரிலேயே, 155 என்ற இலக்கைக் கடந்து தன்னுடைய மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஆர்சிபி.

Also Read: அதிரடி காட்டிய பிரித்வி, ஷ்ரேயாஸ்; போராடிய மார்கன், திரிபாதி... மீண்டும் டெல்லி நம்பர் ஒன்! #DCvKKR

ஆர்சிபி வென்ற மூன்று போட்டிகளிலும் படிக்கல் அரைச்சதத்தைக் கடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான தொடக்கம் பாதி செயல் முடிந்ததற்கான அடையாளம் என்பதைப் போல அடித்தளத்தை அவர் பலமாய் அமைத்துத் தர, அதற்கு மேல் வெற்றி என்னும் கோட்டையைக் கட்டுவது மற்றவர்களுக்கு எளிதாக இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஆர்சிபி அடித்திருக்கும் மொத்த ரன்கள் 642. இதில் 164 ரன்களைக் குவித்துள்ள படிக்கல்லின் பங்களிப்பு மட்டும் 27 சதவிகிதம் என்பதே சொல்லும், அணியின் வெற்றியில் அவரது முக்கியத்துவத்தை! யுவி போன்ற எலிகன்ட் பேட்டிங் ஸ்டைல் கொண்ட படிக்கல் ஆட்டம் பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துக்கிறது. அவர் ஆடும் ஹை பேக் லிஃப்ட் ஷாட்டுகள், கவர் டிரைவ்கள் எல்லாம் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகின்றன.

இதுவரை நம்பகமான ஒரு இந்திய பேட்ஸ்மேனுக்காகக் காத்திருந்த ஆர்சிபிக்கு, அவர்கள் எதிர்பார்ப்பினை முழுவதுமாய்ப் பூர்த்தி செய்யும் வகையில், படிக்கல் கிடைத்திருக்கிறார். அடுத்தடுத்த போட்டிகளிலும் படிக்கல்லின் நிலையான ஆட்டம் தொடரும் பட்சத்தில், கோலியின் கனவை தேவ்தத் நிறைவேற்றுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-how-devdutt-padikkal-came-into-royal-challengers-bangalore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக