Ad

சனி, 3 அக்டோபர், 2020

ஹத்ராஸ்: கூட்டுப் பாலியல் வன்முறை...சி.பி.ஐ விசாரணை வரை...நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில். கடந்த மாதம், 19 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடலை, காவல்துறையினர் அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

நடந்தது என்ன?

செப்டம்பர் 14-ம் தேதியன்று, உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண், தனது தாய் மற்றும் சகோதரர்களோடு புல் வெட்டச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணைக் கடத்திச் சென்ற நான்கு நபர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். போலீஸார் முதலில் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாது கடந்த செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்திருக்கிறார். மருத்துவமனையில் இறந்த அந்தப் பெண்ணின் உடலை உத்தரப்பிரதேச காவல்துறை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விடாமல், ஊருக்கு வெளியில் எடுத்துவந்து எரித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்

உயிரிழந்த பெண்ணின் தாயார் சொல்வது என்ன?

```அன்று காலை நான், எனது மகளை வயலுக்குப் புல்வெட்ட அனுப்பியிருந்தேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக என் மகளைக் காணவில்லை. அதனால், தேட ஆரம்பித்தேன். நீண்ட நேரம் தேடியதில், ஒரு வயல்வெளி அருகில் படுத்திருந்தாள். அவளின் கழுத்து பகுதி துணியால் சுற்றி இழுக்கப்பட்டிருந்தது. அவளின் உடைகள் களையப்பட்டு, மயக்கநிலையில் இருந்தாள். முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டிருந்தது. அவள் கொலை செய்யப்பட்டது போலப் படுத்திருந்தாள்" என்று தனியார் தொலைக்காட்சி அளித்திருந்த பேட்டியில் அந்தப் பெண்ணின் தாயார் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினர் கூறுவது என்ன?

கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காலை 9.30 மணிக்குப் பாதிக்கப்பட்ட பெண், அவரின் சகோதரர் மற்றும் தாயாருடன் காவல்நிலையம் வந்து, யாரோ தன் கழுத்தை நெறித்துக் கொலைசெய்ய முயன்றதாகத் தெரிவித்தார். அதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த விசாரணையில், தன்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தார். அதையொட்டி ஒருவரின் பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது. மீண்டும் 22-ம் தேதி தன்னை நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார். ஏன் இதை அன்றே சொல்லவில்லை என்று கேட்கும்போது, தான் இப்பொழுதுதான் சுயநினைவில் இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர், அந்த நால்வரின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

UP Police

உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கூறியது என்ன?

''சம்பவம் நடந்த அன்று நாங்கள் புகார் அளிக்கையில், காவல்துறையினர் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கொலை முயற்சி வழக்காகவே புகாரைப் பதிவு செய்திருந்தனர். என் சகோதரி, சிகிச்சையில் இருக்கும்போது நடந்த விசாரணையில் வழங்கிய வாக்குமூலத்துக்குப் பிறகு தான் கூட்டுப் பாலியல் வன்முறை பிரிவு சேர்க்கப்பட்டது.''

செப்டம்பர் 14-ம் தேதி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை, நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல், காவல்நிலையம் அழைத்துச்சென்று புகார் அளித்துள்ளனர். அதன் பிறகு, அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். பின்னர், அங்கிருந்து அலிகார் ஜவஹர்லால் நேரு.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்குத் தொடர்ந்து 13 நாள்கள் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கடந்த திங்கள்கிழமை மாற்றப்பட்டார். சிகிச்சை பலனில்லாது, கடந்த செவ்வாய்க் கிழமை (செப்.29) உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, சொந்த ஊரில் காவல்துறையினர் தகனம் செய்தனர். பெற்றோர்களின் ஒப்புதலின்றி காவல்துறையினர் அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் தகனம் செய்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

எரிக்கப்பட்ட பெண்ணின் உடல் - ஹத்ராஸ்

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் சொல்வது என்ன?

"அந்த பெண் மருத்துவமனைக்கு வரும்போதே மிக மோசமான நிலையில்தான் கொண்டுவரப்பட்டார். அந்த பெண்ணின் கழுத்தை நெறித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற அவர்ம் அந்த அழுத்தத்தில் தனது நாக்கைக் கடித்துள்ளார். அதன் காரணமாக, நாக்கு கடும் வெட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. அந்தப் பெண்ணின் முதுகுத்தண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணின் கால் முற்றிலும் செயலிழந்து இருந்தது, கைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. தொடர்ந்து அந்த பெண் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையிலிருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக டெல்லி அழைத்துச்செல்ல அவர்கள் குடும்பம் அனுமதி கோரியது. அவர்களின் கோரிக்கைக்கிணங்க நாங்கள் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் பரிந்துரை செய்தோம். அடுத்த நாள் காலையில் அவர் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால், ஆவார்கள் ஏன் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. அது அவர்களின் குடும்பத்தினரின் விருப்பம்" என்று மருத்துவமனை தரப்பிலிருந்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்குத் தகவல்கள் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் பரிந்துரையின் பேரிலேயே, சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அந்த மருத்துவமனையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அந்த பெண் செப்டம்பர் 29-ம் தேதி மாலை 6.25 மணிக்கு உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கை ஏதும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்!

சம்பவம் நடந்த அன்று தன்னை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்போது மற்றும் இரண்டு பேர் அங்கு நின்றிருந்ததாகவும், தன் அம்மாவின் குரல் கேட்டதும் அவர்கள் ஓடியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார். வீடியோ வாக்குமூலத்தில், காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்திலும், அந்தப் பெண், தான் பாலியல் வன்முறைக்கு ஆளானதைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட பெண்

உ.பி காவல்துறையினர் சொல்வது என்ன?

தடயவியல் சோதனைகள் நடைபெற்று வருவதால் தற்போதைக்கு எந்த ஆவணத்தையும் தர இயலாது. அனைத்தும் ரகசியமான ஆவணம் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப் பெண் நாக்கு அறுபடவில்லை. முதுகெலும்பு உடையவில்லை, குரல்வளை உடைந்துள்ளது. அதனால் அவரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தனர். பாதிக்கப்பட்ட பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என எஸ்பி. விக்ராந்த் தெரிவித்துள்ளார். தடயவியல் அறிக்கை முடிவுகள் கிடைத்த பின்னரே, முழு விவரமும் கூறமுடியும் என்று கூறியிருக்கின்றனர். அதோடு, இறந்த பெண்ணின் உடல், தந்தை மற்றும் சகோதரர்கள் முன்னிலையில்தான் எரிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவே அவ்வாறு செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், உயிரிழந்த அன்று இரவே சடலத்தை எரிக்கக் காவல்துறையினர் கட்டாயப்படுத்தினர் என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சட்டியிருக்கின்றனர். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதபடி காவல்துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை, வீட்டுக் காவலில் வைத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ``கடைசியாக ஒரு முறை முகத்தைப் பார்க்கக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. எரிக்கப்பட்டது யாருடைய சடலம் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை" என்று அந்த பெண்ணின் சகோதரர் பி.பி.சி-க்கு அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஹத்ராஸ் தொகுதி எம்.பி சொல்வது என்ன?

``தலித் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது மிகவும் சர்ச்சைக்குரியது. கடந்த இரண்டு நாள்களாக அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் நான் பேசிவருகிறேன். அந்த பெண்ணின் உடலை எரிக்கும்போது அந்த இடத்தில் நான் இருந்தேன். உடலைக் காலையில் எரிக்கலாம் என்று அழுத்தமாக நான் கூறினேன். ஆனால், காவல்துறையினர் அதைக் கேட்கவில்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி என அனைவரிடமும் கூறினேன், யாருமே கேட்கவில்லை. இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையாகாமல் மாவட்ட ஆட்சியரால் தடுத்திருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் வெட்கப்படுகிறேன். இறந்த பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்க போராடுவேன். அப்படி இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்" என்று ஹத்ராஸ் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி-யான ராஜ்வீர் டைலர் தி பிரின்ட்=க்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

144 தடை உத்தரவு!

ஹத்ராஸில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தடை உத்தரவையும் மீறி, ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த வியாழக்கிழமை சென்றனர். நொய்டா அருகே உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் இருவரையும் உள்ள செல்லவிடாது தடுத்து நிறுத்தினர். `தடையையும் மீறி, 142 கி.மீ நடந்தே சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்போம்’’ என்று கூறி உள்ளே செல்ல முயன்றனர். தடுத்து நிறுத்த முயன்றபோது, ராகுல்காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொண்ட இருவரையும், கவுத்தம புத்தா நகர காவல்துறை கைது செய்து விருந்தினர் மாளிகைக்குக் கொண்டுசென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் இருவரையும் டெல்லிக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 200-க்கும் அதிகமானவர்கள் மீது கவுத்தம புத்தா நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு கைதாகியிருந்த நிலையில். நேற்று மீண்டும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஹத்ராஸ் சென்றனர்.ஐந்து பேருக்கு மட்டும் ஹத்ராஸ் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதோடு, பத்திரிகையாளர்களுக்கும் செய்தி சேகரிக்க ஹத்ராஸில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச் சுற்றிக் காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஹத்ராஸ் சம்பவம்: `அவப்பெயர்... சகோதரியாகச் சொல்கிறேன்!' - யோகி ஆதித்யநாத்துக்கு உமா பாரதி அட்வைஸ்

உத்தரபிரதேச முதல்வர்!

கடந்த புதன்கிழமை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு, 25 லட்சம் நிதி உதவியும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராம் ஷ்ப்த், ஆய்வாளர் தினேஷ் குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜக்வீர் சிங், தலைமைக் காவலர் மகேஷ் பால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்படவிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக்குழு நியமித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு, இதுவரை இல்லாத அளவு கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி என்று முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.

மிரட்டப்படும் குடும்பத்தினர்!

கடந்த வெள்ளிக்கிழமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் ஊருக்கு வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் பேசினார். பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிலிருந்து தப்பித்து வந்து அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.``எங்கள் குடும்பம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்களது செல்போன்களை காவல்துறையினர் வாங்கிவிட்டனர். எனது மாமாவை (உயிரிழந்த பெண்ணின் தந்தை) காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். அதில் அவர் மயக்கமடைந்தார். எங்கள் குடும்பத்தினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்புகின்றனர். நாங்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையும், எங்களுக்கு வரும் அழுத்தங்களையும் உங்களிடம் கூற நினைக்கிறோம்" என்று தெரிவித்தார். மேற்கொண்டு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்துவதால், ஊடகங்களுக்கு உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றுகாவல்துறையினர் கூறினர். அந்த இளைஞர் ஓடிவரும் போது, அவரை காவல்துறையினர் துரத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, இரண்டு தினங்களுக்கு முன் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பெண்ணின் வீட்டாரை மாவட்ட ஆட்சியர் மிரட்டுவதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் மாவட்ட ஆட்சியர், 'உங்கள் பெண்ணின் விவகாரத்தை ஏன் வெளியில் இருப்பவர்களிடம் பேசுகிறீர்கள். ஊடகங்கள் நாளை சென்றுவிடும், நாங்கள் தான் இங்கு இருப்போம். எங்களை நம்புங்கள், வேறு யாரிடமும் பேசக்கூடாது’ என்று மிரட்டும்தொனியில் பேசுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

`அந்த வீடு உள்ள தெரு முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக் கழிவறை வாசலில் கூட காவல்துறையினர் நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் காவலர்கள் முகாமிட்டு இருக்கிறார்கள்’ என்று உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

காவலர்கள்

கண்டனம்!

அந்தப் பெண்ணின் இறப்புக்கு, இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்தப் பெண் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், உத்தரப் பிரதேச அரசிடம் பெண்ணின் உயிரிழப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது, இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/social-affairs/crime/hathras-case-updates-what-happened-from-day-one-to-cbi-enquiry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக