Ad

புதன், 14 அக்டோபர், 2020

முதலீடு செய்வதில் எங்கெல்லாம் நாம் சறுக்குகிறோம்? ஓர் உளவியல் அலசல்

நகரங்களில் பாம்புகள் அருகிவிட்ட இந்தக் காலத்திலும் பாம்பு என்ற வார்த்தையே நம்மை பதறவைக்கிறது. இதற்கு காரணம் மனிதன் மனதில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பதிந்திருக்கும் தற்காப்பு உணர்வுகள்தான். ஆதி மனிதன் பார்த்து பயந்த ஆபத்துகள் இன்னும் நம் மனதில் நீங்காமல் நிலைத்துள்ளன.

ஆனால், இன்றைய ஆபத்துகளே வேறு; அவை பற்றிய விழிப்புணர்வு இன்னும் நமக்கு ஏற்படவில்லை. காரணம், அவை பாம்பைப் போல அல்லது தீயைப் போல, நமக்கு உடல்ரீதியாக உடனடியாகவோ, வெளிப்படையாகவோ கெடுதல்களை ஏற்படுத்துவதில்லை. அவை நம் மனதையும், அதன் மூலம் நம் பர்ஸையும் குறிவைக்கின்றன. எந்த விதத்தில் காய் நகர்த்தினால் இந்தப் பட்சி விழும் என்று திட்டமிட்டு செயலாற்றுகின்றன.

share market

மூளைச்சலவை

யானையை வசமாக்குவது போல் மனித மனதை வசமாக்கும் வேலையும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. 2,500 வருடங்களுக்குமுன்பே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் மனித மனத்தை வசமாக்கி, வெற்றிகொள்ளும் வித்தைகள் பற்றி பேசியுள்ளார். இன்று அவற்றை முறையாகக் கற்றுத் தர கல்வி நிலையங்களும், கற்றுத் தேர்ந்தவர்களுக்கு வேலை தர பல கம்பெனிகளும் வந்துவிட்டன.

இவர்களில் பலரின் நோக்கமும் ஒன்றே... நாம் அறியாமலேயே நம் மனதுக்குள் புகுந்து எண்ணங்களை வசப்படுத்தி, அட்டைப் பூச்சி போல வலி தெரியாமல், நம்மிடமிருக்கும் பணத்தை உறிஞ்சுவதுதான். அவர்கள் உபயோகப்படுத்தும் யுக்திகள் பற்றியும், அவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் ராபர்ட் சியல்டினி என்ற சமூக உளவியலாளர் கூறுவதைப் பார்க்கலாம்...

1. பற்றாக்குறை மனப்பான்மையை ஏற்படுத்துதல்

ஏதாவது ஒரு பொருள் சற்று பற்றாக்குறையாக இருக்கிறது என்று தோன்றினால், அதை வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ மனிதன் மனதில் தோன்றிவிடுகிறது. சமீபத்தில் கொரோனா லாக்டௌனில் அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பரை பண்டல், பண்டலாக வாங்கி பதுக்கினார்கள். டாய்லெட் பேப்பர் கிடைக்காமல் போனால் அவதிப்படுவோமே என்கிற பயம்தான் இதற்குக் காரணம்.

IPO

மனிதன் மனதின் இந்தப் போக்கை சரியான விதத்தில் ஐ.பி.ஓ (Initial Public Offer) என்னும் முதன்முறை பங்கு வெளியீடுகளில் பயன்படுத்துகிறார்கள். பங்கின் விலை அதிகமாக இருந்தாலும் பலமடங்கு விண்ணப்பங்கள் குவிவதையும், வெளியீடாகும் அன்று அதன் விலை இன்னும் பல மடங்கு ஏறுவதையும், சமீபத்திய கேம்ஸ், கெம்கான் போன்ற பங்கு வெளியீடுகளில் பார்த்தோம். இதன் பின்னிருந்து இயக்குவது பற்றாக்குறை மனப்பான்மைதான். இந்தப் பற்றாக்குறை மனப்பாங்கால் பங்குகளைத் துரத்தி கைப்பொருளைத் தொலைத்தவர் அனேகம். இதை எப்படி கையாள்வது?

ஐ.பி.ஓ பங்குகளை வெளியீடன்று வாங்க முற்படாமல் சற்று பொறுமை காத்தால், நிச்சயம் அவை காற்றுப் போன பலூன் போல விலை இறங்கும்; (சந்தேகமிருந்தால், கேம்ஸ், கெம்கான் பங்குகளின் இன்றைய விலையைப் பாருங்கள்). அப்போது அவற்றை வாங்குவது உசிதம்.

2. மனதை அள்ளும் நடத்தை

தனியார் வங்கிகள், இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இவற்றிலிருந்து வந்து உங்களை சந்திக்கக்கூடிய நபர்கள் நல்ல அறிவாற்றலும், பழகுவதற்கு இனிய நடத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் நலனில் நிஜமான அக்கறையும் இருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய முக்கிய நோக்கம், தங்கள் கம்பெனிக்கு லாபம் தேடித் தருவதுதான். கம்பெனிக்கு உண்மையாக இருக்க எண்ணும் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், அளவுக்கு அதிக கமிஷன், ஆலோசனைக் கட்டணம் போன்ற செலவினங்கள் உங்கள் முதலுக்கு மோசம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

இதைத் தவிர்க்க அவர்கள் வரும்முன்பே ஓரளவு அவர்கள் தரப் போகும் திட்டங்களைப் பற்றியும், சந்தையில் இருக்கக்கூடிய மற்ற திட்டங்கள் பற்றியும், செலவினங்கள் பற்றியும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. அவசரப்படாமல் பொறுமையாக அவர்களிடம் பேசினால் செலவினங்களைக் குறைக்க அவர்களே வழிசொல்வார்கள்.

money

3. பரிசுப் பொருள்கள் தருதல்

யாராவது ஒரு பொருளைப் பரிசாக தந்துவிட்டால், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவது மனித சுபாவம். நகைக் கடைகளில் காப்பி அல்லது கூல்டிரிங்க் கொடுத்து உபசரிக்கும்போது ஏதாவது வாங்காமல் அங்கிருந்து கிளம்ப மனம் வருவதில்லைதானே? சிலர் ஐந்து ரூபாய் பெறுமான மலர்களைத் தந்து, டொனேஷன் பெற்றுச் செல்வதும் இந்த அடிப்படையில்தான்.

இப்படி மென்மையான மனங்களை உடையவர்கள் பரிசுப் பொருள்களை ஏற்பதைத் தவிர்க்க வேண்டும். அல்லது அதை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டு, தங்கள் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

4. மந்தை மனப்போக்கிலிருந்து விலகி இருத்தல்

பல பேர் சேர்ந்து ஒரு முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்; அல்லது ஒரு நிபுணர் சொன்னால் அதில் தவறு இருக்காது என்று எண்ணும் மந்தை மனப்போக்கு பலரிடம் இருக்கிறது. இதை உறுதி செய்ய சியல்டினி, தன் உதவியாளரை பலர் கூடும் இடத்தில் வானத்தைப் பார்த்தபடி நிற்கும்படி சொன்னாராம். அந்த உதவியாளரைத் தொடர்ந்து பலரும் ஏனென்று தெரியாமலேயே வானத்தைப் பார்த்தபடி நின்றிருந்தனராம். புதிதாகப் பங்குச் சந்தைக்குள் நுழைபவர்கள் டிவி, யூடியூப் பார்த்து அல்லது நண்பர்கள் கருத்தைக் கேட்டு பங்குகள் வாங்குவது இதனால்தான். இதைச் சில கம்பெனிகள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் கம்பெனி பற்றி பொய்யான தகவல்களைக் கசியவிட்டு, மூளைச் சலவையில் ஈடுபடுகின்றன.

Investment

தப்பிக்கும் வழி

இந்த மந்தை மனப்போக்கைத் தவிர்க்க ஒரே வழி ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொண்டு மெய்ப்பொருள் காண்பதுதான். நமது தேவைகளை, பண / மனநிலைகளை அறிந்தவர் நம்மைவிட யார்? ஆகவே, பிறரை கண்மூடித்தனமாகப் பின்தொடராமல், நமக்கு நன்கு புரியக் கூடிய, நம் நிலைமைகளுக்கு ஏற்ற முதலீடுகளை மேற்கொள்வது நலம்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; அதைவிட கஷ்டப்பட்டுச் சேமிக்கிறோம்; அந்தப் பணத்தை சரியாக முதலீடு செய்து, அதன் பலனை நாம் அனுபவிப்பதுதானே முறை? அதற்கு இடைஞ்சலாக இப்படி, புதிதாக நம் அறிவுக்கும் பணத்துக்கும் முளைத்திருக்கும் சவால்களையும், அவற்றை சமாளிக்கும் வழிமுறைகளையும் அறிந்துகொள்வது நம் பர்ஸுக்கு நல்லது.



source https://www.vikatan.com/business/investment/how-psychological-factors-influence-your-investment-decisions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக