Ad

செவ்வாய், 13 அக்டோபர், 2020

`ரோலிங் சேர்... சாதிப் பிரச்னை... தர்ணா!’ - மயிலாடுதுறை ஊராட்சி சர்ச்சைப் பின்னணி

மயிலாடுதுறை அருகிலுள்ள மன்னம்பந்தல் கிராம ஊராட்சித் தலைவி பிரியா பெரியசாமி, தான் சாதிரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி ஊராட்சிய ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

``பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவியான எனக்கு ரோலிங் சேரில் உட்காரத் தகுதியில்லை என்று கூறி ஊராட்சிமன்றத் துணைத் தலைவி அமலாவும், அவருடைய கணவர் ராஜகோபாலும் சேரை எட்டி உதைத்து, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார்கள்" என்று பிரியா புகார் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றத் தலைவி பிரியா பெரியசாமி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள மன்னம்பந்தல் ஊராட்சிமன்றத் தலைவியாக இருப்பவர் பிரியா பெரியசாமி. அவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார்க் கடிதம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்தப் புகார்க் கடிதத்தில்,``சமீபத்தில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு தளவாடப் பொருள்கள் வாங்கப்பட்டன. அதில் ஊராட்சிமன்றத் தலைவர் அமர்வதற்கு ரோலிங் சேர் வாங்கப்பட்டது. அதில் என்னை அமரவிடாமல் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அமலாவும், அவருடைய கணவர் ராஜகோபாலும் இடையூறு செய்கின்றனர். `மற்றவர்களைப்போல நீயும் சாதாரண சேரில்தான் அமர வேண்டும். உனக்கு ரோலிங் சேரில் அமர்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? அப்படி ரோலிங் சேரில்தான் அமர வேண்டுமென்றால், உனது சொந்தப் பணத்தில் வாங்கி அமர வேண்டும்’ என்று கூறி தகராறு செய்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவி பிரியா பெரியசாமி

மேலும், ஊராட்சியில் நடைபெறும் பராமரிப்பு வேலைகளுக்கு கமிஷன் பணம் கொடுத்தால்தான் மாதா மாதம் செலவுப் பட்டியலில் கையெழுத்து போடுவேன் என்றும் கூறி, எந்த பில்லிலும் கையெழுத்து போட மறுக்கிறார். இதனால், பஞ்சாயத்து வேலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அதுபோல் 1-வது வார்டு கவுன்சிலர் மைதிலியின் கணவர் முருகானந்தம், மது அருந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்து மக்கள் பணி செய்யவிடாமலும், மக்கள் மத்தியில் எனக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றும் செயல்படுகிறார். எனவே, இந்த விவகாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: திருவள்ளூர்: `ஆட்சியர், எஸ்.பி முன்னிலை!’ - தேசியக் கொடியேற்றினார் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம்

இது குறித்து மன்னம்பந்தல் கிராமத்தினரிடம் விசாரித்தோம். ``இந்த ஊராட்சியில் இதுவரை சுமார் ஐம்பது லட்ச ரூபாய்க்கான ஊராட்சிப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் கிடைக்கும் கமிஷன் பணத்தால்தான் அவர்களிடையே பிரச்னை. மற்றபடி, இது சாதிப் பிரச்னையே இல்லை" என்கிறார்கள் நம்மிடம் பேசிய கிராமவாசிகள்.

பிரியா

தர்ணா போராட்டத்தை முடித்துவைத்த மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் பேசினோம் . ``ஊராட்சிமன்ற செயலாளரை மாற்ற வேண்டும் என்று பிரியா பெரியசாமி கோரிக்கை விடுத்தார். அதை உடனே பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறேன். ஊராட்சிமன்றத் தலைவர் அமர்வதற்கு பஞ்சாயத்து பணத்தில் ரூபாய் 18,000-க்கு ரோலிங் சேர் வாங்கியிருக்கிறார்கள். `பஞ்சாயத்து பணத்தில் ஏன் வீண் செலவு?’ என்று கூறி அதற்கான பில்லுக்கு ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கையெழுத்திட மறுத்திருக்கிறார். இது பற்றி இரண்டு நாள்களுக்குள் மாவட்ட பஞ்சாயத்து அலுவலர் வந்து பேசித் தீர்ப்பதாக உறுதியளித்திருக்கிறார். இதை ஏற்று தர்ணா போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது" என்றார் அவர்.

இந்தநிலையில், ஊராட்சிமன்றத் துணைத் தலைவி அமலா, அவருடைய கணவர் ராஜகோபால் இருவர் மீதும் பிரியாவின் புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/what-happened-in-mayiladuthurai-village-president-caste-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக