Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

`தமிழகத்தில் பா.ஜ.க வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது!’ - திருமாவளவன் எம்.பி

மனுநூல் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசிய கருத்துக்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிதம்பரத்தில் இன்று திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார் நடிகை குஷ்பு. அதற்கு தடை விதித்த காவல்துறை நடிகை குஷ்புவை அதிரடியாகக் கைது செய்தது.

இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்,``மருத்துவக் கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு இந்த ஆண்டு 50% வழங்க வேண்டும் என தமிழக அரசு தொடுத்த வழக்கில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இட ஒதுக்கீடு

இந்த இட ஒதுக்கீடு மறுப்பால் ஓ.பி.சி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோகும் என இந்த ஆண்டே மருத்துவக் கல்வியில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு தர மத்திய அரசை வலியுறுத்தி, நாளை 28-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஓ.பி.சி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் பறிபோவதைப் பற்றி கவலைப்படாத சில தலைவர்கள் சாதி, மோதல்களை உருவாக்க திட்டமிடுகின்றனர். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் உள்பட பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். பெண்களைப் பற்றி பா.ஜ.க-வினர் தொடர்ந்து தவறாகக் கூறி வருகின்றனர். ஊடகத்தில் பணியாற்றும் பெண்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் அறுவெறுப்பாகப் பேசினார். இவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், நான் பேசியதைத் திரித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் என் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்திருக்கிறது. எனது பேச்சைத் திரித்து, வன்முறையைத் தூண்டி பொய்ப் புகார் அளித்த பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். மனுநூல் குறித்து மகளிரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்ய இருக்கிறோம்.

Also Read: புதுச்சேரி: `7.5% உள்ஒதுக்கீடு தேவைப்படும் ஒன்றுதான்' - பா.ஜ.க அண்ணாமலை

அது, `மகளிர் விழிப்புணர்வு மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் நடக்கும். தமிழகம் முழுக்க கிராம அளவிலும் இந்த பரப்புரை நடக்கும். இன்றைய அவலங்களுக்கு மனுநூல் எந்த அளவு காரணமாக இருக்கிறது என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்துவோம். மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-is-trying-to-incite-violence-in-tamil-nadu-alleges-thirumavalavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக