Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

வரலாறு காணாத அளவு உயரும் இந்தியாவின் பொதுக்கடன் விகிதம்! - ஐ.எம்.எஃப் கணிப்பு

தனிமனிதர்களாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, கடன் வாங்காமல் காலத்தைக் கழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால், இந்தக் கடன் ஓர் அளவுக்குமேல் சென்றால், அதுவே கழுத்தை நெரிக்கும் விஷயமாக மாறிவிடும்.

உலக நாடுகள் பலவும் ஏற்கெனவே வாங்கியிருந்த கடன் கொரோனா தொற்று நோய் ஏற்பட்டதன் காரணமாக விழி பிதுங்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்கிற அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறது ஐ.எம்.எஃப் என்று அழைக்கப்படும் இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட். அதிலும் குறிப்பாக, இந்தியாவின் பொதுக் கடன் விகிதம் மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

90% உயர்ந்த கடன்

கடந்த 30 ஆண்டுகளாக அதாவது, 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பொதுக்கடன் விகிதம் அதன் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) 70% என்கிற அளவிலேயே இருந்துவந்தது. ஆனால், கொரோனா வந்ததன் காரணமாக இந்தியாவின் பொதுக் கடன் விகிதம் அதன் மொத்த பொருள் உற்பத்தியில் 90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவும் வரி வருமானமும்...

இந்தியாவின் பொதுக்கடன் இத்தனை தூரம் திடீரென உயர்ந்ததுக்கு முக்கியமான காரணம், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் மத்திய அரசாங்கம் செலவு செய்ததும் மத்திய அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரி வருமானம் கணிசமான அளவில் குறைந்ததும்தான். இதனால்தான் 17% அளவுக்கு கடன் உயர்ந்து ஏறக்குறைய 90% என்கிற அளவுக்கு எட்டவிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார் ஐ.எம்.எஃப் உயரதிகாரி ஒருவர்.

Rupee

இந்தியாவின் பொதுக் கடன் விகிதம் இப்போது பெரிதாக உயர்ந்திருந்தாலும் 30 ஆண்டுகளுக்கு ஒரே அளவில் ஏறாமல் இறங்காமல் வைத்திருந்தது ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார் அந்த அதிகாரி.

அடுத்து வரும் ஆண்டுகளிலாவது இந்தக் கடனை நமது மத்திய அரசாங்கம் கணிசமாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் திடீர் செலவுகளுக்கு மீண்டும் கடன் வாங்கிச் சமாளிக்க முடியும்.



source https://www.vikatan.com/business/finance/indias-public-debt-ratio-will-jumps-to-90-per-cent-because-of-covid-19-says-imf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக