கொரோனா பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பேருந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைபப் பின்பற்றி பயணிகள் முகக் கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ரயில் போக்குவரத்து முழுமையாகத் தொடங்கப்படாதநிலையில், பயணிகள் அதிகம் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இதற்கான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலையில், டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தென்சென்னை தொகுதி தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், ``ஐ.ஆர்.சி.டி.சி-யில் ரயில் பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது.
எனவே, மத்திய ரயில்வே துறை அமைச்சகம் இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்துதல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன். மத்திய அரசு இதுபோல், அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/dont-impose-hindi-dmk-mp-thamizhachi-thangapandian-tells-rail-ministry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக