Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம்... முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் கருத்தும் ரியாக்ஷனும்!

அண்ணா பல்கலைக் கழகத்துக்கான 'சிறப்பு அந்தஸ்து' விவகாரம் தமிழக அரசியலில், அடுத்தடுத்த எதிரெதிர் கருத்துகளால் விறுவிறு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

'சிறப்பு அந்தஸ்து எங்களுக்குத் தேவையில்லை' என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பாராட்டுகிறார். ஆனால், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமி, 'தமிழக அரசின் நிலைப்பாடு தவறானது' என்று விமர்சிக்கிறார்.

அண்ணா பல்கலைக் கழகம்

ஏழை, எளிய மக்களும் குறைந்த கட்டணத்தில் தொழில்நுட்பக் கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெற்று, கல்வியில் வளர்ச்சியடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கடந்த 1978-ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது 'அண்ணா பல்கலைக் கழகம்'. அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அண்ணா பல்கலைக் கழகமும் சிறப்புற செயல்பட்டு தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தை உலகத் தரத்தில் தரம் உயர்த்துவதற்காக 'சிறப்பு அந்தஸ்து' வழங்கக்கோரி பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசின் மனிதவளத் துறைக்கு நேரடியாக கடிதம் எழுதினார். துணைவேந்தரின் இந்த தன்னிச்சையான செயல்பாடு தமிழக அரசியலில் பலத்த எதிர்ப்பு அலையை உருவாக்கியது.

'அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமேயானால், அது மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் 69% இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி புறக்கணிக்கப்படும்' என்பது போன்ற அம்சங்களை எடுத்துக்கூறி எதிர்ப்பு வலுத்தது.

இதையடுத்து, தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ''அண்ணா பல்கலைக் கழகத்துக்கான மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து எங்களுக்குத் தேவையில்லை. ஏற்கெனவே அது உலகத் தரத்தில்தான் செயல்பட்டு வருகிறது. மேற்கொண்டும் மாநில அரசே அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக் கழகத்தை மேம்படுத்தும். இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது தவறு'' என்று அழுத்தம் திருத்தமாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

பாலகுருசாமி

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை, அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமி, மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பாலகுருசாமி, ''மத்திய அரசின் 'சிறப்பு அந்தஸ்தை' தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல். சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அதிக நிதி உதவி கிடைக்கப்பெற்று பல்கலையின் கல்வித் தரத்தை இன்னும் தரம் உயர்த்த முடியும். துணைவேந்தர் சூரப்பா இதுகுறித்து மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியதும் தவறில்லை. எனவே, தமிழக அரசு, 'சிறப்பு அந்தஸ்து' தொடர்பான தனது முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்'' என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

முன்னாள் துணைவேந்தரின் இந்தப் பேச்சு குறித்து, வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு பேசும்போது, ''பொதுவாக, மாநில அரசு பரிந்துரைக்கக் கூடியவரைத்தான் 'பல்கலைக் கழக துணைவேந்தராக' நியமனம் செய்வார்கள். ஆனால், இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்காமல், 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பாவை நியமனம் செய்தது மத்திய அரசு. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னைகளோடு இந்த நியமனப் பின்னணியையும் சேர்த்தே பார்க்க வேண்டியதிருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகம் தற்போதே நல்ல முறையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை மேற்கொண்டும் சிறந்த முறையில் நிர்வகிப்பதென்பது மாநில அரசின் கடமை, உரிமை. துணைவேந்தராக வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பணியைவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், பல்கலைக் கழகமும் மாநில ஆட்சியும் தொடர்ந்து செயல்பட்டு வருபவை.

வன்னி அரசு

மாநில மக்களின் நிலை, சமூகத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில்தான் மாநில அரசுகள் தங்கள் கல்விக் கொள்கைகளை தீர்மானிக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டின் சமூக நீதியைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளே கல்விக் கொள்கைகளாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, பல்கலைக் கழக முன்னேற்றம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர், முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர் உள்ளிட்டோரைக் கொண்ட மாநில அரசுதான் செயல்படுத்த வேண்டும். துணைவேந்தர் என்ற ஒரு தனிநபர் மாநில அரசின் உரிமையில் அத்துமீறித் தலையிடக் கூடாது. மத்திய அரசுக்கு நேரடியாக துணைவேந்தர் சூரப்பா, கடிதம் எழுதியிருப்பதுவே தமிழ்நாட்டு மக்களை அவமரியாதையாக, துச்சமாக மதிக்கின்ற செயல்தான்.

Also Read: `எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?

ஆனால், இந்த அடிப்படை உண்மையைக்கூட புரிந்துகொள்ளாமல், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியிருப்பதை 'உண்ட வீட்டுக்கு இரண்டகம்' செய்ததாகத்தான் நான் பார்க்கிறேன். புதிய கல்விக் கொள்கையை அவர் ஆதரிப்பதாகட்டும், கல்விக் கொள்கை தொடர்பான அவரது முடிவுகளாகட்டும்... எல்லாமே மாநில உரிமைகளுக்கு எதிராக, மக்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது.

கல்வியாளர்கள் என்றாலே எல்லோரும் அறிவியல் பூர்வமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படி அறிவியல் பூர்வமாக இல்லாமல், சனாதனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கல்வியாளராகத்தான் பாலகுருசாமியைப் பார்க்கமுடிகிறது.

அண்ணா பல்கலைக் கழகம்

துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியது தவறு இல்லை என்று பேசியிருக்கிறார் முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமி. அப்படியென்றால், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இவர் இருந்தபோது, இதுபோன்று மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதத்தை எழுதியிருக்கிறாரா... இல்லையே! ஆக, இன்றைக்கு மக்களின் பண்பாட்டுக்கு எதிராக இப்படியான செயல்பாடுகள் தொடர்கிறது என்பது, மிகப்பெரிய மோசடி - அநீதி'' என்றார் காட்டமாக.

'அண்ணா பல்கலைக் கழகத்தை சீர்மிகு நிறுவனமாக மாற்றுகிற மத்திய அரசின் முயற்சி, ஆபத்தான அரசியல் பின்னணி கொண்டது' என்ற கருத்தியலை முன்வைத்துவரும் மருத்துவர் எழிலன், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் பேச்சு குறித்து விமர்சிக்கும்போது, ''தமிழ்நாட்டில், சமூக நீதியின் பயனாக கல்வி கற்று உயர் பதவிக்கு வந்தவர்களே, ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதும், சமூக நீதிக்கு எதிராகப் பேசி வருவதும் கவலையளிப்பதாக இருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகமும், ஐ.ஐ.டி-யும் எதிரெதிரேதான் இருக்கின்றன. ஆனால், சென்னையோடுகூட எந்தவித தொடர்புமின்றி தனித்த தீவாகத்தான் இயங்கிவருகிறது ஐ.ஐ.டி. அதேநேரம், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சின்னஞ்சிறிய கிராமத்திலிருந்து பெரிய நகரங்கள் வரை அனைத்துப் பகுதியிலும் உள்ள சாமான்ய மக்களுக்கும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் நேரடி சம்பந்தம் உண்டு.... காரணம் சமூக நீதி.

அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ சிவன் என அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் அறிவுத்திறனால் உயர் நிலையை எட்ட முடிந்ததின் பின்னணியில் அண்ணா பல்கலைக் கழகத்தின் பங்களிப்பு இருக்கிறது. உலக அளவில் பல்வேறு புகழ்மிக்க ஆய்வுகளை மேற்கொண்டு, அண்ணா பல்கலைக் கழகம் உயர்ந்து நிற்பதற்கு யார் காரணம்... தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவந்த முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள் மற்றும் அவர்கள் அமைத்துத்தந்த குழுக்களும்தானே. முன்னாள் துணைவேந்தரான பாலகுருசாமிக்கும் இந்தப் பின்னணி தெரிந்திருக்கும்.

எழிலன்

'இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் எமினன்ஸ்' (Institutes of Eminence ) என்பதே 'தேசியக் கல்விக் கொள்கை'யின் ஓர் அங்கம்தான். இந்தவகையில், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல் 500 இடங்களில் நம் நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களையும் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 'இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் எமினன்ஸ்' அங்கீகாரம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த வரிசையில் நாட்டிலுள்ள 15 தனியார் கல்வி நிறுவனங்களும் அரசு சார்ந்த 15 கல்வி நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. வணிக நோக்கில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களையும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவருகிற அரசு சேவை சார்ந்த கல்வி நிறுவனங்களையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்ப்பதே முரண்பாடாக இல்லையா?

Also Read: `தேர்தலில் தோற்றால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும்!’- பிரசாரத்தில் ட்ரம்ப்

இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பட்டியலில் உள்ள ரிலையன்ஸ் குரூப்பான ஜியோ கல்வி நிறுவனம் இன்னும் தொடங்கப்படவேயில்லை. அதாவது, 'ஜியோ கல்வி நிறுவனத்துக்கென்று இதுவரை ஒரு கட்டடம்கூட கட்டப்படவில்லை; எந்தவொரு ஆய்வையும் அந்தநிறுவனம் மேற்கொள்ளவுமில்லை'. ஆனாலும்கூட அந்த நிறுவனத்தையும் 'உலகத் தரம்வாய்ந்த சிறந்த கல்வி நிறுவன'ப் பட்டியலுக்கு மத்திய அரசு தேர்வு செய்திருக்கிறது என்றால், அதுகுறித்து பாலகுருசாமிதான் விளக்கம் சொல்ல வேண்டும்.

அண்ணா பல்கலைக் கழகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், 69% இட ஒதுக்கீடு என்னாகும் என்பது பற்றி இதுவரை எந்தவொரு எழுத்து பூர்வமான அறிக்கையையும் மத்திய அரசு கொடுக்கவில்லை என்று நம் மாநில அரசே சொல்லிவிட்டது. ஆக, சாதியின் பெயரால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்டு வந்த ஏழை எளிய மக்களுக்கு இனிமேலும் கல்வியறிவு கிடைக்கக்கூடாது என்ற சூழ்ச்சியின் பின்னணியோடுதான் மத்திய அரசு இப்படி செயல்படுகிறது.

சூரப்பா - கே.பி.அன்பழகன்

உண்மையிலேயே அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்துவதுதான் மத்திய அரசின் நோக்கம் என்றால், அதற்கான செலவுத் தொகையை நம் மாநிலத்துக்கு வழங்கியல்லவா உயர்த்த வேண்டும். அதை விட்டுவிட்டு மாணவர்களிடமிருந்து அதிகத் தொகையை கல்விக் கட்டணமாக வசூலித்து, பல்கலைக் கழகத்தினை தரம் உயர்த்துவோம் என்றால், இது அநியாயம் அல்லவா!

தரம் உயர்த்துகிறோம் என்ற பெயரில், கல்விக் கட்டணத்தை உயர்த்திவிட்டால் ஏழை எளிய மாணவர்கள் படிக்க முடியாது. அடுத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால், 69% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டியதில்லை என ஒட்டுமொத்த சூழ்ச்சிகளின் உருவமாகவே இந்தத் திட்டம் இருக்கிறது.

Also Read: கொரோனா காலத்திலும் பணிக்கு வராத 385 டாக்டர்கள் பணிநீக்கம்! - கேரள அரசு அதிரடி

சரிந்துபோன பொருளாதார நிலையை உயர்த்தத் திராணி இல்லாத மத்திய அரசு, இப்போது கல்வி நிறுவனங்களை உயர்த்துவேன் என்று சொல்கிறதே... இதற்கான நிதி ஆதாரம் மத்திய அரசிடம் இருக்கிறதா?... இன்னும் மிக முக்கியமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல்கலைக்கழக உருவாக்கம், நிர்வாகம் என இரண்டுமே மாநில உரிமைப் பட்டியலில்தான் இருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகம்

கல்வியில் சீர்திருத்தம் வேண்டும் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக குறைந்த கட்டணத்தில் கல்வி, சமூக நீதி என நமது எல்லா நல்ல விஷயங்களையும் மத்திய அரசிடம் காவு கொடுத்துவிட்டுத்தான் அந்த சீர்திருத்தத்தைப் பண்ண வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை!'' என்கிறார் அழுத்தமாக.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/anna-university-row-former-vc-balagurusamys-speech-irks-contro

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக