Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

மங்களம் அருளும் சகஸ்ர சண்டியாகம்; சிலிர்ப்பூட்டும் சக்தி லீலா... திருவடிசூலத்தில் நவராத்திரி!

அம்பிகையின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒருவள் சண்டிதேவி. அசுரர்களை வதம் செய்த அன்னை சக்தி சண்டிகையாகத் தோன்றி தேவர்களுக்கு அருள்பாலித்தாள். சண்டிதேவி 13 திருவடிவங்கள் பூண்டு அருள்பாலிப்பவள். ஒவ்வொரு திருவடிவத்தையும் ஆராதிப்பதன் மூலம் ஒரு சிறப்புமிக்க பலனைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

சக்தி

13 சண்டிகை அம்சங்களும் வழிபாட்டுப் பயன்களும் 

ஶ்ரீமகாகாளி சண்டிகை - எமபயம், நோய், ஆகியன நீக்கி நீண்ட ஆயுள் அருள்பவள்

மஹாலட்சுமி சண்டிகை - பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீக்கி செல்வ வளம் அருள்பவள்.

சங்கரீ சண்டிகை - மனக்குழப்பங்கள், மன நோய்கள் அனைத்தையும் நீக்கி அமைதி அருள்பவள்.

ஜயதுர்கா சண்டிகை - தோல்விகளை நீக்கி வெற்றி தருபவள்.

சரஸ்வதி சண்டிகை - ஞாபக மறதி, அறியாமையை நீக்கி நல்லறிவு தருபவள்

பத்மாவதி சண்டிகை - பயம் நீக்கி துணிவைத் தருபவள்

ராஜமாதங்கி சண்டிகை- பதவி உயர்வும் செழிப்பும் அருள்பவள்

பவானி சண்டிகை - சகல பாபங்களும் நீக்குபவள்

அர்த்தாம்பிகை சண்டிகை - கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைத் தருபவள்

காமேஸ்வரி சண்டிகை - குழந்தை பாக்கியம் அருள்பவள்

புவனேஸ்வரி சண்டிகை - இயற்கை சீற்றங்களைப் போக்குபவள்

சூலினி துர்கா சண்டிகை - எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பவள்

திரிபுர சுந்தரி சண்டிகை - மாங்கல்ய பலம் அருள்பவள்.

இந்த 13 அம்சங்களையும் ஒரே நேரத்தில் போற்றிவழிபடும் முறையே மங்கள சகஸ்ர சண்டிஹோமம். 18 கால யாகங்களும் 160 ஆவர்த்திகளும் கொண்ட இந்த மகாவேள்வியை நவராத்திரி நாள்களில் செய்வது மிகவும் சிறப்புடையது. எனவேதான் திருவடிசூலம், ஆதிமகாசக்தி ஶ்ரீதேவி கரிமாரியம்மன் ஆரண்ய க்ஷேத்திரத்தில் மங்கள சகஸ்ர சண்டியாகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 17.10.20 அன்று தொடங்கும் இந்த வேள்வி 26.10.20 வரை நடைபெறுகிறது.

திருவடிசூலம், மிகவும் விசேஷமான தலம். ஏழுமலைகளால் சூழப்பட்டு தென் திருப்பதி என்று போற்றப்படும் தலம். இங்கு செய்யும் வழிபாடுகள் பல்வேறு நற்பலன்களை அளிப்பவை என்பதை பக்தர்கள் கண்டு அறிந்துள்ளனர்.
சண்டியாகம்

நவராத்திரியை ஒட்டி இங்கு நடைபெறும் இந்த சண்டி ஹோமம் மிகவும் சிறப்புடையதாகக் கருத்தப்படுகிறது. தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் யாகங்கள் நடத்தப்பட்டு 25.10.20 அன்று மகாபூர்ணாகுதி நடைபெறும்.

அன்று மாலை நடைபெறும் சக்திலீலா வைபவம் மிகவும் அற்புதமானது. அன்னை ஆதிசக்தி சர்வ அலங்கார ரூபிணியாய்ப் புறப்பட்டு 27 அடி உயரம் கொண்ட மகிஷனை வதம் செய்யும் சிலிர்ப்பூட்டும் காட்சி நடைபெறும். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி வைபவத்தில் வாய்ப்பிருக்கும் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு திருக்கோயில் சார்பில் வேண்டிக்கொண்டுள்ளனர்.



source https://www.vikatan.com/spiritual/temples/navaratri-special-chandi-yagam-at-thiruvadisoolam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக