Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

நாமக்கல்:`அரசுப் பணிகள் தரமாக நடக்கணும்!’- வைரல் வீடியோவின் பின்னணி பகிர்ந்த சின்ராஜ் எம்.பி

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 50-வது வார்டில், ரூ. 7.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தண்ணீர்த் தொட்டி தொடர்பான சர்ச்சைப் பதிவு, சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அதைத் திறந்துவைத்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரனை மையப்படுத்தி பரபரப்பு கிளம்பியது. இந்தநிலையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், `அரசுப் பள்ளி சுற்றுச் சுவர் கட்டுமானம் சரியில்லை’ என்று கையால் பெயர்த்துப் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சின்ராஜ் எம்.பி ஆய்வு

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏ.கே.பி.சின்ராஜ். இவர், தனது தொகுதிக்குட்பட்ட மத்திய, மாநில அரசுகளின் நிதிகளில் நடக்கும் அரசு வேலைகளின் தரத்தை தொடர்ந்து ஆய்வுசெய்துவருகிறார்.

Also Read: காந்திசெல்வன் வளர்ந்த அளவுக்கு நாமக்கல்லில் கட்சி வளரவில்லை! காந்திசெல்வன் கவிழ்ந்த கதை

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், மலசமுத்திரம் ஒன்றியத்திலுள்ள கோட்டம்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், மத்திய அரசு நிதி ரூ.27.80 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுவரும் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணிகளை அவர் ஆய்வுசெய்தார்.

சின்ராஜ் எம்.பி ஆய்வு

அப்போது, காம்பவுண்ட் சுவர் எழுப்ப அமைக்கப்பட்ட சிமென்ட் தூண்கள் ஒன்றிலுள்ள கம்பியை பிடித்து இழுக்க, அதிலிருந்த சிமென்ட் கலவை பொலபொலவென்று உதிர்கிறது. அதைப் பார்த்து கோபமான சின்ராஜ், ``இந்த வேலை தரமாகவே இல்லை. உடனே, இதில் மறுவேலை செய்து, தரமாக காம்பவுண்ட் சுவரை அமைக்கணும்" என்று உத்தரவிட, அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

இது குறித்து, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜிடம் பேசினோம். ``நான் வழக்கமாகப் போற ஆய்வுதான். எந்த மீடியாவிலும் நான் அது பற்றிச் செய்தி கொடுக்கலை. எப்படியோ அந்த வீடியோ வெளியில் வந்துவிட்டது" என்றவர், ஆய்வு பற்றிப் பேசினார்.

``அந்த காம்பவுண்ட் சுவர் மத்திய அரசின் நிதியிலிருந்து கட்டப்படுது. ரூ.27.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள வேலை அது. 'தரமாக வேலை நடக்கலை'னு கம்ப்ளெயின்ட் வந்தது. அதைத் தொடர்ந்து, அன்னைக்கு ஆய்வுக்குப் போனேன். அந்த காம்பவுண்ட் சுவர் தூண்கள் தரமாக அமைக்கப்படலை. ஆறு இஞ்ச்க்கு ஒரு ரிங் அமைக்கணும்.

சின்ராஜ் எம்.பி ஆய்வு

ஆனால், ஒரு மீட்டர் அளவில்கூட ரிங் அமைக்கலை. அடிமட்டமும் தரமாக இல்லை. அந்தத் தூண்களில் ஒன்றில் இருந்த கம்பியை பிடிச்சு லேசாக இழுத்தேன். பொலபொலனு சிமென்ட் கலவை கொட்டுது. `இந்த வேலை தரமாக இல்லை. மறுபடியும் தரமாக பணியைச் செஞ்சு முடிக்கணும். இல்லைன்னா, நிதி உங்களுக்கு சேங்ஷன் ஆகாது'னு அதிகாரிகளையும், கான்ட்ராக்டரையும் எச்சரித்தேன்.

Also Read: `ரூ.7.70 லட்சம் தண்ணீர் தொட்டி சர்ச்சை...!’ - திருப்பூர் விவகாரத்தின் பின்னணி

அதோடு, அதை ரிப்போர்ட்டாக அதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். கலெக்டரும், `தரமாக வேலை செய்யணும்'னு அதிகாரிகளை எச்சரிக்கை செய்திருக்கிறார். இது ஒரு பார்ட்தான். நான் இதுவரை, சேந்தமங்கலம், எருமைப்பட்டி, சங்ககிரினு பல ஏரியாக்களில் தரமாக நடக்காத 100 கோடி மதிப்புள்ள, 100-க்கும் மேற்பட்ட அரசுப் பணிகளைத் தடுத்து நிறுத்தி, தரமாகப் பணிகளைச் செய்யச் சொல்லியிருக்கிறேன்.

சின்ராஜ் எம்.பி ஆய்வு

மத்திய, மாநில அரசு நிதிகளில் நடக்கும் வேலைகளை கண்காணிக்கும் குழுவில், அகில இந்திய அளவில் நிலைக்குழு உறுப்பினராக இருக்கிறேன். நாமக்கல் மாவட்டத்தின் தலைவராக இருக்கிறேன். சேலம் மாவடத்தின் துணைத் தலைவராக இருக்கிறேன். அதனால், நான் இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்கும் பணிகளையும் ஆய்வு பண்ணலாம். அரசுப் பணிகள் தரமாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், தொடர்ந்து ஆய்வுக்குப் போய்க்கிட்டு இருக்கேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/namakkal-mp-chinraj-speaks-about-viral-video-of-inspection-of-government-work

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக