Ad

சனி, 17 அக்டோபர், 2020

கேரளா: பிரியாணி விற்ற திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை! - உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளங்கள்

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் திருநங்கை ஸஜனா ஷஜி மற்றும் அவரது நண்பர்கள் சாலை ஓரத்தில் பிரியாணி பொட்டலம் விற்பனை செய்து வந்துள்ளனர். ஒரு பிரியாணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சிலர், கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிலர், ஸஜனா மற்றும் அவரது தோழர்களிடம் பிரச்னை செய்திருக்கிறார்கள். இதுபற்றி காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஸஜனா தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ பதிவு செய்தார்.

அதில் ஸஜனா கூறுகையில், ``பிரியாணி வியாபாரம் தொடங்கியபோது நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால், இப்போது மொத்த பிரியாணியும் விக்காம திரும்பக் கொண்டு வருகிறேன். கொஞ்ச நாளா ஆப்போசிட் பார்ட்டிகள் எங்களைப் பயங்கரமாக டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் வியாபாரம் செய்ய சம்மதிக்க மாட்டேங்குறாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்தால், அவங்க எடுக்கல. என்ன செய்யறதுன்னே தெரியல. கையில் இருந்த காசுல இந்த பிரியாணிக் கடையை சின்ன அளவுல தொடங்கினோம்.

ஸஜனாவின் சாலை ஓர பிரியாணிக் கடை

நல்லாத்தான் போயிட்டு இருந்தது. இப்ப இவங்க பிரச்னை செய்ததுனால எல்லா பிரியாணி பொட்டலமும் விக்காம இருக்குது. நான் யார் கிட்டே போய் சொல்லுவேன்? எங்களுக்கு யாரும் ஆதரவா இல்ல. சமூகத்தில அந்தஸ்தா ஒரு வேலை செய்து ஜீவிக்கணும்னு நினைக்கிறோம். ராத்திரி நேரத்துல தெருவிலயும், ரயில்லயும் பிச்சை எடுக்கும்போது, நீங்க வேலை செய்து பிழைக்கக்கூடாதான்னு நீங்க எல்லாம் கேட்பீங்கதானே? ஆனா இப்ப நாங்க வேலை செய்து பிழைக்க நீங்க சம்மதிக்காம இருந்தா நாங்க என்ன பண்ணுவோம்? போலீஸ் ஸ்டேஷனுல ரெண்டு நாளா கம்ப்ளெண்ட் கொடுத்தோம். ஆனா அவங்க அத கண்டுக்கல.

Also Read: திருச்சி: பாலியல் தொல்லை; மிரட்டல்! - காவலர் பயிற்சிப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

ஃபுட் இன்ஸ்பெக்டர்னு சொல்லிட்டு சிலர் வந்து எங்கள பயமுறுத்தினாங்க. நாங்க ஃபுட் சேப்டி லைசன்ஸ் எடுத்திட்டாக்கும், இந்த வியாபாரத்துல இறங்கினோம். ஆனாலும் எங்கள ஜீவிக்க விடமாட்டேங்கிறாங்க. எதிர் கோஷ்டியில உள்ளவங்க எங்க வண்டியின் ரெண்டு பக்கமும் நின்னுட்டு எங்கள பரிகாசம் பண்ணுறாங்க. நாங்க நாலைஞ்சு திருநங்கைகள்தான் இருக்கிறோம். யாருகிட்ட சொல்லுவோம்?" என புலம்பி இருந்தார். இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா, ஸஜனாவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

இதுகுறித்து கே.கே. சைலஜா வெளியிட்ட அறிக்கையில், ``ஸஜனாவுக்கு நடந்த விஷயங்களை கேள்விப்பட்டேன். அவரை போனில் அழைத்து பேசினேன். தேவையான உதவியும், பாதுகாப்பும் வழங்குவதாக உறுதி கூறினேன். திருநங்கைகள் ஆண், பெணுக்கு சமமான குடிமக்கள்தான். இந்த அரசு திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கியது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஸஜனா மற்றும் அவரது நண்பர்களையும் அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸஜனா மற்றும் அவரது நண்பர்கள் சொந்தமாக தொழில்செய்து சமூகத்தில் மரியாதையுடன் வாழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் சிலர் ஸஜனாவிற்கு பண உதவி செய்துள்ளனர். சிலர் அவர் மீண்டும் சொந்தமாக தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். உதவியால் நெகிழ்ந்த ஸஜனா நல்ல உள்ளங்களுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/india/kerala-transgender-gets-help-after-facebook-video-gone-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக