Ad

சனி, 17 அக்டோபர், 2020

திரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி?

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ளது தே.வாடிப்பட்டி கிராமம். இங்கு, ஆடு மேய்க்கும் தொழில் செய்துவருபவர் நாராயணன். இவருக்கு பரமேஷ்வரி என்ற மனைவியும், ஜீவித்குமார், தீபன் என்ற மகன்களும், சர்மிளா தேவி என்ற மகளும் உள்ளனர். இந்த ஜீவித்குமார்தான், 2020-ம் ஆண்டு நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் வரிசையில், இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.

ஜீவித்குமாரின் தாய் பரமேஷ்வரி

ஜீவித்குமாரின் தாய் பரமேஷ்வரி நம்மிடையே பேசும் போது, ``நானும், என் கணவரும் எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறோம். என் கணவர் 4 ஆடுகள் வைத்திருக்கிறார். நான் நூறு நாள் வேலைக்கு போவேன். நேரம் கிடைக்கும் போது வீட்டில் தையல் தொழில் செய்வேன். இதனை வைத்துதான் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்கணும். தினமும் வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலை. இதில், எங்களால் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முடியாது. எங்களுக்கு அவ்வளவு படிப்பறிவும் இல்லை. எல்லாத்துக்கும் சில்வார்பட்டி அரசுப் பள்ளிதான் காரணம். அங்க இருக்க தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அவனுக்கு நல்லா பாடம் சொல்லிக்கொடுப்பாங்க.

அதனால், 10-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கினான். அவனுக்கு டாக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சான். கோச்சிங் சேத்துவிட எங்களுக்கு வசதி இல்லாததுனால, அவனால நீட் தேர்வில் பாஸ் பண்ண முடியாம போச்சு. அப்புறம்தான் சில்வார்பட்டி பள்ளி ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து, பணம் திரட்டி, சேலத்துல இருக்கும் நீட் கோச்சிங் சென்டர்ல சேர்த்துவிட்டு ஜீவித்குமாரை படிக்க வச்சாங்க. இப்போ இந்திய அளவில் அதிக மார்க் வாங்கிருக்கான். இது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எல்லாத்துக்கும், சில்வார்பட்டி பள்ளிதான் காரணம்” என்றார் நெகிழ்ச்சியோடு.

குடும்பத்தினருடன் ஜீவித்குமார்.

``எனக்கு எல்லாமே என் பள்ளி ஆசிரியர்கள்தான். அவர்கள் இல்லனா நான் இப்போ இங்க இல்ல…” எனப் பேச ஆரம்பித்தார் ஜீவித்குமார். ``அனிதா அக்கா தற்கொலை செய்து இறக்கும் போது, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. 12-ம் வகுப்பில் அவ்வளவு மார்க் வாங்கியும், ஏன் அவங்க தற்கொலை செஞ்சுக்கனும்’னு என் மனசுக்குள்ள கேள்விகள் வந்துகொண்டே இருந்தது. அப்போதான் நீட் தேர்வை எழுதி ஜெயிச்சுக் காட்டணும்’னு எனக்கு தோணுச்சு. அரசு கோச்சிங் சென்டர்ல சேர்ந்து 45 நாள் பயிற்சி எடுத்தேன். அந்த சூழல் எனக்கு ஒத்துவரல. திரும்ப வந்துட்டேன். 2019-ம் வருட நீட் தேர்வில் 119 மார்க்தான் என்னால எடுக்க முடிஞ்சது.

அப்போதான் என் பள்ளி ஆசிரியர்களிடம் பேசினேன். சபரிமாலா உதவியுடன், நாமக்கலில் இருக்கும் தனியார் நீட் கோச்சிங் சென்டர்ல சேர்த்துவிட்டாங்க. இப்போ நான், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 667 மதிப்பெண் பெற்றுள்ளேன். அரசுப்பள்ளி மாணவர்கள் வரிசையில் இந்திய அளவில் முதலிடம் மற்றும் பொதுப்பிரிவில் 1823-வது இடம் கிடைத்துள்ளது. இது எனக்கு மட்டுமல்ல, அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்குமான வெற்றி. என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமான ஒன்று அல்ல என்பதை இந்த நேரத்தில் நான் சொல்ல விரும்புகிறேன். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் கோச்சிங் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்றார் மகிழ்ச்சி பொங்க.

ஆசிரியர் அருள் முருகன்

சில்வார்பட்டி அரசுப்பள்ளி ஆங்கில ஆசிரியர் அருள் முருகனிடம் பேசினோம். ``மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் ஜீவித்குமார் எப்படியாவது நல்ல நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற துடிப்போடு இருந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால், போதிய மதிப்பெண் வாங்க முடியவில்லை. அப்போதுதான், எங்களிடம் வந்து பேசினார். சேலத்தில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். முதல் கட்டமாக, பள்ளி ஆசிரியர்கள் சேர்ந்து ரூ.60,000 வரை வசூல் செய்தோம். தொடர்ந்து நீட் எதிர்ப்பாளர் சபரிமாலா உதவியுடன், நிதி திரட்டினோம்.

அமெரிக்காவில் இருக்கும் சபரிமாலா நண்பர் ஒருவர் ரூ70,000 நன்கொடை கொடுத்தார். அந்த கோச்சிங் சென்டரும், ஜீவித்குமாருக்கு சில சலுகைகள் கொடுத்தது. சிறுக சிறுக பணம் சேர்ந்து ஜீவித்குமாரை படிக்க வைத்தோம். அந்த கோச்சிங் சென்டரில் நடத்திய மாதிரி தேர்வுகள் அனைத்திலும் ஜீவித்குமார் முதல் மதிப்பெண் வாங்கினார். இவர் நீட் தேர்வில் நிச்சயம் அதிக மதிப்பெண் வாங்குவார் என்று அப்போதே எங்களுக்கு புரிந்துவிட்டது. அதே போல நடந்தும் விட்டது. ” என்றார்.

ஜீவித்குமாரை தேனி கலெக்டர் பாராட்டினார்.

நீட் எதிர்ப்பாளர் சபரிமாலாவிடம் பேசினோம். ``நீங்கள் ஒரு நீட் எதிர்ப்பாளராக இருந்துகொண்டு, அரசுப் பள்ளி மாணவனை ஏன் நீட் பயிற்சியில் சேர்த்து படிக்கவைத்து இவ்வளவு மதிப்பெண் வாங்க வைத்திருக்கிறீர்கள் என பலரும் என்னிடம் கேட்கின்றனர். நாங்கள் செய்ததை தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவுதான் இது. கடந்த ஆண்டு சில்வார்பட்டிக்கு வேறொரு வேலையாக சென்றிருந்த போது, பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஜீவித்குமார் எனக்கு அறிமுகம் ஆனார். ஏற்கனவே நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்து, நல்ல பயிற்சி கிடைத்தால் நிறைய மதிப்பெண் வாங்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.

̀உன்னை நல்ல கோச்சிங் சென்டரில் சேர்த்துவிட்டு, பணம் செலவு செய்து படிக்க வைத்தால், எவ்வளவு மதிப்பெண் வாங்குவாய்?’ என அவரிடம் கேட்டேன். `நான் 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன்.’ என்றார். ஒரு வருடத்திற்கு முன்னர் சொன்னதை, இன்று செய்து காண்பித்திருக்கிறார். ஒரு ஏழை மாணவனுக்கு, அரசுப் பள்ளியில் படித்த மாணவனுக்கு, லட்சங்களில் செலவு செய்து, 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து ஊக்கம் அளித்தால் மட்டுமே அவனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க முடியும் என்ற சூழல்தான் தற்போது இருக்கிறது. இந்த சூழலை வெளிப்படுத்தவே ஜீவித்குமாரை நாங்கள் நிதி திரட்டி படிக்க வைத்தோம்.

சபரிமாலா

இப்படியான ஒரு சூழலில் நீட் தேர்வு தேவையா என்ற கேள்வியையும் நாங்கள் அழுத்தமாக முன்வைக்கிறோம். ஆனால், இங்குள்ள பா.ஜ.க உட்பட சிலர், அரசுப்பள்ளி மாணவன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என்றும், அதனால், நீட் தேர்வு எளிமையானது, இதனால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் மக்களிடம் படம் காண்பிக்கின்றனர். அது உண்மையில்லை.!

ஜீவித்குமாரின் வெற்றிக்குப் பின்னால், நிறைய நபர்களின் பங்களிப்பும், உழைப்பும் இருக்கிறது. அதனை அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்க முடியாது. எனவே, தமிழகத்தில் நீட் வேண்டாம் என்கிறோம். இதற்கிடையில், ஜீவித்குமாரின் வீட்டிற்குச் சென்ற பா.ஜ.கவினர், அவருக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்து படம் எடுத்துக்கொண்டு வந்திருக்கின்றனர். ஜீவித்குமார் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. அவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். மக்களை மேலும் மேலும் முட்டாளாக்காதீர்கள்.” என்றார் கட்டமாக.

லட்சங்களில் செலவு செய்து, ஆசிரியர்கள் பலரும் ஊக்கம் அளித்து, தனியார் கோச்சிங் சென்டரில் படித்தால் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை உள்ளதை ஜீவித்குமார் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Also Read: நீட்: `தேர்வெழுதியது 3,536 பேர்; தேர்ச்சி 88,889!’ - சர்ச்சையால் திருத்தப்பட்ட பட்டியல்



source https://www.vikatan.com/government-and-politics/education/how-silvarpatti-govt-school-teachers-and-volunteers-helped-jeevithkumar-to-crack-neet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக