Ad

புதன், 14 அக்டோபர், 2020

வெற்றிதான்... ஆனால், தோனியின் குழப்பக்கணக்குகளும், #CSK-வின் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டதா?! #Dhoni

ஹைதராபாத்தை 20 ரன்களில் தோற்கடித்து, முதல் சுற்று லீக் போட்டிகளை வெற்றிகரமாக ஆரம்பித்ததுபோலவே இரண்டாம் சுற்று போட்டிகளையும் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது சென்னை. ஆனால், இந்த வெற்றியானது சென்னைத் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃபுக்குள் நுழைந்துவிடும் என்கிற நம்பிக்கையை இன்னும் முழுமையாகத் தரவில்லை என்பதுதான் உண்மை. கப்பலில் விழுந்த ஓட்டைகள் இன்னும் அடைக்கப்படவில்லை என்பதோடு தோனியின் குழப்பக் கணக்குகள் இன்னும் தீரவில்லை என்பதற்கான பல உதாரணங்களை நேற்றைய போட்டியில் இருந்து பட்டியலிடலாம்.

டாஸ் கணக்கு!

முதல்முறையாக நேற்றுதான் அதாவது 8-வது போட்டியில்தான் முதல் பேட்டிங் செய்தது சென்னை. மும்பை, ராஜஸ்தான், டெல்லி என முதல் மூன்று போட்டிகளில் டாஸ் வென்றும் இரண்டாவது பேட்டிங்கையேத் தேர்வு செய்தார் தோனி. டியூ காரணமாக இரண்டாவது பேட்டிங்தான் சரியாக இருக்கும் என்றார். ஆனால், முதல் பேட்டிங் செய்யும் அணிகளே தொடர்ந்து வெற்றிபெற அவரது முடிவை மாற்றிகொண்டார். ஆனால், மனம்மாறிய பிறகு அவருக்கு டாஸ் வெல்லும் அதிர்ஷ்டம் அடிக்கவில்லை. அதனால் முதல் பேட்டிங் ஆடும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால், நேற்று டாஸ் வென்றதும் பேட்டிங் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் தோனி.

#SRHvCSK

"முதல் சில போட்டிகளுக்குப் பிறகு முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தோம். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் ஆடுவது ஆட்டத்தின் போக்குக்கு ஏற்றபடி திட்டமிட்டுக்கொள்ள உதவுகிறது. ஆனாலும், பழைய போட்டிகளில் நாங்கள் சேஸிங்கில்தான் அதிகமுறை வெற்றிபெற்றிருக்கிறோம்" எனக் கடந்தகாலப் பெருமைகளுக்குள் போனவர், "ஆனால், இனிமேல் நாங்கள் தவறுசெய்யமுடியாது. தவறு செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டது" என்றார். அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சி. ஜெகதீசனுக்கு பதில் பியூஷ் சாவ்லா அணிக்குள் வருகிறார் என்றார். தோனியின் இந்த முடிவு நேற்று சென்னை வெற்றிபெற்றதால் சர்ச்சையாகவில்லை. தோல்வியடைந்திருந்தால் கடுமையாக விவாதத்துக்குள்ளாகியிருக்கும் சர்ச்சைக்குரிய முடிவு இது.

ஜெகதீசன் ஏன் இல்லை?!

"சாம் கரணை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்குவதால், சாம் கரண் வழக்கமாக இறங்கிக்கொண்டிருந்த 6-7வது இடத்தில் ஒரு முழுமையான பேட்ஸ்மேனை இறக்குவது நியாயமாக இருக்காது. அதனால்தான் அங்கே ஒரு இடம் கிடைப்பதால் பெளலரை இறக்கலாம் என முடிவெடுத்தோம்" என்றார் தோனி. ஆனால், பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங்கோ, "இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச்சின் தன்மை மாறும், வேகம் குறையும் என்பதால் இன்னொரு பேட்ஸ்மேனைவிட, இன்னொரு பெளலரோடு போகலாம் என தோனி சொன்னார். அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்" என்றார்.

CSK

ஜடேஜா, பிராவோ, ஏன் தோனியே சரியான ஃபார்மில் இல்லாதபோது மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனே சரியாக இருந்திருப்பார். இந்த ஐபிஎல்-லில் ஏற்கெனவே ஹைதராபாத்துக்கு எதிராக நடந்த லீக் போட்டியைப்போன்றே நேற்றும் வாட்சனும், ராயுடுவும் பந்துகளை வீணடித்தார்கள். வாட்சனும், ராயுடுவும் சேர்ந்து மிடில் ஓவர்களில் 70 பந்துகளை சந்தித்தார்கள். ஆனால், அடித்தது 81 ரன்கள்தான். இவர்கள் பொறுமையான ஆட்டம் ஆடக்காரணம், 16 ஓவர் விக்கெட் விழாமல் ஆடவேண்டும் என்கிற சுமைதான். காரணம் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் இல்லை. 16 ஓவர்களுக்கு முன்பு தோனி, ஜடேஜா, பிராவோ என ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்கள் வந்தால் அது ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என்கிற பயம். இதுதான் வாட்சனையும், ராயுடுவையும் அதிக எச்சரிக்கை உணர்வுடன் ஆடவைக்கிறது. முழுமையான இன்னொரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்றால் வாட்சனோ, ராயுடுவோ இருவரில் ஒருவர் கவலைப்படாமல் அதிரடி ஆட்டம் ஆடியிருக்கக்கூடும்.

சென்னையின் டார்கெட் குறைவு!

மணிஷ் பாண்டேவின் எதிர்பாராத ரன் அவுட்டும், வார்னரின் விக்கெட்டும் விரைவில் விழாமல் இருந்திருந்தால் நேற்றும் ஆட்டம் வேறு மாதிரி மாறியிருக்கும். சென்னையின் 167 ரன்கள் என்பது துபாய் பிட்ச்சுக்குப் போதுமான ஸ்கோர் இல்லை. 180 ரன்கள்வரை அடித்திருப்பதே சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். இதே துபாய் பிட்ச்சில் முதலில் பஞ்சாபுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த அணி ஹைதராபாத். நேற்று ஹைதராபாத்தின் டாப் ஆர்டர் சொதப்பியதால், 167 ரன்களே போதுமான ஸ்கோராகிப்போனது.

Sam Curran

சாவ்லா உள்ளே வருவதால் ஜடேஜாவை பெளலிங்கில் பயன்படுத்தமாட்டார் என எதிர்பார்த்தால் சர்ப்ரைஸ் கொடுத்தார் தோனி. 30 பந்துகளில் 67 ரன்கள் அடிக்கவேண்டும் என்கிற நிலையில்தான் சாவ்லாவை 16-வது ஓவரில் கொண்டுவந்தார் தோனி. அதுவும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே. 8 ரன்கள் கொடுத்து ப்ளேயிங் லெவனுக்குள் தானும் இருப்பதற்கான கடமையை முடித்துகொண்டார் சாவ்லா.

சேப்பாக்கம் மாடல் வொர்க் அவுட் ஆகுமா?!

தோனியின் ஃபார்முலா அல்லது சேப்பாக்கம் மாடல் என்பது பவர்ப்ளேவில் 40-50 ரன்கள் அடித்துவிட்டு, 14வது ஓவர் வரை பெரிதாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு, டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 50-60 ரன்கள் அடிப்பதும், ஸ்பின்னர்களைக் கொண்டே வெற்றிகளைப் பெறுவதும்தான். ஆனால், இந்த ஃபார்முலா ஐக்கிய அரபு நாடுகளில் வொர்க் அவுட் ஆகவில்லை. பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக்கூடிய ஸ்பின்னர்கள் சென்னை அணியில் இல்லை. வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடிக்கமுடியாதபோது ஸ்பின்னரை அடிக்க ஆசைப்படுவதால் சாவ்லா, கார்ன் ஷர்மா ஆகியோருக்கு விக்கெட் விழுகிறதே தவிர இவர்களின் முழுமையான, அதிரடியான, பயப்படும்படியான பந்துவீச்சால் விக்கெட்கள் விழவில்லை. இந்தப் பிரச்னையை சென்னை ஜஸ்ட் லைக் தட் சரிசெய்துவிட முடியும். கடந்த ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்கள் எடுத்த, சமீபத்தில் நடந்துமுடிந்த சிபிஎல் போட்டிகளிலும் அசத்திய இம்ரான் தாஹிர் சென்னையில்தான் இருக்கிறார்.

Imran Tahir

தாஹிருக்கு இடம் கிடையாதா?!

அரபு பிட்ச்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பின்னர்களுக்கு, ஸ்லோ பெளலர்களுக்கு சாதகமாக மாறிவருகிறது. இந்த சூழலில் தோனி இன்னமும் இம்ரான் தாஹிரை ப்ளேயிங் லெவனில் கொண்டுவர யோசிக்கிறார். அதற்கு என்னவெல்லாமோ காரணங்கள் சொல்கிறார். உண்மையில் அவருக்கு பிராவோவை வெளியே எடுக்க விருப்பம் இல்லை என்றே தெரிகிறது. பிராவோவை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக நினைக்கிறார். பிராவோவைப் போலவே இம்ரான் தாஹிரும் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவரே. 16-20 ஓவர்களில் பிராவோவைவிடவும் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து, அதிக விக்கெட்டுகளையும் எடுத்திருப்பவர் தாஹிர். ஆனால், தாஹிரை ப்ளேயிங் லெவனுக்குள் எடுப்பதில் தோனிக்கு இன்னமும் தயக்கம் இருக்கிறது.

Also Read: IPL 2020: சேஸிங்கில் திணறிய ஐதராபாத்... மீண்டும் 2010 மேஜிக்கை நிகழ்த்துமா சென்னை? #SRHvCSK

சிக்ஸர் பிரச்னை!

பெரிய மைதானமான அபுதாபியோ, சிறிய மைதானமான ஷார்ஜாவோ சென்னை பேட்ஸ்மேன்களிடம் இருந்து இந்த ஐபிஎல்-ல் அதிகப்படியான சிக்ஸர்கள் பறக்கவில்லை. முதல் சுற்றில் 7 போட்டிகளில் 35 சிக்ஸர்கள்தான் அடித்திருந்தது சென்னை. மற்ற அணிகளோடு ஒப்பிடும்போது இதுதான் குறைவு. முதல்முறையாக நேற்றுதான் சாம் கரண், வாட்சன், ராயுடு, தோனி, ஜடேஜா என எல்லோரிடம் இருந்தும் சிக்ஸர்கள் பறந்தன. நேற்று மட்டுமே 9 சிக்ஸர்கள் அடித்தார்கள். இதன்மூலம் சிக்ஸர் பிரச்னையைத் தீர்ப்பதில் சென்னை கவனம் செலுத்துவது தெரிகிறது. ஆனால், இன்னமும் டாட் பால் பஞ்சாயத்து ஓயவில்லை. 6-16 ஓவர்களில் மிக மிகப்பொறுமையாக ஆடும் அணியாக இருக்கிறது சென்னை. மிடில் ஓவர்களில் டாட் பால்கள் அதிகமாக இருப்பதோடு, சிங்கிள், டபுள் ரொட்டேஷனுமே குறைவாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் அடுத்தடுத்தப் போட்டிகளில் தீர்க்கப்படவேண்டியது மிக அவசியம். இந்த ஓட்டைகள் எல்லாம் அடுத்த இரண்டு போட்டிகளுக்குள் சரிசெய்யப்பட்டால்தான் சென்னை எப்படியாவது முட்டிமோதி ப்ளே ஆஃபுக்குள் இடம்பிடிக்கும்!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-has-chennai-sorted-out-its-problems-post-the-win-csk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக