Ad

வியாழன், 15 அக்டோபர், 2020

தி.மு.க-வில் நயினார் நாகேந்திரன், முல்லைவேந்தன்? - அறிவாலயத்தின் அடுத்தடுத்த முயற்சிகள்!

பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பிறகு, கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பே அளிக்கப்பட்டது. அதிருப்தியிலிருந்த அவரிடம், தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி டீம் பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க பக்கம் இழுப்பதாகத் தகவல் பரவியது. இந்தச் சூழலில், திருச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தையை இறுதி செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்தத் தகவல்களால் அரண்டுபோன பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், உடனடியாக திருநெல்வெலிக்கு நேரில் சென்று நயினார் நாகேந்திரனைச் சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, தான் பா.ஜ.க-விலேயே தொடரப்போவதாக நயினாரும் வெளிப்படையாக அறிவித்தார். இந்தச் சூழலில்தான், அவரை மீண்டும் கட்சிக்குள் இழுக்க தி.மு.க வலை விரிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நயினார் நாகேந்திரன்

இது குறித்து தி.மு.க வட்டாரங்களில் பேசினோம். ``நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி அல்லது நாங்குநேரி தொகுதியை எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்ப்பதை பா.ஜ.க தலைமை பூர்த்தி செய்யும் என்றாலும், இரண்டு விஷயங்கள் அவர் மனதை நெருடுகின்றன. ஒன்று, தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி உறுதியாகக் கிடைக்குமா என்கிற கவலை. இரண்டாவது, சசிகலாவைத் தொடர்ச்சியாக மத்திய அரசு தாக்கி வருவது சமூகரீதியாக நயினாருக்கு நெருடலை உருவாக்கியிருக்கிறது. இதற்கு மேலும் பா.ஜ.க-வில் தொடர்ந்தால், முக்குலத்தோர் சமுதாயத்தில் தனக்கிருக்கும் சிறிது ஆதரவு வட்டமும் காணாமல் போய்விடும் எனக் கருதுகிறார். இந்தச் சூழலில்தான், அவரை மீண்டும் தொடர்புகொண்டு பேசிவருகிறது அறிவாலயம். பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்தால், மார்க்கண்டேயன் தி.மு.க-வில் இணைந்ததுபோல, நயினாரின் இணைப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றனர்.

Also Read: `திருச்சியில் சந்திப்பு; திருநெல்வேலியில் பதவி!’ - நயினார் நாகேந்திரனை வளைக்கும் தி.மு.க?

நயினாரை வளைப்பது போன்று, தருமபுரி முல்லைவேந்தனையும் சமாதானப்படுத்தி அணைத்துக்கொள்ள ஆட்களை அனுப்பியிருக்கிறதாம் அறிவாலயம். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, முல்லைவேந்தனைச் சந்தித்து தருமபுரி பா.ம.க வேட்பாளர் அன்புமணி ஆதரவு கோரினார். இதைத் தொடர்ந்து தி.மு.க-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் முல்லைவேந்தன். திருவண்ணாமலை, தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவின் சிபாரிசில் தடங்கம் சுப்பிரமணிக்கு தருமபுரி மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டதிலும் முல்லைவேந்தனுக்கு உடன்பாடில்லை.

இந்தப் பொருமல் கடந்த ஓராண்டாக அவருக்கு இருந்துவருகிறது. கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கும் சூழலில், அரூரில் அமைதியாக ஓய்விலிருக்கிறார் முல்லைவேந்தன். சமீபத்தில் நாமக்கல் பார் இளங்கோவன் மூலமாக முல்லைவேந்தனிடம் தூது அனுப்பியது அறிவாலயம். `தருமபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை எனக்குத் தர வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சீட்டும் எனக்கு வேண்டும். இதுக்கு ஓகே என்றால் மேற்கொண்டு பேசலாம்’ என்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் முல்லைவேந்தன்.

அன்புமணியுடன் முல்லைவேந்தன்

இதைத் தொடர்ந்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோதும், `என்னோட கண்டிஷன் என்னனு நான் சொல்லிட்டேன். உங்க அப்பாவை பேசச் சொல்லுங்க’ என்று கூறினாராம் முல்லைவேந்தன்.வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான முல்லைவேந்தனுக்கு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால், தேர்தல் சமயத்தில் அவரை அணைத்துக்கொள்ள மெனக்கெடுகிறது அறிவாலயம். தருமபுரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தருமபுரி, பென்னாகரம், அரூர் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு தடங்கம் சுப்பிரமணியையும், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு முல்லைவேந்தனையும் பொறுப்பாளர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை, முல்லைவேந்தனுடன் `டீல்’ முடியவில்லையென்றால், அவரிடத்துக்கு பாலக்கோடு முருகன் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.

நயினார் நாகேந்திரனையும் முல்லைவேந்தனையும் வளைக்கும் வேலையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது தி.மு.க. எதிர்தரப்பில் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து காட்சிகள் மாறலாம்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/nainar-nagendran-mullaivendan-will-join-in-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக