Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

`ஒரே நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்; எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!’-அ.தி.மு.க-வில் மாறும் காட்சிகள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே’ என்றும் எடப்பாடி பழனிசாமி வந்தபோது `நிரந்தர முதல்வரே’ என்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னையைத் தீவிரமாக்கின ஆதரவாளர்கள் எழுப்பிய இந்த கோஷங்கள்.

காந்தி படத்துக்கு மரியாதை

இதையடுத்து, செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருமே இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என ஓ.பன்னீர்செல்வம் பேச, எடப்பாடி பழனிசாமியும் தனது பங்குக்கு காரசாரமாகப் பதில் கொடுத்திருந்தார். இது முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு தூபம் போட்டது. வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட விவகாரங்களால் காலை 10 மணியளவில் தொடங்கிய செயற்குழுக் கூட்டம் 5 மணிநேரத்துக்கு நீடித்தது. செயற்குழுக் கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை நோக்கி இரட்டைஇலை சின்னத்தைக் காட்டியவாறே காரில் ஏறிச் சென்றார்.

Also Read: `முதல்வர் வேட்பாளர்; அக்டோபர் 7 டார்கெட்!' - 5 மணி நேரம் நீடித்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

முதல்வர் வேட்பாளரை அந்தக் கூட்டத்திலேயே முடிவு செய்ய வேண்டும் என மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், கூட்டம் எந்தவொரு முடிவையும் எட்டாமலேயே முடிவுக்கு வந்தது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அதுகுறித்து அறிவிப்பார்கள்’’ என்றார்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்

ஆனால், செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகான ரியாக்‌ஷன் அ.தி.மு.க-வில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பி.எஸ் தவிர்த்தார். தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னள் எம்.பி வைத்திலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பி.எஸ். அதேபோல், சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் தொடக்கவிழாவுக்கு ஓ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை என்று பரபரத்தது அ.தி.மு.க வட்டாரம்.

Also Read: ``ரகசியங்களை உடைக்கட்டுமா?” - ஆவேச ஓ.பி.எஸ்; மிரளும் எடப்பாடி!

ஓ.பி.எஸ், தனது பொதிகை இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டபோது அவரது காரில் இருந்து தேசியக் கொடி கழற்றப்பட்டதாக வெளியான தகவல் வேறுமாதிரியான ஊகங்களுக்கு இட்டுச் சென்றது. அரசு நிகழ்ச்சிகளை அவர் தவிர்ப்பதாகவும் பேசப்பட்டது. இந்தநிலையில், திடீரென சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ``தேவைப்பட்டால் உங்களை அழைக்கிறேன்’’என்று பதில்கொடுத்தார். எப்போது என்ற கேள்விக்கு, ``நாளையாகக் கூட இருக்கலாம்’’ என்றார்.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இந்தநிலையில், ``அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டிகொடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் பேசியது தவறு என அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு செயலாளரான ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தலைமை அறிவிக்கும் என்று கூறியதுடன் திண்டுக்கல் சீனிவாசனையும் கண்டித்தனர். அதன்பிறகு, `இனிமேல் வாய்திறப்பதாக இல்லை’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பின்வாங்கினார். அதன்பிறகு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் திட்ட தொடக்கவிழாவிலும் ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நேருக்கு நேர் பார்த்துக்கொண்ட இருவரும், பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, சரோஜா, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் அதிகநேரம் பேசிக்கொள்ளவில்லை.

ஈ.பி.எஸ்-பன்வாரிலால் புரோஹித்-ஓ.பி.எஸ்

சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநருக்கு இருபுறமும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இடையிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வரிலால் புரோஹித்திடம் எதையோ பேசிக்கொண்டிருந்தார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு 7-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வரும் 6-ம் தேதி சென்னை வரும்படி அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/amid-cm-candidate-controversy-admk-mlas-asked-to-come-to-chennai-on-october-6th

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக