Ad

புதன், 14 அக்டோபர், 2020

ராகவேந்திரா மண்டப சொத்துவரி விவகாரம்: நீதிபதி எச்சரிக்கை - பின்வாங்கிய ரஜினி தரப்பு!

சென்னை, கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமணம் மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்துக்குச் சொத்துவரியாக ரூ.6.5 லட்சம் செலுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி

அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இந்தநிலையில், பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு சொத்துவரியாக ரூ.6.5 லட்சம் செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காத நிலையில், வருமானம் இல்லாத சூழலில் இந்த உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி மேல் நடவடிக்கை எடுக்கவோ, அபராதம் விதிக்கவோ, அபராத வட்டி விதிக்கவோ தடைவிதிக்க வேண்டும். மேலும், சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read: `யார் அந்தக் கறுப்பு ஆடு?' - சீறிய ரஜினி

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, `மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி 10 நாள்களுக்குள் நீதிமன்றத்துக்கு அவசரமாக வந்தது ஏன்?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த வழக்கு மூலம் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என்றும் எச்சரித்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து நடிகர் ரஜினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். ரஜினி தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. மேலும், இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிந்த பின்னர், இது தொடர்பாக உத்தரவு பிறக்கப்படும் என்றுகூறி வழக்கை ஒத்திவைத்தது.



source https://www.vikatan.com/news/judiciary/rajini-to-withdraw-his-petition-against-property-tax-issue-in-madras-hc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக