Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

தோனி வியூகங்களில் தொடங்கி தொடர் தோல்விகளில் முடிந்த CSK-வின் முதல் சுற்று... நடந்தது என்ன?!

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளே நடக்காது என ஆருடம் சொல்லப்பட்ட நிலையில், 2020 ஐபிஎல்-ன் முதல் சுற்றுப்போட்டிகளை அரபு நாடுகளில் வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கிறது பிசிசிஐ. உலகின் சிறந்த டி20 லீக் ஐபிஎல்-தான் என்பதை இந்த முறையும் நடந்துமுடிந்த ஒவ்வொரு போட்டியும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. டை-யில் முடிந்த இரண்டு சூப்பர் ஓவர் போட்டிகள், 200 ரன் சேஸிங்குகள், பேட்டிங் மைதானங்களில் ஸ்பின்னர்களின் அட்டகாசங்கள் என முதல் சுற்றுப்போட்டிகளில் நினைவுகூரப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.

டேபிள் டாப்பர்ஸ்!

முதல் சுற்றின் முடிவில் மும்பை, டெல்லி, பெங்களூரு என மூன்று அணிகளும் தலா 10 புள்ளிகளோடு முதலிடத்துக்குப் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன. ரன்ரேட் அடிப்படையில் மும்பையும், டெல்லியும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. கொல்கத்தா 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கின்றன. சென்னை 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பஞ்சாப் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கிறது.

IPL 2020 Points Table

அடுத்தகட்டப்போட்டிகளில் மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்தால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு அவர்களுக்குப் பறிபோகும். அப்படி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. நான்காவது இடத்துக்குத்தான் கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை அணிகளுக்கு இடையே கடுமையானப் போட்டி இருக்கும். அடுத்த 7 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளிலாவது சென்னை நல்ல ரன்ரேட்டுடன் வெற்றிபெறவேண்டும். அப்படி அபாரவெற்றிகள் அமைந்தால் மட்டுமே சென்னை தப்பிக்கும்.

இதுவரை நடந்தது என்ன?!

கடந்த ஆண்டு மும்பையிடம் எல்லா போட்டிகளிலும் தோற்ற சென்னை இந்த ஆண்டு மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாகத் தொடரைத் தொடங்கியது. லுங்கி எங்கிடி, சஹார், கரண், ஜடேஜா, சாவ்லா எனப் பந்து வீசிய ஐந்து பெளலர்களுமே விக்கெட் எடுத்தது, டுப்ளெஸ்ஸி ராயுடுவின் அரை சதங்கள், சாம் கரணின் சிக்ஸர் கேமியோ என 'சிஎஸ்கே-னா யார் தெரியும்ல' என சென்னை ரசிகர்களை கெத்தாக சுற்றவைத்தது முதல் வெற்றி. ஸ்பின்னுக்குத்தடுமாறும் ரோஹித் ஷர்மாவை சால்வாவைக் கொண்டு வீழ்த்தியது, எங்கிடியை டெத் ஓவர்களில் சிறப்பாகப் பயன்படுத்தியது, சாம் கரணை பேட்டிங் ஆர்டரில் மேலே கொண்டுபோனது, பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றபடி சரியான பொசிஷன்களில் ஃபீல்டர்களை நிறுத்தியது என கேப்டன் தோனியின் ராஜதந்திரங்கள் கொண்டாட வைத்தன. ஆனால், முதல்போட்டியோடு அந்தக் கொண்டாட்டங்கள் முடிந்ததுதான் சோகம். அடுத்த வந்த போட்டிகளில் ஒன்றைத்தவிர மற்றவை எல்லாமே வேதனைகள்தான்.

#Dhoni #CSK

ஷார்ஜா சோதனை!

முதல் போட்டியில் டாஸ் வென்றதும் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்து வெற்றிபெற்ற தோனியின் ஃபார்முலாவையே எல்லா அணி கேப்டன்களும் பின்பற்றினார்கள். ஃபார்முலாவை சொல்லிக்கொடுத்த தோனியும் தன்னிடம் சிறப்பான பேட்ஸ்மேன்கள் இருப்பதாக நம்பி தொடர்ந்து சேஸிங்கையே தேர்ந்தெடுத்தார். ஆனால், இங்கிலாந்தில் தடுமாறிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்மித்தையும், சீசனுக்கு ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடும் சஞ்சு சாம்சனையும் ஃபார்முக்கு வரவைத்ததனர் சிஎஸ்கே பெளலர்கள். ஸ்மித் 67 ரன்கள் அடிக்க, சஞ்சு 32 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். இதில் 9 சிக்ஸர்கள்.

டார்கெட் 200 ரன்களுக்கு மேல் இருந்தும் பதற்றப்படாத தன்னுடைய வழக்கமான மந்த ஆட்டத்தையே தொடங்கியது சிஎஸ்கே. பவர்ப்ளே வரை முரளி விஜய், வாட்சன் விக்கெட்டை இழக்காமல் ஆடியதே அதிசயம் என நினைக்க, அடுத்தடுத்து அவுட் ஆக ஆரம்பித்தார்கள் சென்னை பேட்ஸ்மேன்கள். ருத்துராஜ் கெய்க்வாட் முதல் போட்டியிலேயே ருத்ரதாண்டவம் ஆட ஆசைப்பட அவரை டக் அவுட் செய்தது ராஜஸ்தான். தோல்வி உறுதியான நிலையில் கடைசி ஓவரில் சில சிக்ஸர்கள் அடித்து தோனி சென்னையின் முதல் தோல்வியை தொடங்கிவைத்தார்.

#KagisoRabada

ரபாடா ராஜ்ஜியம்!

மூன்றாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது சென்னை. சிறுவன் பிரித்வி ஷா, சஹார், ஜடேஜா என எல்லோரையும் போட்டுப்பொளக்க, அடுத்துவந்த ஷ்ரேயாஸும், பன்ட்டும் சென்னைக்கு விக்கெட் கொடுக்காமல் ரன்சேர்க்க 175 ரன்கள் அடித்தது டெல்லி. சாவ்லா, சாம் கரணைத்தவிர மற்ற பெளலர்கள் யாரும் விக்கெட்டே எடுக்கவில்லை. மீண்டும் ஒரு மந்தமான சேஸிங். எந்த அளவுக்கு என்றால் சென்னை 50 ரன்களைத்தாண்டவே 10 ஓவர்கள் கடந்தது.

வெற்றிபெறுவதற்கான ஆர்வமே இல்லாமல் ஆடிய சென்னை 16-வது ஓவரில்தான் 100 ரன்களைத்தொட்டது. 20 ஓவர்களில் 131 ரன்கள் மட்டுமே அடிக்க, சென்னையின் ஆட்டத்தை 3 விக்கெட்களோடு முடித்துவைத்தார் ரபாடா.

வெற்றிக்கான விருப்பமே இல்லாமல் இவர்கள் ஆடுகிறார்கள் என்பது தெரிய ஆரம்பித்த முதல் போட்டி இதுதான்.

#CSKvSRH

பிரியம் கார்க் கொடுத்த அதிர்ச்சி!

ஹைதராபாத்துக்கு எதிரான நான்காவது போட்டி சென்னைக்கு சாதகமாகத் தொடங்கியது. பேர்ஸ்டோ டக் அவுட், கேன் வில்லியம்சன் 9 ரன், வார்னர், மணிஷ் பாண்டே இருவரும் 30 ரன்களுக்குள் அவுட் ஆக 69 ரன்களுக்குள் டாப் 4 பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டது ஹைதராபாத். ஆட்டம் சென்னைப்பக்கம் திரும்பிய நேரத்தில் அலட்சியத்தால் கோட்டைவிட்டார்கள் பெளலர்கள். பிரியம் கார்க்கும், அபிஷேக் ஷர்மாவும் கூட்டணிபோட, ஹைதராபாத் 160 ரன்களைத்தாண்டியது. அண்டர் 19 பேட்ஸ்மேனான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார்.

மீண்டும் முதல் 10 ஓவர்களில் 50 ரன்களைத்தொடாத சென்னைக்கு சேஸிங் சிரமமானது. ஃபினிஷர் தோனி களத்தில் நின்றும், ஜடேஜா 50 ரன்கள் அடித்தும் சென்னையால் வெற்றிபெறமுடியவில்லை. 7 ரன்களில் தோல்வியடைந்தது. ராயுடு, ஜடேஜாவின் விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார் தமிழக வீரர் நடராஜன்.

பல்லே பல்லே வெற்றி!

ஹாட்ரிக் தோல்விகளுக்குப்பிறகு ஒரு பெரிய வெற்றி. துபாயில் பஞ்சாபுக்கு எதிராக நடந்த போட்டியில் பஞ்சாப் அடித்த 174 ரன்களை விக்கெட்டே விழாமல் சேஸ் செய்து முடித்தது சென்னை. வாட்சன் முதல்முறையாக அரைசதம் அடிக்க, டுப்ளெஸ்ஸி இந்தத் தொடரின் மூன்றாவது அரை சதத்தை அடித்தார்.

ஸ்மார்ட் கொல்கத்தா!

#KKRvCSK

செம கம்பேக் கொடுத்துவிட்டது என உற்சாகத்தில் இருந்தபோதுதான் மீண்டும் பழைய ஃபார்முக்கேப்போனார்கள் சென்னையன்ஸ். மீண்டும் சென்னை வெற்றிபெற்றிருக்கவேண்டிய போட்டியைத் தோல்வியில் முடித்தது. கொல்கத்தாவில் எதிர்பார்க்கப்பட்ட ரஸல், நரைன், ரானா, கில் என எல்லோரும் சொதப்ப, ராகுல் திரிபாதி மட்டும் 81 ரன்கள் அடித்து கொல்கத்தாவை 160 ரன்களைத் தாண்டவைத்தார். ரன்கள் உயர சென்னையின் மோசமான டெத் பெளலிங்கும், ஃபீல்டிங்கும் முக்கிய காரணம்.

இந்த முறை டுப்ளெஸ்ஸி முதல் பேட்ஸ்மேனாக அவுட் ஆனாலும், பவர்ப்ளேவுக்குள்ளாகவே ஆச்சர்யமாக 50 ரன்களைத்தாண்டியது சென்னை. ஆனால், அதன்பிறகு ராயுடுவும், வாட்சனும் சேர்ந்து கொஞ்சம்கூட விருப்பமே இல்லாத ஒரு ஆட்டம் ஆட மீண்டும் டெத் ஓவர்களில் பிரஷர்கூடியது. தோனி க்ரீஸுக்கு வரும்போது 42 பந்துகளில் 67 ரன்கள் அடிக்கவேண்டும். ஆனால் டாட் பால்கள் அதிகரிக்க, கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது சென்னை.

Also Read: ஈ சாலா கப் பெங்களூருக்குத்தான் போல... கூட்டுழைப்பால் கொல்கத்தாவை காலி செய்த கோலி அண்ட் கோ! #RCBvKKR

கிங் கோலி!

சென்னையை ஒற்றையாளாக விழ்த்தினார் கிங் கோலி. ஃபின்ச், டிவில்லியர்ஸ் எல்லாம் ஒற்றை இலங்களில் அவுட் ஆக, படிக்கல், துபேவுடன் சேர்ந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஆடி, பெங்களூருவின் ஸ்கோரை 169 ரன்களுக்குக் கொண்டுபோனார் கோலி. 39 பந்துகளில் 50 ரன்கள் அடித்த கோலி, அடுத்த 40 ரன்களை வெறும் 13 பந்துகளில் அடித்து மேட்ச்சின் திசையை மொத்தமாகத் திருப்பிவிட்டார். மீண்டும் ஒரு உப்புசப்பில்லாத, வெற்றிக்கான வெறியே இல்லாத ஒரு சேஸிங்கால் 37 ரன்களில் தோல்வியடைந்தது சென்னை. ஜெகதீசன் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது மட்டுமே பெங்களூருவுக்கு எதிரானப் போட்டியில் நடந்த ஒரே நன்மை!

கோலி | ஆர்சிபி

2010-ல் இதேபோல் முதல் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை தோல்வியடைந்தது. பிறகு அடுத்த 7 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்று ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்று கோப்பையை வென்றது வரலாறு. ஆனால், அப்போது இரண்டாம் கட்டப் போட்டிகள் பெரும்பாலும் சென்னையில் நடந்தன. ஸ்பின்னுக்கு சாதகமான சேப்பாக்கம் பிட்ச்சில் சரியான பெளலர்களைப் பயன்படுத்தி வெற்றிபெற்றார் தோனி. ஆனால், இப்போது போட்டிகள் நடப்பது அரபு நாடுகளில். இன்னும் சரியான ப்ளேயிங் லெவனே செட் ஆகாமல் சிக்கித்தவிக்கும் தோனியிடம் எந்த அதிசயங்களையும் எதிர்பார்க்க முடியாது என்பதே நிதர்சனம்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-how-the-first-round-of-the-tournament-fared-so-far-for-chennai-super-kings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக