Ad

புதன், 21 அக்டோபர், 2020

இமயமலையில் பெருங்காயம் பயிரிடும் முயற்சி வெற்றி... இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை!

இந்தியர்களின் சமையலறையில் பெருங்காயம் தவிர்க்க முடியாத ஒரு வாசனைப்பொருள். உலகில் விளைகின்ற பெருங்காயத்தில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இந்தியர்கள்தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்குத் தேவையான பெருங்காயத்தை இதுவரை இரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? யெஸ், வருடம்தோறும் சுமார் 1,200 டன் பெருங்காயத்தை கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் செலவழித்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். பெருங்காயப் பிசினைத் தருகிற தாவர வகைகள் இந்திய மண்ணில் போதிய அளவு கிடைக்காததே, பெருங்காய மரம் இங்கு பயிரிடப்படாததற்கு முக்கியமானக் காரணம்.

பெருங்காயம்

1963 -லிருந்து 1989 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் பெருங்காயச் செடியைப் பயிரிடுவதற்கான முயற்சியை 'நேஷனல் பீரோ ஆஃப் பிளான்ட் ஜெனிடிக் ரிசோர்ஸ்' செய்து பார்த்தது. ஆனால், அதற்கான முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 2017-ல், இந்நிறுவனம் மறுபடியும் இமயமலைப்பகுதியில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் இறங்கியது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம், இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இமாலயாவின் லாஹுல் சமவெளியில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து பெருங்காயத்தைப் பயிர் செய்யவிருக்கிறது. இதற்காக, இரானில் இருந்து 6 வகையான பெருங்காய விதைகள் நியூடெல்லிக்கு வந்தடைந்தது. பெருங்காயம் குளிர்ந்த அல்லது வறண்ட பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது என்பதால், இமய மலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

Also Read: பெருங்காயம்... கடவுளின் அமிர்தம்! நலம் நல்லது-56 #DailyHealthDose

இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சஞ்சய் குமார், கடந்த 15-ம் தேதி லாஹுல் சமவெளியில் உள்ள க்வாரிங் கிராமத்தில் முதல் விதையைப் பயிரிட்டு, இந்தியாவில் பெருங்காயம் விளைவிப்பதற்கான முயற்சியை ஆரம்பித்து வைத்தவர், ''பெருங்காயம் பயிரிடுவது, வளர்ப்பது தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்கள் நம்மிடம் இல்லை என்பதால், லாஹுல் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்குப் பெருங்காயம் பயிரிடுவதற்கான பயிற்சிகளை அளித்துக்கொண்டிருக்கிறோம். இந்த முயற்சி சக்ஸஸ் ஆனவுடன், உத்தரகான்ட், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பெருங்காயம் பயிரிடுதலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பெருங்காயம்

பெருங்காய விதைகள் முளைத்து மண்ணின் மேல் சிறு செடியாகத் தெரிவதற்கே ஒன்றிலிருந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் எடுத்துக்கொள்ளும். அதுவரைக்கும் நம் விவசாயிகள் பொறுமையாக இருக்க வேண்டும். மண்ணைக் கிளறிப் பார்த்துவிட்டார்கள் என்றால், பெருங்காயத்தின் தரம் குறைந்துவிடும். தவிர, பெருங்காயச் செடிக்கு இயற்கை உரங்களைத்தான் போட வேண்டும். கெமிக்கல் உரங்களைப் போடக்கூடாது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அரசாங்க நிதி உதவியுடன், இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் 'டிஷ்யூ கல்ச்சர்' மூலம் பெருங்காயச் செடிகளை ஆய்வகத்தில் வளர்க்க முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், மற்ற நாடுகளிலிருந்து பெருங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இருக்காது'' என்றிருக்கிறார்.

பெருங்காயம் இனி நம் மண்ணிலும் மணக்கட்டும்!



source https://www.vikatan.com/news/agriculture/for-the-first-time-india-started-asafoetida-cultivation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக