Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

ஸ்பெஷல் டி.ஜி.பியாக ராஜேஷ் தாஸ் நியமனம்... தி.மு.க கொதிப்பது ஏன்?

தமிழகக் காவல்துறையில் ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் நியமிக்கப்பட்டுள்ள சம்பவம், பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ` அ.தி.மு.க-வில் உள்ளதுபோல காவல்துறையிலும் இரட்டைத் தலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது தேவையற்ற குழப்பத்தில்தான் முடியும்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

பீலா ராஜேஷ், ராஜேஷ் தாஸ் தம்பதிகள்

காவல்துறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவை ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றார். அவருக்கு, `சட்டம்-ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி' என்ற புதிய பதவி ஒதுக்கப்பட்டது. ஏற்கெனவே, சட்டம் ஒழுங்கு பொறுப்பை டி.ஜி.பி திரிபாதி கவனித்து வரும் நிலையில், இந்தப் புதிய நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டிய தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன். ` கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸுக்கு பதவி உயர்வு அளித்து, சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக முதல்வர் பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் `பிரகாஷ் சிங்' வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும். தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யாக திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read: நெல்லை: `தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரமா?’ - டி.ஜி.பி திரிபாதி பதில்

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியைச் சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும். அரசியல்ரீதியான அழுத்தங்கள், சட்டவிரோத உத்தரவுகள் பிறப்பிப்பதைத் தவிர்க்கவே, தேசிய போலீஸ் கமிஷன் பரிந்துரைத்து, பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம், `சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.க்கு இரு வருடங்கள் பதவிக் காலம்' என்று வரையறுத்தது.

தனக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக, உலக அளவில் புகழ் பெற்ற தமிழகக் காவல்துறைக்கு, குறிப்பாக சட்டம், ஒழுங்குப் பணிகளைக் கண்காணிக்க இரு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டில் கொலைகள் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

துரைமுருகன்

தமிழகக் காவல்துறையைச் சீரழிக்கும் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. ராஜேஷ் தாஸ் என்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுப்பது தவறில்லை. அவருக்கு வேறு பதவிகள் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால், அவரை ஏற்கனவே இருக்கும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-க்குப் போட்டியாக நியமிப்பதும், அதுவும் அவரது அறைக்கு எதிரே ஒரு ரூமில் அமர்த்தி வைப்பதும் முதல்வருக்கு அழகல்ல. இரட்டைத் தலைமையால் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி. அலுவலகத்திலும் அரங்கேறட்டும். இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்' எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Also Read: நெல்லை: `தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரமா?’ - டி.ஜி.பி திரிபாதி பதில்

இதுகுறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். `` சிறப்பு டி.ஜி.பி நியமனத்தில் எந்தவித உள்நோக்கங்களும் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார். அப்போது, ஒரு முதல்வர் போதும் என ஸ்டாலின் கூறியிருக்கலாமே. காவல்துறையின் நிர்வாகத்தில் கூடுதலாக ஒருவர் வேண்டும் என்பதற்காகவே இந்த நியமனம் நடந்தது. கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் உள்ளனர். எனவே, இதில் குறைகளைக் காண வேண்டிய அவசியமில்லை.

தற்போது சிறப்பு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் தாஸுக்கும் ஸ்டாலின் தரப்புக்கும் இடையில் ஏதோ பிரச்னை உள்ளது. அதனால்தான் உள்நோக்கத்தோடு கருத்துகளை வெளியிடுகிறார்கள். காவல்துறையில் தி.மு.க தரப்புக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுகுறித்து ஒருமுறை பேசிய அம்மாவும், `இங்கு இருந்துகொண்டே தி.மு.க-வுக்கு வேலை பார்க்கிறார்கள்' என்று விமர்சித்தார். தங்களுக்குப் பிடிக்காத போலீஸ் அதிகாரி என்பதால் ராஜேஷ் தாஸ் நியமனத்துக்கு தி.மு.க எதிர்ப்பு காட்டுகிறது" என்றார்.

பெங்களூரு புகழேந்தி

அ.தி.மு.க-வின் விமர்சனம் குறித்து, தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். `` பிரகாஷ் சிங் பாதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் 7 கட்டளைகளை வகுத்துள்ளது. ஒரு டி.ஜி.பி என்றால் எப்படி நியமிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தேர்தல் நேரங்களில் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு கொடுக்கின்றனர். `அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது. எப்போது தான் மாற்றப்படுவோம் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கக் கூடாது' எனக் கூறிவிட்டு, `டி.ஜி.பி-யாக நியமிக்கப்படுகிறவர்கள், 2 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

பிரகாஷ் சிங் பாதல் வழக்கின் அடிப்படையில் திரிபாதிக்கு ஜூன் 2021 வரையில் பதவிக்காலம் உள்ளது. துரைமுருகன் சொன்னதுபோல, இரட்டைத் தலைமை என்பதுபோல இரட்டை டி.ஜி.பி-க்களைக் கொண்டு வந்துள்ளனர். காவல்துறை இயக்குநர்தான் அனைவருக்குமான தலைமை அதிகாரி. அவரிடம்தான் மற்றவர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும். தற்போது ஸ்பெஷல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் தாஸ், திரிபாதிக்கு அடுத்து நியமிக்கப்பட்டுள்ளாரா.. இல்லை இவருக்கு எனத் தனியாக சூப்பர் பவர் உள்ளதா என்பதையெல்லாம் அரசு தெளிவுபடுத்தவில்லை.

இதனால், காவல்துறையில் குரூப்பிசம் தொடங்கிவிடும். இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. அதற்காக ராஜேஷ் தாஸைக் கொண்டு வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் அரங்கேறிய ராகேஷ் அஸ்தானா விவகாரம் போலவே, தமிழக காவல்துறையிலும் நடக்கிறது. இதனால், ஏற்கெனவே மோசமாக உள்ள சட்டம் - ஒழுங்கு இன்னும் மோசமடையே வாய்ப்புள்ளது.

வழக்கறிஞர் கண்ணதாசன்

மேலும், துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு சார்ந்த பதவி கிடையாது. அது ஒரு அமைச்சர் பதவி அவ்வளவுதான். அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது. அதனால் அதைப் பற்றி அ.தி.மு.க-வினர் பேசுவது ஏற்புடையதல்ல. இவர்கள் கட்சி அமைப்பைப் போலவே காவல்துறையையும் கொண்டு வர நினைப்பதுதான் ஆபத்தானது. அதைத்தான் பொதுச் செயலாளர் துரைமுருகன் சுட்டிக் காட்டினார்" என்றார் விரிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/controversy-irks-rajesh-das-appointed-as-special-dgp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக