Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

சென்னை: `டார்கெட் மூதாட்டிகள்; ஆட்டோவில் கைவரிசை!' - பெண் கொள்ளையர்கள் சிக்கிய பின்னணி

சென்னையில் மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி, அவர்கள் அணிந்திருக்கும் தங்க செயின்களை ஆட்டோவில் வரும் பெண்கள் சிலர் திருடுவதாகக் காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் குவிந்தன. யார் அந்தப் பெண்கள் என போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சாமிநாதன் அறிவுரைப்படி வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

கைதான பெண் கொள்ளையர்கள் மற்றும் தனிப்படை போலீஸார்

Also Read: `நம்ப வைப்பார்கள்; கைவரிசை காட்டுவார்கள்!' -சென்னையைப் பதறவைக்கும் `ஆட்டோ ராணிகள்'

புகார் கொடுத்தவர்களிடம் முதலில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது, ``ஆட்டோவில் வரும் பெண்கள்தான் கவனத்தை திசைதிருப்பி தங்கச் செயினை பறித்துவிட்டார்கள்'' என்று நகைகளை இழந்த மூதாட்டிகள், கண்ணீர்மல்கத் தெரிவித்தனர். அதனால், சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சுடிதார் மற்றும் சேலை அணிந்த பெண்கள் ஆட்டோவில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஆட்டோவின் பதிவு நம்பர் அடிப்படையில் டிரைவரிடம் போலீஸார் விசாரித்தனர். அந்தப் பெண்கள் குறித்து டிரைவருக்கு எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து தனிப்படை போலீஸார், சென்னையிலுள்ள முக்கியப் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் காலை முதல் இரவு வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். தனிப்படையிலுள்ள ஒவ்வொரு போலீஸாரின் செல்போனிலும் சம்பந்தப்பட்ட பெண்களின் சிசிடிவியிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன. அவற்றைவைத்து போலீஸார் கண்காணித்தபோது நான்கு பெண்கள் திருவொற்றியூர் டோல்கேட் ஆட்டோவிலிருந்து இறங்கி வருவதை போலீஸார் பார்த்தனர். உடனடியாக அவர்களைப் பிடித்த போலீஸார் விசாரணை செய்ததில், அவர்கள்தான் மூதாட்டிகளிடம் தங்கச் செயின்களைப் பறித்தது தெரியவந்தது.

சிசிடிவியில் சிக்கிய பெண்கள்

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த ராணி, ராஜாமணி, திலகா, மரியா ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின்படி இசக்கியம்மாள், உஷா, லட்சுமி ஆகிய மூன்று பெண்களை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் மூலம் வரும் இந்தப் பெண்கள், சென்னையில் சில மாதங்கள் தங்கியிருப்பார்கள். பின்னர் காலையிலேயே வேலைக்குச் செல்வதைப்போல டிப்டாப்பாக புறப்பட்டு வருவார்கள். ஏழு பெண்களும், ராணி தலைமையில் ஒரு குழுவாகவும், இசக்கியம்மாள் தலைமையில் இன்னொரு குழுவாகவும் பிரிந்துகொள்வார்கள். ஆட்டோவில் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல வேண்டும் என ஏறும் இந்தப் பெண்களில் ஒருவர் ஆட்டோ டிரைவரின் இருக்கையில் அமர்ந்துகொள்வார். மற்றவர்கள் பின்னாலுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பார்கள்.

கைதான ஆட்டோ பெண் கொள்ளையர்கள்

ஆட்டோ டிரைவரின் இருக்கையில் அமர்ந்திருக்கும் பெண், டிரைவரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேசிக்கொண்டே வருவார். அதனால் டிரைவர், பின்னால் என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ள மாட்டார். அடுத்து, ஆட்டோவில் செல்லும்போது பஸ் நிறுத்தங்களில் நகைகளை அணிந்துகொண்டு காத்திருக்கும் மூதாட்டிகளைப் பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தச் சொல்வார்கள். பிறகு ஆட்டோவிலிருந்து இறங்கிச் சென்று, மூதாட்டியிடம் நைசாக பெண் ஒருவர் பேச்சுக் கொடுப்பார்.

பிறகு இந்த வயதான காலத்தில் பஸ்ஸில் சென்று ஏன் சிரமப்படுகிறீர்கள், நாங்களும் அந்த வழியாகத்தான் செல்கிறோம் என அன்பாகப் பேசி, மூதாட்டியை ஆட்டோவில் அழைத்துச் செல்வார்கள். அப்போது பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களில் ஒருவர் மூதாட்டியிடம் நலம் விசாரிப்பதுபோல அவரின் கவனத்தை திசைதிருப்புவார். அந்தச் சமயத்தில் இன்னொரு பெண், மூதாட்டி அணிந்திருக்கும் தங்கச் செயினை கழற்றுவார். அதன் பிறகு மூதாட்டி கூறிய இடத்தில் அவரை இறக்கிவிட்டுவிட்டு, அந்தப் பெண்கள் அடுத்த ஸ்டாப்பில் ஆட்டோவிலிருந்து இறங்கிவிடுவார்கள்.

Also Read: `உதவி கேட்டு நடித்த மூதாட்டி; காத்திருந்த ஆட்டோ ராணிகள்!' -கொடுங்கையூர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

இந்த ஸ்டைலில் ஏராளமான மூதாட்டிகளிடம் இந்தப் பெண்கள் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இந்தக் கும்பலிடமிருந்து 200 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆட்டோவிலேயே சுற்றி தங்க நகைகளைப் பறிக்கும் இந்தப் பெண் கொள்ளையர்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இந்த முறைதான் ஒரே நேரத்தில் ஏழு பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்" என்றனர்.

சென்னையில் சிக்கிய இந்தப் பெண்களிடமிருந்து நகைகளை மீட்ட தகவல் கிடைத்ததும் தாலி செயின், தங்க செயின்களை இழந்த மூதாட்டிகள் திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், தனிப்படை போலீஸாரை `நீங்க நல்லா இருக்கணும்...’ என வாழ்த்தினர். நீதிமன்றத்தின் மூலம் தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

`சென்னையில் தனியாகச் செல்லும் மூதாட்டிகள், இது போன்ற பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும்’ என்கிறார்கள் போலீஸார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-7-women-gang-over-chain-snatching

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக