Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

`2013 ஆகஸ்டில், இலங்கையில் இருந்தேன்!’- அனுராக்; பாலியல் புகார் விசாரணையில் நடந்தது என்ன?

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் மீது தற்போது விசாரணை தொடங்கி உள்ளது. அனுராக் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் மும்பை காவல்துறையில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் 2013-ம் ஆண்டு தனக்கு படவாய்ப்பு கேட்டு அனுராக்கை சந்திக்க சென்றபோது, அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய நடிகை பாயல், மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயுடன் மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாளிகை சென்று ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியாவுடனான சந்திப்பினால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆளுநரிடம் அனுராக் காஷ்யாப்-ஐ கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் பாயல்.

இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுராக் காஷ்யாப்-க்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனது வழக்கறிஞர் பிரியங்கா கிமானியுடன் அனுராக், மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் ஆஜரானார். அனுராக்- காஷ்யாப்-பிடம் பெண் காவல் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் அனுராக், தன் மீதான குற்றசாட்டுகளை மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அனுராக் காஷ்யப்

விசாரணைக்கு பின்னர் அனுராக் காஷ்யப் தரப்பு வழக்கறிஞர் பிரியங்கா கிமானி, விசாரணை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ``அனுராக் தன் மீதான குற்றசாட்டுகள் அனைத்தையும் விசாரணையின்போது மறுத்தார். தனது கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களையும் அவர் காவல் அதிகாரிகளிடம் காண்பித்தார். பாயல் கோஷ், தன் மீது கொடுத்த புகார் முழுக்க முழுக்க பொய் என்று தெரிவித்தார் அனுராக். மேலும், 2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது படத்தின் படபிடிப்பு காரணமாக, இலங்கையில் இருந்தார். அதற்கான ஆவணங்களும் அனுராக் சமர்பித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: `முதலில் நீங்கள் வெளியிடுங்கள் பிறகு எங்களிடம் கேட்கலாம்’ - மோடியைச் சீண்டும் அனுராக் காஷ்யப்

மேலும், ``ஆகஸ்ட், 2013 சம்பவம் என்று கூறப்படும் இந்த திடீர் மற்றும் தாமதமான குற்றச்சாட்டுகள், காஷ்யப்பை இழிவுபடுத்தும் நோக்கத்துக்காக, நீதித்துறையின் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், புகார்தாரரால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. போலியான குற்றசாட்டுகள் நிச்சம் நிற்காது என்பதில் அனுராக் காஷ்யாப் உறுதியாக இருக்கிறார்.

அனுராக் கஷ்யப்

தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளால் அனுராக், தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியதாக வேதனை அடைந்துள்ளார். இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டையும் கடுமையாக மறுக்கிறார் அனுராக். மேலும், குற்றவியல் நீதி முறையை தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், அவரின் சொந்த நோக்கங்களுக்காக மீ டூ இயக்கத்தை பயன்படுத்தியதற்காகவும் நடிகை பாயல் கோஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனுராக் கோரிக்கை விடுத்துள்ளார். நீதி வெற்றி பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் அனுராக்” என அவரது தரப்பு வழக்கறிஞரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/social-affairs/crime/investigation-started-in-sexual-harassment-complaint-against-anurag-kashyap

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக