Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`மோதிக்கொள்ளும் மக்கள்; குடிசைகளுக்குத் தீ’ - என்ன நடக்கிறது அஸ்ஸாம் - மிசோரம் எல்லையில்?

சீனாவுடன் கிழக்கு லடாக், பூடான் எல்லைப் பகுதிகளில் பிரச்னை, எல்லையில் தொடர்ச்சியாக அத்துமீறும் பாகிஸ்தான், நேபாள எல்லையில் துப்பாக்கிச்சூடு என இந்திய ராணுவமும், துணை ராணுவப் படைகளும் எல்லையில் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டுவருகின்றன. அதிலும் குறிப்பாக டோக்லாம் பிரச்னை, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஆகிய சம்பவங்களுக்குப் பின்னர் கிழக்கு லடாக்கிலுள்ள சர்வதேச எல்லையில் சீனா தன் துருப்புகளை அதிகமாகக் குவித்துவருகிறது.

பாங்கோங் சோ ஏரியை ஒட்டியிருக்கும் பகுதிகளில் மட்டும் சீனா ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் குவித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. `இதனால், இரு நாடுகள் உறவில் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது’ என சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இரு தரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

கல்வான் பள்ளத்தாக்கு

அண்டை நாடுகளால் எல்லையில் பதற்றம் நிலவும் இந்தச் சூழலில் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மிசோரம் எல்லையில் மோதல் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அஸ்ஸாம், மிசோரம் இடையே எல்லை தொடர்பாக இரண்டு முறை மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், இருதரப்பைச் சேர்ந்த எட்டுப் பேர் காயமடைந்திருக்கும் நிலையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சில குடிசைகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இதனால், இரு மாநில எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சகம் தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன் மூலம், இரு மாநிலங்கள் இடையில் நீண்டகாலமாக இருந்துவந்த எல்லைப் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Also Read: `15,000 அடி உயரத்தில் டென்ட்; விதிமீறிய சீனா!- கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் தொடக்கப்புள்ளி?

என்ன நடந்தது?

அஸ்ஸாமின் சாச்சார் (Cachar) மாவட்டத்திலுள்ள லைலாபூர் பகுதிவாசிகள் சிலருக்கும், மிசோரத்தின் கோலாசிப் (Kolasib) மாவட்டத்திலுள்ள வைரெங்க்டெ (Vairengte) பகுதிவாசிகளுக்கும் இடையே எல்லை தொடர்பாகக் கடந்த 17-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அப்போது, லைலாபூர் பகுதியைச் சேர்ந்த சிலர், மிசோராம் போலீஸார் மீதும், அங்கிருந்த மக்கள் மீதும் கற்களை வீசித் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து மிசோரம் பகுதியில் வசிக்கும் மக்கள், அவர்களை விரட்டிச் சென்று பதில் தாக்குதல் நடத்தியதாகச் சொல்கிறார் கோலாசிப் காவல் துணை ஆணையர் ஹெச்.லல்தாங்லியானா (H Lalthangliana).

அஸ்ஸாம் எல்லை மோதல்

மேலும் அவர் கூறுகையில், `வைரெங்க்டெ கிராமத்தின் எல்லையை ஒட்டியிருந்த ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி அஸ்ஸாமின் லைலாபூர் பகுதியைச் சேர்ந்த சிலர் 9-ம் தேதி மாலையில் கல் வீசியிருக்கிறார்கள். இதையடுத்து, வைரெங்க்டெ பகுதியைச் சேர்ந்த சிலர், லைலாபூர் பகுதிக்குள் நுழைந்த இருபதுக்கும் மேற்பட்ட குடிசைகளுக்குத் தீவைத்ததுடன் இரு மாநிலங்களிடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 306-ல் தடுப்புகளை அமைத்தனர். 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோதும், சட்டவிரோதமாக பெருமளவில் மக்கள் கூடினர். இந்த மோதலில் ஒருவர் கழுத்தில் கத்தி வெட்டுப்பட்டு படுகாயமடைந்தார். அவர் வைரெங்க்டெ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தற்போது நிலைமை சுமுகமாகியிருக்கிறது’’ என்றார்.

இதேபோல் கடந்த 9-ம் தேதி அஸ்ஸாமின் கரிம்கஞ்ச் (Karimganj), மிசோரத்தின் மமித் (Mamit) மாவட்ட எல்லையில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது, மிசோரத்தைச் சேர்ந்த இருவருக்குச் சொந்தமான நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளுக்குத் தீவைக்கப்பட்டதுடன், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலைக்கொடிகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவல்

இது குறித்துப் பேசியிருக்கும் அஸ்ஸாமின் சாச்சார் மாவட்டத்திலுள்ள தோலாய் தொகுதி எம்.எல்.ஏ-வும், மாநில வனத்துறை அமைச்சருமான பரிமல் சுக்லபாடியா (Parimal Shuklabaidya), ``இருதரப்பிலும் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிவருவதாகவும், அது தொடர்பான பிரச்னையில் ஆண்டுதோறும் இருதரப்பிலும் இது போன்ற மோதல்கள் நடப்பதுண்டு’’ என்று கூறியிருக்கிறார்.

Also Read: `விளையாட்டுக்கு நடுவிலும் விடாத தாய்மைக் குணம்!' -மக்களின் மனதை வென்ற மிசோரம் வாலிபால் வீராங்கனை

எல்லைப் பிரச்னை

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் - மிசோரம் ஆகியவை 164.6 கி.மீ எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இரு மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தப்படி எல்லையில் தற்போதைய சூழலே நீடிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதை மீறி லைலாபூர் பகுதி மக்கள், எல்லையின் ஒரு சில இடங்களில் குடிசைகளை அமைத்தனர். மிசோரம் பகுதி மக்கள் அந்தக் குடிசைகளுக்குத் தீவைத்ததாக மிசோரம் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், பிரச்னைக்குரிய அந்தப் பகுதி ஆவணங்களின்படி தங்களது நிர்வாகத்தின்கீழ் வருவதாக அஸ்ஸாம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லை

அக்டோபர் 9-ல் மோதல் ஏற்பட்ட பகுதியை அஸ்ஸாம் சொந்தம் கொண்டாடினாலும், அந்தப் பகுதியில் தங்கள் பகுதி விவசாயிகள் நீண்டநாள்களாக விவசாயம் செய்துவருவதாக மிசோரம் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட பகுதி அஸ்ஸாமின் கரிம்கஞ்ச் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வரும் சிங்லா ரிசர்வ் வனப்பகுதியில் (Singla Forest Reserve) அமைந்திருப்பதாக ஆவணங்களில் இருக்கிறது. `இரு மாநில எல்லைப் பிரச்னைக்கு வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தப் பகுதியில் குடியேறியவர்களே காரணம்’ என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

`இதற்குக் காரணம் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே. எங்கள் குடிசைகளுக்குத் தீவைத்ததுடன், பயிர்களையும் அவர்கள் நாசம் செய்துவிட்டனர். அத்தோடு போலீஸார் மீதும் அவர்கள் கற்களை வீசித் தாக்கினர்’ என்கிறார் மிசோரத்தின் மாணவர் அமைப்பான எம்.இஸட்.பி-யின் (Mizo Zirlai Pawl) தலைவர் வன்லால்தானா (Vanlaltana). 1972-ம் ஆண்டு வரை லூஷாய் ஹில்ஸ் (Lushai Hills) என்ற பெயரில் அஸ்ஸாமின் ஒரு மாவட்டமாக இருந்தது மிசோரம். பின்னர் அது தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.

அஸ்ஸாம் - மிசோரம் எல்லை

வடகிழக்கு மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்னைகள்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிசோரம் தவிர, இன்றைய நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா ஆகியவற்றை உள்ளடக்கியதாக அஸ்ஸாம் இருந்தது. படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாநிலத்துடனும் அஸ்ஸாமுக்கு எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. அஸ்ஸாம் - நாகாலாந்து மாநிலங்கள் 500 கி.மீ எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இரு மாநில எல்லையிலும் 1965-ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்றுவருவதாகச் சொல்கிறது ராணுவ ஆய்வு மையம். 1979, 1985-ம் ஆண்டுகளில் நடந்த வன்முறைகளில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

Also Read: `திடீரென வெடித்த எண்ணெய்க் கிணறு; பற்றியெரியும் தீ!’- வீரர்கள் 2 பேர் உயிரிழப்பால் பதறும் அஸ்ஸாம்

அதேபோல், 800 கி.மீ எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அஸ்ஸாம் - அருணாச்சலப்பிரதேச மாநிலங்கள் இடையே 1992-ம் ஆண்டு முதல் பிரச்னை இருந்துவருகிறது. இந்த எல்லையிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவகாரமும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மேலும், 884 கி.மீ எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அஸ்ஸாம் - மேகாலயா இடையிலும் எல்லைப் பிரச்னை இருக்கிறது. இரு மாநில எல்லையில் 12 இடங்கள் பிரச்னைக்குரிய இடங்களாக இருப்பதாக மேகாலயா கூறுகிறது. இரு மாநில முதல்வர்களிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் தற்போதைய சூழலே நீடிக்க வேண்டும் என ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா

தற்போதைய நிலை என்ன?

இரு மாநில எல்லைப் பிரச்னை தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனாவல், பிரதமர் மோடி, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோரிடம் பேசியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களிடமும் போனில் பேசியிருக்கிறார். இதையடுத்து, குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் அமைதி திரும்ப இரு மாநில அரசுகளும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவித்திருக்கின்றன. உள்துறை செயலர் அஜய் பல்லா தலைமையில் இரு மாநில தலைமைச் செயலாளர்களும் கலந்துகொண்ட காணொலி வாயிலான ஆய்வுக் கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. எல்லையில் வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டு, அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/assam-mizoram-border-conflict-what-is-happening-in-border

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக