`தி.மு.க நிர்வாகியின் அராஜகத்தைப் பாரீர் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் முன்னிலையில் பூசாரியை எப்படித் தாக்குகிறார் பாருங்கள் என்றும் தி.மு.க-விற்கு எதிராக அணிதிரள்வோம் வாரீர் வாரீர்..' என்ற வாசங்களுடன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கோயிலில் பூஜை செய்வது தொடர்பான பிரச்னை அரசியல்ரீதியாக திசைதிருப்பப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. என்ன நடந்தது என விசாரித்தோம்.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள கண்ணனூரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோயில். இந்தக் கோயில் அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு காசிராஜன் என்பவர் அறங்காவலர் குழுத் தலைவராக உள்ளார். இவரது மகன் லெனின் பூஜைகள் செய்து வருகிறார். மற்றொரு பூசாரியாக இருப்பவர் ஓம்பிரகாஷ். கோயிலில் யார் பூஜை செய்வது என்பது தொடர்பான பிரச்னை இவர்களுக்குள் நீண்டநாள்களாக நீடித்துவந்துள்ளது.
இந்நிலையில், லெனின் வழக்கம் போல் கோயிலை மூடி பூட்டுப் போட்டுச் சென்றிருக்கிறார். நேற்றைய தினம் அமாவாசை என்பதால் ஓம்பிரகாஷ் என்பவர் கோயிலைத் திறந்து பூஜைகள் செய்திருக்கிறார்.
பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி ஓம்பிரகாஷை, கருவறைக்குள் புகுந்து லெனின் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனின் மகன் தான் லெனின். இவரது மனைவி கண்ணனூரில் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலராக இருந்துவருகிறார். கோயிலில் மற்றொரு பூசாரியாக இருப்பவர் ஓம்பிரகாஷ். இருவருக்கும் கோயிலில் யார் பூஜை செய்வது என்பது தொடர்பான பிரச்னை பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஓம்பிரகாஷ் கோவிலில் பூஜை செய்யக்கூடாது என்று லெனின் தடுத்திருக்கிறார்.
இதனை எதிர்த்து ஓம்பிரகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், நீதிமன்றமும் அவரை முறை செய்யச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. ஆனாலும், லெனின் அவரை விடாமல் தடுத்திருக்கிறார். இந்நிலையில், நேற்று ஓம்பிரகாஷ் கோயிலில் முறை செய்தபோது, அதனை நிறுத்தச் சொல்லி லெனின் திட்டியிருக்கிறார். ஆனால், அவர் நிறுத்தாமல் செய்திருக்கிறார். இருவருக்குள் வாக்குவாதம் முற்றிப்போய், அடிதடி ஏற்பட்டுள்ளது. இருவருமே மாறிமாறித் தாக்கிக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஓம்பிரகாஷ் மட்டும் அடிவாங்குவதுபோல் வீடியோவை எடிட் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அத்தோடு இது தேர்தல் நேரம் என்பதால் கட்சிரீதியாக இதைச் செய்கிறார்கள். இதுகுறித்து இரு தரப்பிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றனர். இந்து முன்னணியின் தூண்டுதலின்பேரிலேயே இதைச் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது.
source https://www.vikatan.com/social-affairs/controversy/clash-between-two-temple-priests-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக