Ad

புதன், 21 அக்டோபர், 2020

`கரைஞ்சது நம்பிக்கை... கை கொடுத்த விகடன் வாசகர்கள்!' - உதவியால் நெகிழும் அரியலூர் மருத்துவ மாணவி

அரியலூர் அருகே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி கட்டணம் கட்ட முடியாததால் படிப்பைத் தொடர முடியாமல் தவித்தது குறித்து விகடனில் எழுதியிருந்தோம். வாசகர்கள் பலர் மனம் கசிந்து அந்த ஏழை மாணவிக்கு உதவியதில், தற்போது அவர் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதைச் சாத்தியமாக்கிய விகடனுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மருத்துவ மாணவி பத்மப்பிரியா

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மப்பிரியா. கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சித்த மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் அப்பா குணசேகரன் மாற்றுத்திறனாளி. அம்மா காந்திமதி விவசாயக் கூலிவேலை செய்கிறார். இந்த வருமானத்தில்தான் குடும்பம் நகர்கிறது.

வீட்டில் மூத்த பிள்ளையான தன்னை நம்பியே குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதை அமையப்போகிறது என்பதை உணர்ந்து நன்றாகப் படித்த பத்மப்பிரியா பன்னிரண்டாம் வகுப்பில் 1,114 மதிப்பெண்கள் எடுத்தார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சித்த மருத்துவம் படிப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்தது.

குடும்பத்தினருடன்

இருந்தாலும், குடும்பத்தின் பொருளாதார சூல்நிலை மருத்துவம் படிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி பத்மப்பிரியாவை கலங்கச்செய்தது. அவர் அம்மா காந்திமதி, 'என்னால முடிஞ்ச அளவு வேலைசெஞ்சு உன்னை படிக்க வைக்கிறேன், நாலு பேருகிட்ட உதவி கேட்கலாம் நீ கவலைப்படாம படிக்கிறதை பாரு' என நம்பிக்கை கொடுத்து கல்லூரியில் சேர்த்தார்.

ஈரமனம் படைத்தவர்கள் செய்த உதவியால், கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவிலும் கஷ்டப்பட்டு மூன்று ஆண்டுகள் படிப்பை கடந்துவிட்டார் பத்மப்பிரியா. ஆனால், கொரோனா முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவரால் நான்காம் ஆண்டுக்கான கல்லூரிக் கட்டணத்தை கட்ட முடியவில்லை. உதவி கேட்டு அலைந்து திரிந்த காந்திமதியின் கால்கள் தேய்ந்ததே ஒழிய, வழி எதுவும் பிறக்கவில்லை.

பேங்க் ஸ்டேட்மெண்ட்

இந்நிலையில் பத்மப்பிரியாவிற்கு, எப்படியும் படிப்பை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை கரைந்துகொண்டே வந்தது. ஒருகட்டத்தில் வழிகள் எதுவும் கிடைக்காததால் கண்ணீருடன் வீட்டிலேயே முடங்கினார். அவருடைய நிலை குறித்து, 'படிப்பை முடிப்பேன்ங்கிற நம்பிக்கை கரைஞ்சுகிட்டே இருக்கு!' - பீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் மருத்துவ மாணவி' என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலர், பத்மப்பிரியாவின் நிலையை எண்ணி வருந்தியதுடன், அவருக்கு உதவிக்கரம் நீட்டினர். பலர் தங்களால் முடிந்த பணத்தை பத்மப்பிரியாவின் வங்கிக் கணக்கில் செலுத்தி உதவினர். மொத்தம் 7,89,207 ரூபாய் பத்மப்பிரியாவுக்கு கிடைத்தது.

குடிசையில் முடங்கிக்கிடந்த பத்மப்பிரியாவுக்கு இது புது நம்பிக்கையைப் பாய்ச்சியது. உடனடியாகக் கல்லூரியில் கட்டணத்தை கட்டி படிப்பை தொடர ஆரம்பித்தார். ''என் நிலையைப் பற்றி செய்தி வெளியிட்டு எனக்கு இந்தப் பெரிய உதவியைப் பெற்றுத் தந்த விகடனுக்கு நான் ஆயுசு முழுக்க நன்றிக்கடன்பட்டிருக்கேன்'' என நெகிழ்கிறார் பத்மப்பிரியா.

''படிச்சு ஆளாகி குடும்பத்தை கரைசேர்க்கணும்ங்கிற கனவு ஒரு பக்கம், பீஸ் கட்ட முடியாம மருத்துவப் படிப்பை தொடர முடியாத நிதர்சனம் ஒரு பக்கம். மூன்றாம் ஆண்டு படிப்புக்கான பீஸை முழுமையா செலுத்தாமல் இருந்த நிலையில, நான்காம் ஆண்டுக்கான பீஸும் சேர்ந்துடுச்சு.

மருத்துவ மாணவி பத்மப்பிரியா

என் படிப்பை முடிக்க ரூ. 6 லட்சத்திற்கு மேல செலவாகும் என்ற நிலை. படிப்பை முடிச்சு கரை சேர்வேன் என்ற நம்பிக்கை கிட்டத்தட்ட என் கையைவிட்டுப் போயிடுச்சு. அழுது அழுது நான் கண்ணெல்லாம் வீங்கிக் கிடந்தப்போ தான், என் நிலை பற்றி விகடன்ல எழுதுனீங்க. அதை படிச்சிட்டு, முகம் தெரியாத பலர் என் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உதவினாங்க.

மொத்தம் ரூபாய் 7,89,207 கிடைச்சது. முதல் வேலையா காலேஜ் ஃபீஸை கட்டிட்டு, படிப்பை தொடர ஆரம்பிச்சேன். கரைஞ்சுபோன என் நம்பிக்கையை விகடன் கைகொடுத்து உயிர்ப்பிச்சிருக்கு. இனி எந்தக் கவலையும் இல்லாம மருத்துவப் படிப்பை முடிப்பேன். அம்மா, அப்பா முகத்துல இப்பதான் நிம்மதியை பார்க்க முடியுது. இதுக்கெல்லாம் காரணம் விகடன்தான்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/lifestyle/vikatan-readers-helped-ariyalur-medical-student-to-continue-her-studies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக