Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

`பா.ம.க-வை இழுக்க தலைமை கொடுத்த அசைன்மென்ட்?’ - துரைமுருகனின் ஒருமைப் பேச்சு ரகசியம்

வேலூர், காட்பாடியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், ``தேர்தல் காலத்தில் `சீட்’ பத்தலை, கேட்ட தொகுதி கொடுக்கலை போன்ற காரணங்களால் தி.மு.க கூட்டணியில் இருக்கும் நேசக் கட்சிகள் வெளியேப் போகலாம். வேறு கூட்டணியிலுள்ள கட்சிகளும் எங்களுடன் வந்து சேரலாம். அப்போதுதான் எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும்’’ என்றார். துரைமுருகன் ஒருமையில் பேசிய இந்த கருத்து, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சித் தலைவர்களும், `தி.மு.க-வுக்கு நாங்கள் அடிமையில்லை’ என்கிற தொனியில் பதிலடி கொடுத்தனர்.

ராமதாஸ் - அன்புமணி

``பா.ம.க-வை கூட்டணிக்குள் இழுப்பதற்காகவே துரைமுருகன் இப்படி பேசிவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தல், தி.மு.க-வுக்கு மிக சவாலானதாக இருக்கும். பா.ம.க இருந்தால், ஆட்சி கட்டிலில் எளிதாக அமர்ந்துவிடலாம். பா.ம.க-வை இழுக்க வேண்டுமென்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். பா.ம.க வந்துவிட்டால், காங்கிரஸ் கட்சியின் `சீட்’ பேரத்தையும் குறைத்துவிடலாம் என்று தி.மு.க தலைமை கணக்குப் போட்டிருக்கிறது.

``தலைமை ஆட்டுவிக்க துரைமுருகனும், `அவன், இவன்’ என்று கூட்டணித் தலைவர்களைப் பேசியுள்ளார் என்கிறார்கள். 60 ஆண்டுகால பழுத்த அரசியல்வாதியான துரைமுருகன் அரசியல் நாகரிகம் உணர்ந்து பேசவேண்டும்’’ என்று கூட்டணி கட்சிகள் கொந்தளிக்கத் தொடங்கின.

Also Read: மிஸ்டர் கழுகு: “ஒட்டுக்கேட்கிறாங்கப்பா!” - அலறும் துரைமுருகன்...

இந்த விவகாரம் கூட்டணிக்குள் விஸ்வரூபம் எடுக்க துரைமுருகன் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ``வாயில் ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால் எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான், அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக்கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன். நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

மாஸ்க் அணிந்தபடி துரைமுருகன்

யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்துகொள்வேன்’’ என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

``துரைமுருகனின் இந்த அறிக்கையிலும், அவரது நக்கலான பேச்சே வெளிப்பட்டிருந்தது. `சுயமரியாதை இயக்கம்’ என்று மார்த்தட்டிக்கொள்ளும் தி.மு.க, கூட்டணி கட்சிகளை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்கள் அமர்ந்த பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்துவிட்டோம் என்கிற மிதப்பில் துரைமுருகன் உள்ளார். `பதவி வரும்போது, பணி வரவேண்டும்’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை துரைமுருகன் நினைவில் வைத்துக்கொண்டால், அவருக்கு நல்லது’’ என்கிறார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.



source https://www.vikatan.com/news/politics/dmk-gs-durai-murugans-speech-irks-controversy-among-alliance-parties

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக