Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

4 சாட்சிகள்; 5 பேர் கைது! - டி.ஆர்.பி. வழக்கில் மும்பை காவல்துறை அதிரடி

இந்தியாவில் டி.ஆர்.பி. (டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் - TRP) கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ் இயங்கி வரும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம், BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது.

இந்நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக மோசடி செய்திருப்பதாக ஆங்கில செய்தி ஊடகமான ரிபப்ளிக் டி.வி, மராத்தி சேனல்களான `Fakt Marathi', `பாக்ஸ் சினிமா' உள்ளிட்ட சேனல்கள் மீது ஹன்சா ரிசர்ச் (Hansa Research)" என்ற தனியார் நிறுவனம், குற்றம்சாட்டியதை அடுத்து மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கூறுகையில், ``டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி, அதன் மூலம் விளம்பரங்களைப் பெறுவதற்காக மும்பையிலுள்ள சில வீடுகளுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரே சேனலை பார்க்க வைத்திருக்கிறார்கள். தங்கள் சேனலைப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒரு வீட்டுக்கு, மாதம் ரூ.400 முதல் ரூ.700 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றப் பின்னணியை கண்டறிய முயற்சித்து வருகிறோம்" என்றார்.

டி.ஆர்.பி

ரிபப்ளிக் டி.வி-யைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மும்பை காவல்துறை தெரிவித்ததை அடுத்து, இந்த விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்று தகவல் வெளியானது. இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சேனல்களுக்கு எதிராக, 4 நபர்கள் முக்கிய சாட்சிகளாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், ஆங்கில செய்தி நிறுவனமான ரிபப்ளிக் டி.வி, அதிக நேரம் அந்த சேனலை பார்க்க மாதம் மாதம் பணம் கொடுத்ததாகவும், ஆஜர்படுத்தப்பட்ட நான்காவது நபர் அதே குற்றச்சாட்டை பாக்ஸ் சினிமா சேனலுக்கு எதிராக முன்வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும், சாட்சிகளின் அடிப்படையில் ரிபப்ளிக் டிவி டி.ஆர்.பி. வழக்கில் சம்பந்தபட்டதுதான் என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால், இந்த கட்டத்தில் வெளியிடப்படும் எந்த தகவலும் விசாரணையை பாதிக்கும் என்று கூறி விரிவாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்".

Also Read: ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 164 -ன் கீழ் வழக்கில் முக்கிய சாட்சிகளாகக் கருதப்படும் நான்கு பேரின் வாக்குமூலம் விசாரணையின்போது மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள், தாமாக முன்வந்து சாட்சி சொன்னதாக மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்ட பின்னர்தான் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றார் பரம்பீர் சிங்.

இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து பேரில், ஹன்சா ரிசர்ச்சின் முன்னாள் ஊழியர் உட்பட மூன்று பேர், இந்த மோசடியின் ஒரு அங்கம் என்றும், இவர்கள்தான் வீடுகளுக்கு பணம் கொடுத்ததாகவும் போலீஸாரிடம் கூறியதாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையில்ரிபப்ளிக் டிவியின் மூத்த நிர்வாக ஆசிரியர் அபிஷேக் கபூரிடம் போலீஸார் நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். அந்த சேனலின் நிர்வாக ஆசிரியர் நிரஞ்சன் நாராயணசாமியின் விளக்கத்தையும் போலீஸார் பதிவு செய்தனர்.

பரம்பீர் சிங்

இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 'ரிபப்ளிக் டிவி' நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ``உங்களுக்கு மும்பையில் கிளை உள்ளது. இந்த வழக்கையும் மும்பை போலீஸார்தான் விசாரித்து வருகின்றனர். அதனால், முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். அவ்வாறு உயர் நீதிமன்றத்தை புறந்தள்ளி, நாங்கள் விசாரித்தால், அது தவறாகிவிடும். ஊரடங்கு காலத்திலும், உயர் நீதிமன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு செல்லுங்கள்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/mumbai-police-arrests-5-in-trp-scam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக