Ad

சனி, 17 அக்டோபர், 2020

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது ஏன்?

ஒவ்வோர் ஆண்டும் கங்கை, யமுனை,கோதாவரி உள்ளிட்ட புனித நதிகள் தங்களிடம் சேர்ந்திருக்கும் பாவங்கள் நீங்க ஐப்பசி மாத அமாவாசையன்று தேவதை ரூபமாக வந்து காவிரியில் நீராடிப் போக்கிக்கொள்கின்றன என்கின்றன புராண இதிகாசங்கள்.

காவிரி

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். மேலும் இந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம்’ என்கின்றன ஞான நூல்கள்.

கர்நாடகாவின் குடகு மலையிலிருந்து உற்பத்தியாகி, தமிழ்நாட்டின் பூம்புகாரில் வங்கக் கடலோடு கலக்கும்வரை, இப்புண்ணிய நதிக்கரையில் மூன்று இடங்களில் மிகவும் விசேஷமான தீர்த்தக்கட்டங்கள் உள்ளன.

அதில் முதலாவது திருப்பராய்த்துறை காவிரிப் படித்துறை,

இரண்டாவது கும்பகோணம் காவிரித் தீர்த்தக்கட்டம்,

மூன்றாவது மயிலாடுதுறை துலாக்கட்டமாகும்.

ஐப்பசி முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறையிலும் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் மக்கள் நீராடிப் போக்கிக்கொண்ட பாவங்கள் நீங்க, துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன என்பது ஐதிகம்.'தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும்,அஞ்ஞானத்தையும் போக்கி, சகல சௌபாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி. துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்துவிடும். அழகு, ஆயுள், உடல்நலம் வளம் பெறும்" என்கிறது 'காவிரி புஜங்கம்' என்னும் நூல்.

காவிரி

துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்று சாஸ்திரம் சொல்லும் அதே வேளையில், இயலாத நிலையில் ‘கடைமுகம்’ என்று சொல்லப்படும் ஐப்பசி 30 - ம் தேதி நீராடி பலன் பெறலாம். அன்றும் நீராட முடியாதவர்கள், ‘முடவன் முழுக்கு’ என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும்புனிதம் பெறலாம்' என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

எனவே காவிரியில் நீராடுவோம். நலம் பெறுவோம்.



source https://www.vikatan.com/spiritual/gods/importance-of-bathing-in-cauvery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக